Friday, December 30, 2011
நீர்மை....
நீர்மை
[ முன் குறிப்பு: அன்வர் பாலசிங்கம் எழுதிய ‘வனமும் இனமும்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை ]
வூடு ரெண்டுபட்டுப் போச்சுன்னு ஒத்தவரில சொல்லிர ஏலாது.எல்லாத்தையும் சரி பண்ண ஒன்னரை மணி தேரம் பிடிக்கும் அம்புட்டு கலப்பு கலைச்சிருந்தான் ஆதவன்.வாணி சுளீருன்னு அவம் முதுவுல ஒன்னு போட்டதுதான் தாமசம்,அடிபட்டவலியோட மேசை மேலருந்த மீன் தொட்டியைத்தள்ளிவுட்டான். தொட்டி உடைஞ்சு நடுக்கூடமெல்லாம் தண்ணி சிந்திச்சு. வாணி திகைச்சுப் போய் நின்னா.இனி அடிச்சு புரோசன மில்லன்னு நெனச்சிருப்பா.இல் லேன்னா அடிச்சு சலிச்சுப் போயிருப்பா.இவனை சமானப்படுத்தி குளிக்க வச்சு,பள்ளிகூடத்துக்கு அனுப்பறது சிரமம். இன்னைக்கு லீவுன்னு கூட யோசிச்சிருக்கலாம். பாலசிங்கம் அவசரமாக எந்தி ரிச்சு துடிச்சுட்டிருந்த மீனை ஒரு குவளையில தண்ணி புடிச்சு அதுக் குள்ள வுட்டாரு.
பிரச்னை பெருசா ஒன்னுமில்ல அவன் பென்சிலைக் காணல. அதுக்குத்தான் இம்புட்டு ஆர்ப்பாட்டம். வாணியும், பாலசிங்கமும் மூச்சுக்காட்டாம இருந்தாவ. அதுவேற ஆதவனுக்கு கோவத்த கிளப்பிவுட்டுருச்சு. ஒருமூலைல போயி உக்காந்தாம், கைல கெடச்ச தலவாணியத் தூக்கிவுட்டெறிஞ்சாம். கேவிக்கேவி அழுதமானிக்கே ’’இந்த வூட்டுல நா எதவச்சாலும் காணாமப் போயிருது’ன்னான்.
ஆதவன் இதச்சொன்னதும் பாலசிங்கத்துக்கு வந்த சிரிப்பு இன்னமட்டும்ன்னு இல்ல. சத்தமா சிரிச்சாரு. வாணி எரிச்சலா யிட்ட்டா ஆதவனுக்கும் கூடக் கொஞ்சம் கோவம் வந்துருச்சு.’இப்ப என்னத்துக்கு சிரிக்கியோ’ன்னா வாணி. ’’இல்ல ஒரு சின்ன பென்சிலக் காணலங்கறதுக்கே வீட்ட அடிச்சுநொருக்கிப்போட் டானே நம்ம இனத்தையே மலையாளத்தானுவ களவாண்டு வச்சிருக்கா னுவளே அவனுவள என்ன செய்யுதது’’ன்னார் வாணிக்கு அவரு பேச்சுக்கால் ஒன்னும் புரியல. வாணி ஒரு பள்ளிகூடத்துல மூனாப்புபுள்ளயளூக்கு ரைம்ஸ் சொல்லித் தாற டீச்சரு. புள்ளய ளோட பழகிப் பழகி அவளும் என்ன சொன்னாலும் பேந்த்தப் பேந்த முழிக்கப் பழகிட்டா.
’’என்ன முழிக்கே ’’வனமும் இனமும்’’ன்னு ஒரு நாவல் எழுதறம்ல, அதோட மைய இழையே இதுதான. உனக்கு இப்படிச் சொன்னா புரியாது பள்ளிக்க்கூடத்துக்கு கெளம்புத வழியப்பாரு. நாவல் எழுதி முடிச்சதும் படிச்சுத் தெரிஞ்சுக்கோன்னு சொன்ன பாலசிங்கம் வரலாற ஆய்வு பண்ணுத மனுசன்.
பெரிய படிப்பும் கிடயாது,நெறைய எழுதுனதும் கிடயாது,தான் பாத்தது, கொண்டது, வாழ்ந்தது எல்லாத்தையும் சேத்துப் போட்டு ’கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’னு ஒரு நாவல எழுதிப் போட்டாரு..அதுலருந்த உண்மை சிலருக்குப் புடிச்சுது சிலருக்கு புடிக்கல. அவுகவுக திட்டியும், குட்டியும், தட்டிக்குடுத்து.. அவர ஒரு எழுத்தாளனா ஆக்கிப் போட்டாவ. இந்தா.. ரெண்டாவது நாவல எழுத பொறப்பட்டுட்டாரு.
அதிச்சநல்லூர் வகையறாக்களோட முதுமக்கள் தாழி சிறு முனஞ்சில கண்டெடுத்த நாள் அது. அங்கனபோன தொ.பரமசிவம் அய்யா ஒரு சுடுமண் கிண்ணத்த எடுத்துட்டுவந்து,’’இது எங்க முப்பாட்டன் பொழங்குன பாத்திர பண்டம் இன்னைக்கு இதுல தான் வெஞ்சனம் வச்சி சாப்பிடனும்’னு சொன்னாரு.அன்னைக்குத்தான் பாலசிங்கம் தொ.பாவை சந்திக்கப்போனாரு. சிறுதெய்வங்களப்பத்தி எழுதி எழுதி தொ.பா. அய்யாவே ஒருசிறுதெய்வம் மாதிரி ஆயிட்டாரோன்னு அவரப் பாக்கற எல்லாத்துக்கும் தோனும்.அப்படி இருப்பாரு. தெக்குபசார்ல அடச்சகடத் திண்ணையில அவரு உக்காந்திருக்கற அழகே, ஒரு சொள்ள மாடசாமி கணக்காத்தான் இருக்கும்
அப்படி ஒரு காபி குடிக்கற நேரத்துல தான் பாலசிங்கம் அங்கன போயி சேந்தாரு.’’அய்யா முதுவானப் பத்தி ஒரு நாவல் எழுதப்போறேம்.’’.ன்னு சொன்னாரு. உச்சி மோராத குறையா தொ.பா அய்யா கொண்டாடி மகிழ்ந்தாரு.
’’தமிழ்நாடு ஒருவந்தேறிப்பய நாடாயிப் போச்சுடா.. நம்ம தெய்வத்தைக் கண்டெடுக்குத மாறி, நம்ம மனுசனையும் கண்டெ டுக்கத்தான் வேண்டியதிருக்கு. முதுவான் தமிழன்டா..அவன் வரலாறை தொலக்கு’ன்னு சொன்னாரு.
மக்கா நாளு, முதுவான் காட்டுக்குக் கிளம்பிப்போனாரு பால சிங்கம்.மனசுக்குள்ள எம்.டி.வாசுதேவன் நாயருக்கு ஒரு நன்றிய சொல்லிகிட்டாரு.செம்மொழி தமிழா? தெலுங்கா? கன்னடமான்னு ஒரு குடுமிபுடி சண்டை வந்தப்பதான், வாசுதேவன் நாயர் ஒரு கேள்வியக்கேட்டாரு.புலையர்களுக்கு முன்னால இருந்த மலை யாளஆதிவாசி யாருன்னு கேட்டாரு அப்பத்தான் மலையாளிகளுக்கு நம்ம முன்னோர்கள் யாருங்கற கேள்வியே மண்டையில ஒறைக்க ஆரம்பிச்சது. செம்மொழின்னு நாமளும் கோதாவில இறங்கணும்னா நமக்கு ஒரு பாரம்பரிய அடையாளம் வேணும்னு நெனச்சாவ.. அப்ப கிடச்சவந்தான் முதுவான்.
மூணாறுல போயி பாலசிங்கம் இறங்கி முதுவான் காட்டுக்குபோவனும்னு சொன்னாரு.அங்கன ஒருசாயா கடையில நின்ன மனுஷன்.’’முதுவான் காடுன்னு சொன்னா யாருக்கும் தெரியாது அதுக்குப்பேரு இடைமலைக்குடி, ராசாமலைக்கும், வால்பாறை மலைக்கும் இடையில இருக்கற பள்ளத்தாக்கு அங்க போறதுக்கு ஒருபதினாறு கிலோமீட்டர் நடந்து போகணும்’’ என்றார். பாலசிங்கம் சிரிச்சாரு ‘ஏல எம் மூப்பாட்டனக் கண்டுபிடிக்க ஒரு நூறு வருசம் பொறத்தால போவப்போறேன். இந்த பதினாறுமயிலு ஒரு தொலவா’ன்னு நெனச்சுக்கிட்டாரு.
ராசாமலவரைக்கும் ஜீப்புல போறதுன்னு முடிவாச்சு.ஜீப்புக்கு என்னமோ பண்டுவம் பாக்கணும்னு டிரைவரு பூபதி எடுத்துட்டு போயிட்டான்.அந்நேரம் பாக்க ஒரு பெரியவர் அங்கன வந்தாரு. அவருக்கு ஒரு எம்பத்தஞ்சுவயசு இருக்கும். மலங்காடு வயசு ஏறஏற மனுசனுவள விளைஞ்ச தேக்கு கட்டையப் போல மாத் திருது.. எந்தப் புடிமானமுமில்லாம் பொறங்கைய கட்டிகிட்டு எறக்கத்துலருந்து மேல ஏறிவந்தாரு.மூச்சுவாங்குற பேச்சுக்கே எடமில்ல.நேரா வந்தவரு பாலசிங்கம் பக்கத்துல உக்காந்தாரு.
’’மோனே ஒரு சாயா’’ன்னு கடக்காரங்கிட்ட சொல்லிட்டு பாலசிங்கத்தை ஏற இறங்கப்பாத்தாரு. பாலசிங்கத்துக்கும் இந்த மனுசங்கிட்ட பேச்சக்குடுத்தம்னா ஒரு அம்பது வருசக் கதையையாவது சொல்லுவாருன்னு ஒரு நெனப்பு தோனிச்சு. பாலசிங்கம் மெல்ல பேச்சுக்குடுத்து, தான் எதுக்கு வந்திருக்கம்னு சொன்னாரு.
கையில இருந்த டீயை வேகுவேகுன்னு குடிச்சவரு. கிளாசை டங்குன்னு பெஞ்சு மேல வச்சிட்டு ’’முதுவான் தமிழன்னு நினக்கு ஆரடா பரஞ்சது..வல்லதும் பரஞ்சு பெஹளம் உண்டாக்கறது கேட்டோ இவிட ஒருபாடு ஆள்காரர் உண்டு சவட்டிக்களையும் ””அவரது பேச்சில் பாலசிங்கத்தை மிரட்டும் தொனி இருந்துது.பாலசிங்கம் நிதானமா இருந்தாரு.’’இங்க ஒரு முருகன் கோவில் இருக்கே அதுல கார்த்திகை மாசத்துல முதநாளு முதுவான்கள் மட்டும் வந்து சாமி கும்பிடறாங்களே அது யேன்?’’ மலையாளிகளுக்கு முருகன் சாமி உண்டா’ன்னு ஒரே ஒரு கேள்விதான் பாலசிங்கம் கேட்டாரு. பெரியவருக்கு பதில் சொல்லத் தெரியல.. பெரியவர் அமைதியாக இருந்தாரு.
பாலசிங்கம் ’’ரஹீம் பாய் உங்களுக்கே இந்த மூணாறு சொந்தம் கிடையாது.நீங்கள்லாம் பெரும்பாவூர்லருந்து வந்து குடியேறின முஸ்லீம்தான்.உங்களுக்கு முன்னால போடிமெட்டுலருந்து யாவாரம் பண்ணிட்டு இருந்தவரு கங்கணம் செட்டியார் கோவேரி கழுதையில சாமான்கள ஏத்திட்டு வந்து யாவாரம் பாத்தாங்க. அப்பத்தான் ஜாண்டேவிட் மன்றோ இங்க தேயிலத் தோட்டத்தை உருவாக்கினாரு. அதக்கணக்குப் பண்ணி நீங்க யாவாரம் பாக்க வரவும்தான் அவங்க இங்க யாவாரத்த நிறுத்துனாங்க தேயிலத் தோட்டத்துக்காக இந்தப் பூமிய விட்டுக்குடுத்தவங்க முதுவான் இனத்துக்காரங்கதான்’’அதனாலதான் இன்னைக்கும் இந்த மலைக் குப்பேரு கண்ணந்தேவன் மலைன்னு இருக்கு’’ தனக்குள்ல இருந்த வரலாற்றுல ஒருதுளியக் கிள்ளிப்போடவும் ரஹீம்பாய் அடங்கினாரு. இவங்கிட்ட பேரு சொன்னது தப்பாப் போச்சேன்னு நெனச்சாரு.
பாலசிங்கம் வயசுக்கு அவரு சொல்ற சேதி ரஹீம் பாய்க்கு ஆச்சரியமாஇருந்துது இருந்தபோதும் தான் ஒருமலையாளிங்கறத உட்டுக்குடுக்காம பேசனும்னு பாலசிங்கத்தை மடக்கப் பாத்தாரு.
’’இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?’’பாலசிங்கத்தை அப்படியே பஸ்ஸப்புடிச்சு ஊருக்குப் போக வைக்கற கேள்வியக் கேட்டு புட்டோம்ங்கற நெனப்புல தாடியத் தடவிகிட்டே பாலசிங்கத்தைப் பாத்தாரு ரஹீம் பாய்.
’’இடுக்கி டேம்ல ஒரு சில இருக்கே அது ஆரு சில? ஒரு முதுவானோட சிலை.இடுக்கி எங்க மண்ணுங்கறதுக்கு அந்தசிலை சாட்சி முதுவான் தமிழங்கறதுக்கு முருகன் சாட்சி’’.பாலசிங்கம் இதை சொல்லி முடிக்கவும் ஜீப் டிரைவர் பூபதி வந்து சேர்ந்தான்.
அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்த ரஹீம்பாயை பொருட்படுத்தாமல்..ஜீப்லஏறி உக்காந்தாரு பாலசிங்கம்.ஜீப்ப ஓட்டி கிட்டு வந்த பூபதி ’’அதென்னசார் மலையாளத்தான நம்ம ஆளுன்னு கூசாம அடிச்சுவுடுதிய.. எனக்கு போடிமெட்டு ஒரு பத்துவருசமா இங்கதான் தொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன். பாரஸ்டு வாட்சர் வேலை, செக்போஸ்ட்டு வேலையெல்லாம் முதுவானுங்கதான். இடமலக்குடிலருந்து வருவாங்க. ரெண்டொரு முதுவானுங்கல எனக்குத் தெரியும். மலையாளத்துலதான் கையெ ழுத்துப் போடுவாங்க’ன்னான்பூபதி.
’இல்லைய்யா மலையாளத்துல கையெழுத்துப் போட வச்சாங்க. அதுக்குன்னு ஒரு தனி அறிவொளி இயக்கமே நடத்து னாங்க’ன்னார் பாலசிங்கம்..
பூபதி அலுவுசமான ஒரு சேதியக் கேக்குற மாதிரி கேட்டுகிட்டு வந்தான். ’’ஒரு பதினஞ்சு வருசத்து முந்தி முதுவான் களை யாரும் கண்டுக்கிடல..மலையாளிகளுக்கு ஒரு பாரம்பரியம் வேணும்னுதான் அவங்கள தங்களோட பழங்குடியா அறிவிச்சு வேலை சலுகையெல்லாம் குடுத்தாங்க.’’ன்னாரு பாலசிங்கம். பூபதிக்கு பாலசிங்கம் சொன்ன வார்த்தையில அம்புட்டு நம்பிக்கை வரல.நாட்டுல சிலபேரு இப்படியும் இருப்பாங்கன்னு நெனச்சுகிட்டு பேசாம வண்டிய ஓட்டினான்.பாலசிங்கம் மலைய ரசிச்சுகிட்டே வந்தாரு.
’’ சின்னக்கானல் எஸ்டேட்டு இருக்கே அங்கனக்குள்ள ஒரு ரெசாட்கூட இருக்குமே’’ ன்னாரு பாலசிங்கம்.அவருக்கு ரெசாட் பேஎரெல்லாம் தெரியும் அவன பேச்சுக்குள்ள கொண்டு வரணும்னுதான் தெரியாத மாறி கேட்ட்டாரு.
‘’ஆமா சார் மகேந்திரா ரெசாட்டு பெரியபெரிய பணக்காரங்க வந்துபோறஎடம் நாகூட அங்கசவாரிக்குப் போயிருக்கேன்’னான்.. அதுக்கு எதுத்தாப்ல இருக்கற எடமெல்லாம் யாருக்கு இருக்கு. பூபதி தன் இயல்பாய் வண்டியை நிறுத்திவிட்டு ’’அட ஆமா சார் அம்புட்டு மதிப்பு உள்ள எடம் முதுவானுங்க கைலல்லா இருக்கு.எப்படி சார்..’’
ஒரு சின்ன நம்பிக்கை டிரைவருக்கு பாலசிங்கம் மீது வந்தது. ‘’முதுவான்கள் என்னைக்காவது ஒருநாள் நாங்க மலையாளிகள் இல்ல தமிழர்கள்னு சொல்லிரக்கூடான்னுதான் இம்புட்டு சலுகை’ன்னு பாலசிங்கம் சொல்லி முடிக்கவும் வாயடைச்சுப்போன பூபதி மெல்ல வண்டிய நவுத்துனான்.அதுக்குப் பொறவு ராசாமல வார வரைக்கும் ரெண்டுபேரும் பேசவேயில்ல.
ராசாமலைல துரைக்குட்டின்னு ஒருமுதுவான் பாலசிங்கத்த கூட்டிட்டுப் போவக் காத்திருந்தான். மூனுபேருமா ஒருடீக்கடையில டீயக்குடிச்சாவ. இன்னும் மூனுமல ஏறிஎறங்கனும் பொழுதோட போயி சேரமுடியுமான்னு பாலசிங்கத்துக்கு கவலயாயிப் போச்சு. முதுவான் ’’அதெல்லாம் ரெண்டு எட்டுவிரசலா எடுத்து வச்சா போயிரலாம் அய்யா’ன்னு சொன்னான். வழியில் பசித்தால் சாப்பிடுவதற்கென்று இரண்டு நேந்திரங்காய் அப்பத்தை வாங்கி வைத்துக் கொண்டார்கள்.’’நாலுகடி மூனுகுடி’என கணக்கு தீர்த்த பூபதி,’’சார் என் நம்பரத் தர்றேன் நீங்க போவும் போதும் என் வண்டியிலதான்வரணும்’னான்.பாலசிங்கம் சரின்னு சொன்னாரு.
’’சொல்றேன்னு தப்பா நெனக்காதீய சார்.இந்த மலங்காட்டவிட்டு எறங்குதவரைக்கும்முதுவானுங்க மலையாளியில்லன்னு சொல் லாதிய என்னமும் பண்ணி போடுவானுங்க’ன்னான்.
பாலசிங்கம் சிரித்தார். ’’தமிழ்நாட்டுக்குள்ள மலையாளிகள் வாரதுக்கு பதிமூனு வழி இருக்கு.அதுல பன்னெண்டு வழியில அவங்க ஊடுருவி தொழில் செய்துகிட்டு இருக்காங்க செங்கோட்டை வழியா மட்டும் வரல.ஏன்னா மலையாளிகளுக்கு அருவான்னா பயம். அதுனால தான் திருநெல்வேலியில அவங்க காலடி எடுத்து வைக்கல.. நா திருநெல்வேலிக்காரன்’’னார்.பூபதி சிரிச்சுகிட்டே கை குடுத்து வழியனுப்பி வச்சான். இப்படி ஒருகாட்டுப் பயணம் பாலசிங் கத்துக்கு புதுசுஇல்ல.ஆனா இது ஆளறவமற்ற காடு ராசா மலையில நடக்க ஆரம்பிச்சா இடமலக்குடி வரைக்கும் இடையில ஒரு ஊருகூட கிடையாது.
மனுச நடமாட்டமில்லாத காட்டுக்கு ஒருவாசனை இருக்கும் மண்ணும்,தண்ணியும் மலஞ்செடிகொடியும் சேந்து ஒருவாசம்வீசும் அத இன்ன வாசனன்னு சொல்ல ஏலாது. அப்படியொருவாசன அடிச்சுது. அந்தக் காட்ட வாசம் புடிச்சுகிட்டே போனாரு பாலசிங்கம்.செங்குத்தா இறங்குத பள்ளத்தாக்குல மட்டும் துரக்குட்டி முதுவான் கையப் புடிச்சுக் கிட்டாரு.
அந்தஇடமலக்காட்டுக்கு போற பாதை பகல் நேரத்துலயே ரொம்ப குளுரா இருந்திச்சு.இம்புட்டு மல தாண்டி முதுவான் எப்படி இந்தக்காட்டுக்குள்ள போனாம்ங்கற கேள்வி பாலசிங்கத் துக்கு வந்திச்சு. துரக்குட்டி முதுவாங்கிட்ட அதக்கேட்டாரு.ஒரு பேச்சுக்காலபோட்டுகிட்டே போனம்னா, நடை தோத்தாதேன்னும் நெனச்சாரு .துரக்குட்டி ஒரு காட்டோடைல இருக்க பாறமேல உக்காந்தாம்.’’ஆரும் சொந்தங் கொண்டாடாத மூணாறு மலதான் எங்க எடமா இருந்திச்சு.
ரெண்டாம் பல்லவ ராசாக்கமாரு தெக்க படையெடுத்து வந்தப்ப எங்கபொண்டுபுள்ளயள காப்பாத்திக்கறதுக்காகநாங்க கம்பம்மெட்டு வழியா பெரியாத்துக் கரையப்புடிச்சு பைனாவு வந்து அங்கன ருந்து இங்கன வந்து சேந்தோம்.அது ஆயிரத்த எண்னூத்தி அருவதாம் வருசம்.முதல்ல இந்தக் காட்ட இனங்கண்டு வந்து சேந்தது நாங்கதாம்’ன்னான்.
பாலசிங்கம் சிரிச்சாரு என்னமோ துரக்குட்டியே தலம ஏத்து கூட்டிகிட்டு வந்த மாறியும், இது ஏதோ முந்தாநேத்து நடந்த சம்பவம் மாறியும் சொன்னான் துரக்குட்டி..
’’இது பெரும்ஆனைக்காடா இருந்துதுய்யா...எங்க பெரிய முதுவாங்க வழிவழியா சொல்லுதகதையில எம்புட்டோ சொல்லு வாங்க’’ன்னான். தூரத்தில் வரையாடுங்க கூட்டமா தண்ணி குடிச்சுகிட்டு நின்னுச்சுங்க..துரக்குட்டிய பாத்ததும் துள்ளு போட்டு கிட்டு திரிஞ்சுதுங்க.
எம்புட்டு பாசமா பாக்குது பாருங்க..முதுவான் வாசனைக்கு ஒரு மிருகமும் அண்டாது.வேட்டையாடுற பழக்கம் இல்லைல்ல.. அதனால அச்சப்படவும் செய்யாது, அமயம் போடவும் செய்யாது’’ .என்றபடி நடக்கத் துவங்கினான்.
பாலசிங்கம் முதுவானுங்க ஒரு சைவப் பழங்குடின்னு நெனச்சுகிட்டே துரக்குட்டி பொறத்தால நடக்க ஆரம்பிச்ச்சாரு.இப்படியே ரெண்டு மலயக் கடந்துட்டாவ.. குளுரு உடம்ப ஈரமாக்கிச்சு இத்தனை குளுருலயும் முதுவானுங்க காலையில நாலுநாலரை மணிக்கெல்லாம் பதுனாறுமயிலு கால்நடையா நடந்து மூணா றுக்கு வாரது, பாலசிங்கத்துக்கு ஆச்சரியமா இருந்துது. நமக்கு பகல் குளுரையே தாங்க முடியலயே ராமானமே எப்படிவந்து சேருதாவன்னு.. யோசிச்சாரு. அதுவுமில்லாம மூணாறுலருந்து முதுவானுங்க ஏன் இடைமல நாட்ட நோக்கி நகந்தாங்கன்னு அவருக்கு குழப்பமா இருந்திச்சு.
இந்த குழப்பத்துகெல்லாம் முதுவாங்ககுடிக்குப் போனதுக்குப் பொறவுதான் பாலசிங்கத்துக்கு வெடகிடச்சது. பொன்னப்ப முது வாந்தான். இப்ப இருக்கறதுலயே மூத்த முதுவான். அவருக்கு வயசு எம்பதுக்கும் மேல இருக்கும்ன்னு சத்தியம் பண்ணி சொன் னாக்கூட ஆரும் நம்பமாட்டாவ.திரட்டிஉருட்டி வச்ச மாறி அப்படி ஒரு தேகம் அவருக்கு.
பாலசிங்கம் வாரசேதி அங்க எல்லாருக்கும் தெரிஞ் சிருக்கு.பொண்டுகள எல்லாம் ஒரு குடுசைக்குள்ள வச்சுட் டுத்தான் பாலசிங்கத்தை உள்ளவர அனுமதிச்சாவ இப்பவும் முதுவான் குடிக்குள்ள அம்புட்டு சீக்கிரமா ஆரும் போயிர ஏலாது. ராத்திரி நிலா வெளிச்சத்துல வச்சு பொன்னப்ப முதுவான் பேச ஆரம்பிச்சாரு.
’’அய்யா முதுவான் ஆருகிட்டயும் சண்டைக்குப் போவாதவன் .அவன் மானத்தக் காக்க மலையேறினவன். காட்டைத் துலக் கறதும், அதவுட்டுக் குடுத்துட்டு வாரதும் தான் காலகாலமா முதுவானுக்கு இருக்க சாபக்கேடு.
மூனு ஆறும் சங்கமிக்கற அந்த எடத்த கண்டுபுடிச்சி அதுக்கு மூனாறுன்னு பேருவச்சதே முதுவாந்தான்யா..வெள்ளக்காரன் தேயிலத்தோட்டத்தை போடனும்னு வந்தப்போ அவனுக்கு உதவி செய்ய முதுவான் பயந்து போனாம். நம்ம இடத்துக்குள்ள இவன வுடுறதான்னு யோசிச்சான்.சண்டை போட்டுவிரட்டலாம். ஆனா தோத்துப் போயிட்டா,அடுத்தாப்ல பொண்ணுபுள்ளய மேலதான் கைய வப்பான்.அது மானக்கேடுன்னு முடிவு பண்ணி ராத்திரியோட ராத்திரியா மூணாரைக் காலிபண்ணிட்டு போற துன்னு முடிவெடுத்து மலை எறங்க ஆரம்பிச்சாங்க அப்படி வந்து சேந்த இடந்தான் இந்த எடமலக்குடி.அப்ப முணாத்துலருந்து இடுக்கிக்கு வார தண்ணிய கல்லப்போட்டு மட்டுப்படுத்துனது முதுவானுங்கதான்.
வெள்ளக்காரனுக்கு கொஞ்சம் நன்றி விசுவாசம் இருந்திச்சு.அந்தமலைக்கு ஒருமுதுவான் பேரை வச்சான். அய்யா அது கண்ணன்தேவன்மலை இல்லையா?கந்தன்தேவன்மலை.. காலப்போக்குல கந்தந்தான் கண்ணனா மாறிப்போச்சு’ன்னார் பொன்னப்ப முதுவான்.
முதுவான் பேசி முடிச்சதும் பாலசிங்கம் தனக்குத் தெரிந்த வரலாறை சொல்ல ஆரம்பிச்சாரு.
’’எக்குத்தப்பாத்தாம்யா இந்தமண்ணு நம்ம கையவிட்டு போயி ருச்சு. வெள்ளக்காரன் இக்ரிமெண்டு போடுதப்போ முதுவாங்க மூணாறுல இல்ல அதனால பூஞ்சார் அரசர்கிட்ட இக்ரிமெண்டு போட்டுட்டான்.அவன் இந்த நாட்டவுட்டு போறப்போ எல்லா எஸ்டேட்டையும் டாடாகைல குடுத்துட்டு போயிட்டான் .அதுக்குப் பொறவுதான் மூணாறுல மலையாளிகளோட எண்ணிக்கை அதிகமாயிருச்சு’’ன்னார்.
முதுவான் அமைதியா கேட்டுகிட்டு இருந்தாரு. ’’அய்யா நீங்க ஒன்னு பண்ணுங்க அடிமாலிக்குப் போங்க அங்க பூஞ்சார் இளவ ரசரை பாருங்க அவருநெறய சேதி சொல்லுவாரு’’ன்னாரு.
முத்து ரத்தினம் துரச்சி இப்படித்தான் முதுவானுங்கள்ல நெறையபேருக்கு பெயர் வச்சிருக்காவ..பாலசிங்கத்துக்கு முது வாங்க பேசுறது ஈழத்தமிழ் மாதிரி இருந்துது.
ஒரு பத்து நா அங்கணயே தங்கியிருந்து முதுவான்களோட வாழ்க்கை முறைய தெரிஞ்சுகிட்டு அடிமாலிக்கு கிளம்பினாரு பால சிங்கம். அங்க ஒரு அணுகுண்டோட காத்திருந்தார் பூஞ்சார் மன்னரோட வாரிசு விஜயகுமார்.
ஜீப்பக் கொண்டுவந்த பூபதி கூடவே வேலன்னு ஒருத்தர கூட்டிகிட்டு வந்தான். வேலனுக்கு பாலசிங்கத்த பாத்ததுல அம் புட்டு சந்தோசம். ‘’உங்களப்பத்தி பூபதி சொன்னான் சார். நல்லா எழுதுங்க’’ன்னான். தன் இயல்பாய் அவன் ஜீப் டயர்மேல் ஒரு காலத்தூக்கி வைச்சு கம்பியப்புடிச்சுட்டு பேசிக்கிட்டிருந்தது ஏதோ வட்டிவசூலுக்கு வந்தவன் பேசிட்டு நின்னமாறி இருந்திச்சு. கொஞ்சம் கரடுமுரடா இருந்தான்வேலன். ’’எஸ்டேட்ல வேல பாக் கறேன் சார்.இங்க என்ன பிரச்சனைன்னாலும் அவங்க ஒன்னும் செய்யமுடியாது.கீழஅடிமாலி வரைக்கும் நாமதான் இருக்கோம் . நம்ம தயவுஇல்லாம இங்க ஒருபய கதையும் செப்பெடுக்காதுண் ணே’ன்னு அவன்சொன்னது போறபோக்குல இடுக்கிமாவட்டத்த தமிழ்நாட்டோட சேத்துட்டுப் போயிருங்கண்ணேன்னு சொன்ன மாதிரி இருந்தது.
அவங்ககிட்டருந்து விடைபெற்று பஸ்ஸுல ஏறி உக்காந்தாரு பாலசிங்கம்.வேலன்சொல்லுதது.நெசந்தான்.மலையாளி தமிழன்னு என்ன பிரச்சனை வந்தாலும் இடுக்கிலயோ மூணாத்துலயோ அது பெருசா பாதிக்கறது இல்ல.காரணம் இங்க தமிழங்க அதிகம்.எலக்ஷன்லயே அவங்க ஜெயிக்க முடியாதுங்கறதுதான் நிலமையா இருக்கு.
முதுவான்களப்பத்தி ஒரு ஆய்வு பண்ணலாம்னு முடிவு எடுத்தப்பவே முதல்ல பாலசிங்கம் தேடுனது மூணாறு மக்களச் சுத்தி இருக்கற அரசியலத்தான்.
உடுமஞ்சோலை, தேவிகுளம், பீர் மேடு, கட்டப்பனை, இங்கல்லாம் ஒரு தமிழந்தான் தேர்தல்ல ஜெயிக்க முடியும்ங்கறதுதான் நெலமையா இருக்கு.ஒருசட்டமன்ற உறுப்பினரை தீர்மானிக்கற சக்தியா இருக்கறமக்கள்இரண்டாங்கட்ட குடிமக்களா இருக்கறது பாலசிங்கத்துக்கு ஆச்சர்யமா இருந்துது.
இடுக்கி மாவட்டத்துல ஒருஇருவது, இருவத்தஞ்சு தமிழன் பஞ்சாயத்து தலைவனா இன்னைய வரைக்கும் இருக்கான். .இப்ப டிப்பட்ட ஒருபூமி தமிழ்நாட்டோட இல்லாம போனதுல ஒளிஞ்சுக் கிட்டு இருக்கு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதுல இருக்கற அரசியல். இப்படியே பலதையும் யோசிச்சமானிக்கு அடிமாலிக்கு போயி சேந்தாரு பாலசிங்கம்.
அடிமாலிங்கறது வேற ஒன்னும் இல்ல அடிமலைங்கற வார்த்தையத்தான் அவுக அப்படி சொல்லுதாகன்னாரு பூஞ்சார் இளவரசர்..நான் ஒரு தமிழன்னு தன்னை அறிமுகப்படுத்திக் கிட்டாரு அவரு பேரு விஜயகுமார்ன்னு சொன்னாரு. உண்மை யிலயேஅவருபேரு சுந்தர்ராஜன் சுத்தமான மலையாளத்துல பேசி னாரு .பாலசிங்கத்துக்கு அவரு தமிழன்னு சொன்னத நம்பமுடி யல,
முதுவான் நம்ம இனம்ப்பாங்கற அவரோட உரிமை பாலசிங்கத்துக்கும் பிடிச்சிருந்தது.’’இப்படித்தான் ஒரு நா மூணாறு ஹைரேஞ்சுக்கு போயி நீங்கள்லாம் எங்கசாம்ராஜ்யத்துக்கு உள்ள வாழறவங்க. சீக்கிரமா இந்தமண்ணை நாம மீட்டு எடுப்போம்ன்னு சொல்லிட்டு வந்தேம் ஆமா..நான்தமிழன் இது எம் பூமின்னு ஒரு வழக்கு கேரளகோர்ட்டுல இருக்கு.. கடைசி வரைக்கும் போராடு வேன் சேட்டனுவள சும்மா உட மாட்டேன்’’னு அவரு சொன்னது இந்த வரலாற்று நாவலுக்கு ஒரு முக்கியமான ஆவணம்னு பாலசிங்கத்துக்கு தோனிச்சு.
மறுபடியும் மூணாறுக்கே திரும்பி வந்தாரு பாலசிங்கம். இடுக்கி கலக்ட்ரேட்லயும் மூணாறு தாலுகாவுலயும் தரவுகள எடுக்குதது அவ்வளவு சுலபமா இல்ல.ஆயிரத்தெட்டு கேள்விகள கேட்டு உசுரப் புடுங்கிட்டாவ.
ஒரு மூணுமாசம் மலையாளத்தான் கிட்ட மல்லுகட்டி எல்லாத் தரவுகளையும் தேடியெடுத்தாரு பால சிங்கம்.முதுவான் தமிழந்தான்னு நெஞ்சு நிமித்தி சொல்லலாம்ங்கற நம்பிக்கை வந்ததுல தெண்டி,பட்டின்னு அரசாங்க வேலயில இருக்கற மலையாளத்துக்காரன் திட்டுனது மனசுல நிக்கல.ஆனா மலையாளிங்க எல்லாரும் திட்டுனாங்கன்னு சொல்ல ஏலாது. எல்லா எனத்துக்குள்ளயும் சில மனுசங்க இருப்பாங்க.. ,அதுல சில மனுசனுக்குள்ள ஞாயமான மனசு இருக்கும் அப்படி ஞாயமான மனசு இருந்த மலையாளிகள்ல சிலபேரு பால சிங்கத்துக்கு உதவியா இருந்தாங்க.
ஒரு வழியா ஊரு வந்து சேந்து வனமும் இனமும்ங்கற பேருல கதைய எழுதஆரம்பிச்சாரு பாலசிங்கம் எழுத எழுத தமிழன் மேல இருக்க ஆத்தாமை பொங்கி வந்திச்சு. மண்ணு, மனுசன், தண்ணி மூனையும் பறி குடுத்துட்டு நிக்கற தமிழன நினச்சா பாவமா இருந்திச்சு. அதேசமயம் இன்னமும் தமிழன் மாபெரும்வீரன், போர்குணம் மிக்கவன்னு, பழம்பெருமை பேசிக் கைத்தட்டு வாங்கிட்டு திரியுத அரசியல்வாதிங்க மேல கோவம் வந்திச்சு.
அப்பத்தான் முல்லைபெரியாரு அணைய உடைக்கனும்னு கேரளாவுல பிரச்சனைய ஆரம்பிச்சு வச்சாவ. சர்தாம் நாம் ஒரு நல்ல சந்தர்பத்துலதான் இந்தக் கதைய எழுதுதோம்ன்னு நெனச்சுகிட்டாரு பாலசிங்கம். அடிக்காக, .துரத்தி உடுதாகன்னு தினம் ஒரு சேதியா வந்து சேந்திச்சு.
அங்க தமிழம் மேல ஒரு கொல வெறிய தூண்டுத வேலைய மலையாளத்து அரசியல்வாதிக செய்ய ஆரம்பிச்சாக..இங்க நாம் தனுஷோட கொலவெறி பாட்ட தூக்கிகிட்டு திரிஞ்சோம்.
டேம் நல்லாருக்கு இடிக்கப்படாதுன்னு அங்கொன்னும் இங்கொன்னுமா பேச்சுக்கால் ஆரம்பிச்சது.ஆனாலும் ஆரம்பிச்ச பொகச்சல் ரெண்டு பக்கமும் நிக்கல காணாக்கொறைக்கு டேம் 999ன்னு ஒருபடத்த வேற எடுத்துவுட்டாக. அது இன்னும் பத்திக்கிச்சு. அணை உடைஞ்சிரும் போலருக்கு, நாம எல்லாம் சாவப்போறம்ன்னு மலையாளிகளுக்கு பயம் வந்திச்சு. அவுகளை யும் குற சொல்ல ஏலாது. நம்மகிட்ட எவனாவது இப்படி ஒரு புளுகுமூட்டைய அவுத்துவுட்டா நாமளும் வேசடையாத் தான் கிளம்புவோம்.அப்படித்தான் கிளம்புனாவ இதுக்குள்ள ஒரு அரசி யல் கிடந்து வெளையாடுதுன்னு ஆருக்கும் புரியல..
தேயில தோட்டத்துக்கு வேலைக்குப் போன அப்பாவி சனங்கள மானபங்கப்படுத்தி அடிச்சு துரத்தியிருக்காவ. கைப் புள்ளயோட ஆனை காட்டு வழியா, ஓட்டமும் நடையுமா வந்த பொண்டுபுள்ளயள நெனச்சி எல்லாரும் கைசேதப்பட்டுக் கிட்டி ருக்க, ஆருக்கு வந்த விருந்தோன்னு வேடிக்கை பாத்துட்டு இருந்துது மத்திய சக்காரு.
வூடு ரெண்டுபட்டு போச்சுன்னு ஒத்த வார்த்தையில சொல்லிரயேலாது.எல்லாத்தையும் சரிபண்ண ரொம்ப காலமாவும். அம்புட்டு கலப்பு கலச்சி போட்டாவ..
இத யோசிச்சமானிக்கே ஆதவன் கலச்சுப் போட்ட வீட்டை ஒழுங்குபடுத்திட்டு இருந்தாரு பாலசிங்கம். அப்பத்தான் பக்கத்து வீட்டுப்பையன் மலையாளத்தான் கடைய அடிச்சி நொருக்கிப் போட்டாவன்னு வந்து சொன்னான். செத்த ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்னு மனசு கேக்காம போனாரு பாலசிங்கம்.
காலையில முத டீயை அந்த பாவா கடையிலதான் பாலசிங்கம் குடிப்பாரு.அந்த பாசம் மனச அறுத்துகிட்டு இருந்துது. பாலசிங்கம் போறதுக்குள்ள அங்க தகறாரு எல்லாம்முடிஞ்சி போயிருந்துது. கூடி நின்னவுகதான் கடைய நொறுக்குனவுகள சத்தம் போட்டு விரட்டியிருக்காவ. பெரிய சேதாரம் ஒன்னும் இல்ல.ரெண்டு பாட்டில ஒடச்சுப் போட்டுபோயிருக்காவ. அவ்வளவுதான். பாவாபையன் வகாபு தான் கடையில இருந்தான்
பாலசிங்கத்தைப் பாத்ததும் அங்க நடக்கற கலவரத்துக்கு நாங்க என்ன பண்ணுவோம்ன்னு கலங்குனான்.பாலசிங்கம் அவன் தோள ஆதரவா புடிச்சிகிட்டாரு.
இங்க உன்ன அடிச்சவனும் தமிழன், அவங்கிட்டருந்து உன்ன காப்பாத்தினவனும் தமிழன் ஆனா அங்க இப்படியில்ல. உங்களவிடஎங்களுக்கு நீர்மை ஜாஸ்தி.அதனாலதான் பெரிய பிரச்னை எதுவும் இல்லாம வாழ்ந்துகிட்டிருக்கிய..
தமிழன் எல்லாத்தையும் விட்டுக்குடுப்பான். ஆனா விட்டுக் குடுக்கற குணம் மட்டுமே தமிழன் குணம் இல்ல..புரிஞ்சுக்கங்கன் னார் பாலசிங்கம்.
புரிஞ்சுக்குவாங்கன்னு தான் பாலசிங்கத்துக்கு தோனிச்சு என்ன இருந்தாலும் படிச்சவங்க இல்லியா.?
புகைப்படம் : தேனி ஈஸ்வர்
.
Subscribe to:
Posts (Atom)