Friday, April 13, 2012
புலிப்பால் கறக்கும் எருமை மாடு
அந்த ஊருக்குப் புலிப்பால் கறக்கக்கூடிய ஒரு எருமை மாட்டை தானம் தருவதென்றும்,அந்த எருமை மாட்டைக் கொண்டு நாடு முழுவதும் புலிப்பால் சப்ளைசெய்வதென்றும் அவர்கள் திட்டமிட்டபோது யாரிடமும் அதுகுறித்து கலந்தாய்வுசெய்யவில்லை.காரணம் அப்போது அது நாகரீகத்தை வடிகட்டிய கிராமமாக இருந்தது.
அந்த கிராமமக்களுக்குப் புலிகள் குறித்தோ அல்லது புலிப்பால் தேவை குறித்தோஎந்த அறிவுத் தெளிவும் இருக்கவில்லை.அவர்கள் அறிந்த புலிகள் இரண்டேஇரண்டுதான் ஒன்று தேவர் பிலிம்ஸின் சினிமா புலி இதை அடக்குபவர்எம்.ஜீ.ஆர்.மற்றொன்று சீட்டா பைட் தீப்பெட்டியில் இருக்கும் வெட்டும்புலி அட்டைப்படம்.அப்படிப்பட்ட பகுதிக்கு புலிப்பால் கறக்கும் எருமை தானம் என்பதை அங்கிருக்கும் மக்களால் நம்ப முடியவில்லை.அன்று இரவே ஊர் கூட்டத்தைக்கூட்டினார்கள்.ஊரில் உள்ள எல்லோரும் கூட்டத்தில்கலந்து கொண்டார்கள்.
புலிப்பால் கறக்கும் எருமை வந்த பிறகு தங்கள் ஊரின்வளர்ச்சி அபரி மிதமாக இருக்கப் போகிறது என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தது.எருமையை கட்டிப்போடும் இடத்திற்கருகே ஒரு பெட்டிக்கடை யாவது போட்டுவிட வேண்டும் என எல்லோரும் நினைத்தார்கள்.
ஊர்கூட்டம் நடந்து கொண்டிருந்த மைதானத்தின் கடைசிமூலையில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு மட்டும் எருமைமாடு புலிப்பால் கறக்காது என்று தோன்றியது.அவன் எதுவும் சொல்லாமல் சுவர் மீது காலை ஊன்றியபடிநின்றான்.அவனது முதுகு பக்கத்தில் பிதா சுதன் பரிசுத்த ஆவியைக் கொண்டுஎம்மை ரட்சிப்பீராக-ஆமென் என்ற சுவர் வாசகம் இருந்தது.
’’அவங்க ஒரு எருமையைக் கொண்டு வந்து நம்ம எடத்துல கட்டி, புலிப்பால் தேவை இருக்கறவங்களுக்கு பால் கறந்து குடுக்கதுல நமக்கென்ன லாவம் ’’என்றுகேட்டான் கூட்டத்தில்ஒருவன்.
கூட்டத்திலேயே அதிகம் படித்தவரும்அறிவாளியாக கருதப்படுபவ ருமான ஒரு பெரியவர் எழுந்து தொண்டையைச் செருமியபடி’’அப்படி தனித்தனியா பெலனை எதுர்பாக்க ஏலாது.ஊருக்குள்ள அந்நிய நட மாட்டம்இருக்கும் அது நம்மள்ல கடகண்ணி வச்சிருக்கவுகளுக்கு யாவாரத்தக் குடுக்கும், வந்து போறவுக தங்கறதுக்கு ஒரு குடுசகிடுச போட்டுத்தரலாம் அதுலஒரு வருமானத்தப் பாக்கலாம்.எருமைக்குன்னு ஒரு கூடாரம் கட்டுவாவ அதுல சோலி கிடைக்கும்..இம்புட்டு எதுக்குடே எருமைக்குன்னு தனியா டேம்லருந்து தண்னி எடுத்துட்டு வாரவளாம். அந்தத் தண்ணில நாம ஒரு பயிறுபச்ச உண்டாக்கிக் கிடலாம்’’.
பெரியவர் ஒவ்வொரு அணுகூலமாக சொல்லச் சொல்ல எல்லோரும் அதில் அவரவர் சாத்தியங்களைப் பொருத்திப் பார்த்துக் கொண்டார்கள்.
கூட்டத்திற்குள் ஒரு சிறு அமைதி ஏற்பட்டது.
அப்போதுதான் அவன் அந்தஅற்புதமான கேள்வியைக் கேட்டான்.
’’எருமை மாடு சாணி போடுமா?’’ எல்லோரும் அவனை வினோதமாகப் பார்த்தார்கள்.சிலர் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
’’லேய் ..படுச்ச முட்டாளா இருக்கிய எருமன்னா சாணி போடாதா?’’
’’இல்ல புலிப்பால் கறக்கற எருமயாச்சே எப்படி சாணி போடும்னு கேட்டேன்’’என்றான்.
பெரியவருக்கு தன் அறிவிற்கு எதிராக பேசுவது கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.’’புலிப்பால் குடுக்க எருமை எப்படி சாணி போட்டா நமக்கென்னடே…இந்தாருங்கப்பா இது நம்ம ஊருக்கு கெடச்ச பெருமஅதுக்குத்தக்கன நடந்துக்கங்க.அவம் சொன்னான் இவன் சொன் னான்னு ஆரும்எதுவும் சொல்லப்படாது.எருமைய நாம காபந்து பண்ணி யே தீரணும் புலிப்பால்கறந்தே தீரணும்’’.அந்தக் கூட்டத்துக்கு ஒருமுற்றுப் புள்ளி வைக்கற மாதிரி அவரு பேச்சு ஓங்கி ஒலித்தது எல்லோரும் அந்தப் பேச்சுக்கு அடங்கினார்கள்.
அதுக்குப்பிறகு யாரும் எருமையப்பத்தி கெம்பல..கூட்டம்கலைந்தது. எல்லாரும் எருமைகூடாரத்துல நமக்கு ஒரு நல்ல சோலி கிடைக்கும் என்கிறதெம்பில் தூங்கப் போனார்கள்.
மறுநாளிலிருந்து ஊருக்குள் வேத்து் மனிதவாடை கொஞ்சம் தூக்கலாகவே இருந்துது. மண்ணைக் கிளறியபடி ஏதோ தஸ்ஷு புஸ்சு என்று என்னத்தையோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.’எருமைக்கு கூடா ரம் போடுததுக்கு ஒரு எடத்த ரெடி பண்ணுதாவ’’ என்று சொன்னான் ஒருத்தன்.’ஒத்த எருமைக்கு இம்புட்டு ஆராய்ச்சியா’ எல்லாரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
’’மாடு என்னமோ எருமைன்னாலும் கறக்கறதுபுலிப்பாலாச்சே’’ என்றார் மீசைய நீவி விட்டுக் கொண்டேபூதப்பாண்டி.அவரு இதைக்கம்பீரமாகச் சொன்னபோது அவரு எடத்துக்குப் பக்கத்தில எருமைகட்டற எடத்தபாத்து கொண்டு இருந்தார்கள் அந்தக் கெப்புரு அவருக்குள் இருந்துது.
ஒரு வழியாக் கடலுக்குப் பக்கத்துல ஒரு இடத்தைக் கண்டு பிடித்து இதுதான் எருமை கட்ட தோதான இடம் என்று முடிவு பண்ணினார்கள். எருமைய குளிப்பாட்ட கடலிலிருந்து தண்ணீர் எடுக்கப் போகிறார்கள் என்கிற யோசனை சிலருக்கு ஒருவிதமான பயத்தைக் கொடுத்தது காரணம் அவர்கள் அந்தப்பகுதியில் மீன்பிடித்துப் பிழைக்கிறவர்கள்.
’’எரும குளிச்ச தண்ணில வாழமாட்டோம்னு மீனுவல்லாம் வேற திக்குக்கு போயிருமாம்ல’’ தனது சந்தேகத்தை முன் வைத்தான் புதிதாய் கடலாடும் ஒரு இளைஞன்.
அவனுக்கு ஒத்திசைவாய் மற்றொருவன் ’’ஒருகடல் தண்ணிய இந்த எரும ஒன்னா குளிக்குமாம்’’ என்றான்.
‘’இவ்ளோ பெரிய கடல்ல ஒத்த எருமை குளிக்க எம்புட்டு தண்ணிய எடுத்துரப் போறாவ’’ என்று அமைதிப்படுத்தினார் ஒருவர்.
ஒரு நல்ல நாளாகப்பார்த்து எருமைக்கு கூடாரம் கட்டுவதற்கு வானம் தோண்டஆரம்பித்தார்கள்.அன்று அந்தக்கிராமம் பாக்காத ஆளையெல் லாம் பார்த்தது.
’’எங்கிட்டோ ஒரு மூலையில இருக்கற நம்ம மேல இம்புட்டு அக்குசா இருக்காகளே இனி எந் நாளும் இவுஹளுக்கு உம்மையா இருக்கணும்’’ ஒரு பெருசு வாய் விட்டு சொன்னார்.
பெரியபெரிய மனிதர்களெல்லாம் எருமையை அங்கு கொண்டுவந்து சேர்க்க பிரயாசையெடுப்பது சிலருக்கு ஒரு சந்தேகத்தை எழுப்பியது. இது ஏதோ ஒரு அழிவிற்கான வேலை என்கிற அச்சம் அவர்களுக்குள் எழுந்தது.
’’வெள்ளாமை வெளையற வயல்ல மண்ணள்ளிப் போட்டது கணக்கா என்னத்தயோ பண்ணப் போறாவன்னு தெரிஞ்சுபோச்சு.மாட்டை இங்கன கட்டக் கூடாதுன்னு பல ஊருக்காரவுஹ மறிச்சதும் மாட்ட எங்கனயும் கட்ட ஏலாம இங்ககொண்டாந்துருக்காங்க’’ என்று சொன்னவனை யாரும் மதிக்கவில்லை..
’’எருமை… புலிப்பால் கறக்குங்கறது என்னமோ நெசந்தான் ஆனா அந்த எருமை கழியற சாணி ஆபத்தானது..இத எப்படியாவது நிறுத்திப் போட னும்.இது நம்ம பூமி இதுக்கு நாமதான் நல்லது செய்யணும்’’ என்றவன் அத்தோடு நில்லாமல் எருமையைக் கொண்டு வரக்கூடாது என குரல் கொடுக்க ஆரம்பித்தான்.
மாட்டைக் கொண்டு வர விரும்பிய மனிதர்களுக்கு இது பெரிய தலைவலியாக இருந்தது.எருமையை வாங்கவில்லை என்றால்
எருமை வியாபாரிகள் ’இவ்வளவுதானா உங்க செல்வாக்கு’ என்று சிரித்து விடுவார்களே எனப் பயந்தார்கள்.இவர்களை மிரட்டித்தான் காரியம் சாதிக்கமுடியும் என முடிவெடுத்தவர்கள்.எருமை வேண்டாம் என்று சொன்னால் சுட்டுவிடுவோம் என மிரட்டினார்கள். அந்த மிரட்டலுக்கு யாரும் பயப்படவில்லை.எருமை வேண்டாம் என்கிற குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கத்துவங்கியது.ஆனபடி ஆகட்டும் என்று சுட்டார்கள்.ஒரு மரணபலியோடு அடங்கியது கூட்டம்.
அடங்கியது எருமை வேண்டாம் என்கிற கூட்டம் மட்டுமில்லை. வெளிநாட்டில் எருமை வியாபாரிகளுக்குள் சண்டை வந்து அவர்களுக்குள் பிரிவினை வர…, எருமைத்திட்டம் அத்தோடு அடங்கியது.
.அப்போது நல்ல வியாபாரம் தெரிஞ்ச சிலர் கையில் அதிகாரம் இருந்துது. அவர்கள் வீட்டுமனை வியாபாரி மாதிரி நாட்டைக் கூறு கட்டி விற்க நினைத்தார்கள். அள்ளி தண்ணீர் குடித்த குளமெல்லாம் அழிந்தது.பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்கவில்லையென்றால் நோய் வரும் என்கிற நிலை உருவாகியது.வந்தேரிகள் பணம் சம்பாதிக்க சொந்த மக்களின் சங்கில் கூசாமல் ஏறி மிதித்தார்கள்.
நாடே சூனியம் பிடித்த மாதிரிதான் இருந்தது. தொழில் வியாபாரம், விவசாயம் எதுவும் விளங்கவில்லை.எல்லாம் புலிப்பால் இல்லாத குறைதான் என்று ஒரு பேச்சு இருந்தது.’’அந்த எருமையக் கொண்டாந் திருந்தா இந்தச் சீண்ட்ரமில்ல’’என்று எல்லாரும் பேசத்துவங்கினார் கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அந்த எருமைய கொண்டு வரும் திட்டத்தைத் திரும்பவும் தூசி தட்டி ஆரம்பித்தார்கள்.
’’அடப்பாவிகளா வாங்கின விலைக்கு வந்துட்டீங்களே’’ என்று எருமை வேண்டாம் என்று சொன்ன கூட்டமும் மீண்டும் எழுந்து நின்றது. நாட்டைக் காப்பற்ற உயிரைக் கொடுப்போம் என்று சொல்லி கையில் காலில் விழுந்தவர்கள் வெங்காயத்தை விழுங்கிய கோழியைப் போல அமைதியாக இருந்தார்கள்.
எருமை வேண்டாமென்றவர்களின் குரலை அவர்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை நீங்க போடுகிற கூச்சலைப் போடுங்க..நாங்க செய்யுற வேலயச்செய்யுறோம் என்று இவர்கள் சத்தத்தை வகை வைக்காமல் எருமையக் கொண்டு வரும் வேலை நடந்துகொண்டு இருந்தது.
அப்போதுதான் ஒரு நாட்டில் ஒரு எருமை செத்து பெரிய பிரச்னை ஏற்பட்டது.’’.அது மாதிரி ஒரு சூழ்நெல வந்தா என்ன பண்ணுவியோ? எருமைய நெனச்சாலே எங்களுக்கு பயமா இருக்குய்யா.. வேணாம்யா’’ என்று தயவு பண்ணி இவர்கள் கேட்கவும் .நாட்டில் இருக்கும் மாட்டு டாக்டரெல்லாம் ஒன்றாக அந்த ஊர்ல கூடி குமிந்தார்கள்.
’’இது ஒரு நல்லஎருமை சாணியெல்லாம் போடாது புளுக்கைதான் போடும் என்று அடித்துச் சொன்னவ்ருக்கும் எருமைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.. ஆனால் அவர் முக்கியமான புழுக்கை விஞ் ஞானி. பெரிய பெரிய பதவியிலெல்லாம் இருந்தவர். ’’நம்ம மண்ணுல புரண்டு வளந்த மனுசன் எரும புழுக்கை போடும்னு சொல்லிட்டாரே’’ என்று எல்லாருக்கும் வேசடையாக இருந்தது.
’’ஆரு என்ன சொன்னாலும் எங்க போரு போருதான் எருமைய இங்க வளக்கக் கூடாது. வேணுமின்னா கூடாரம் கட்ட எம்புட்டு செலவு பண்ணுனியளோ அத வசூல் பண்ணி குடுத்துருதோம் என்று சொன் னார்கள் எருமை வேண்டாம் என்று சொன்ன கூட்டத்தார்.
எருமை வேண்டுமென்று ஒரு கூட்டத்தை அங்கங்கே உருவாக்கி அதற்கு மானியம் வழங்கிக் கொண்டிருந்தது அதிகார வர்க்கம்.
எருமை வேண்டாம் என்று சொல்கிறவர்கள் எங்கோ பணம் வாங்கிக் கொண்டு பேசுகிறார்கள்.அவர்கள் வேற்றுமதத்துக்காரர்கள்.இதில் சாதியும் மதமும் விளையாடுகிறது என நாளுக்கொரு கதைகள் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
நாளுக்குநாள் எருமையை நினைத்து பயப்படும் கூட்டமும் அதிகரித் தது.ஒரு கருப்பு மனிதர் மட்டும் அவ்வப்போது வந்து இதோ எருமை வருகிறது அதோ எருமை வருகிறது என குரல் எழுப்பிக் கொண்டிருந் தார்.
எரும வேண்டும் என்று சொல்கிற எந்த மனிதனும் அந்தக் கூடாரத்துக்கு அருகே குடியிருக்கவில்லை. அங்கு குடியிருக்கும் மக்களின் கூக்குரலுக்கு ஒருவரும் செவி சாய்க்கவில்லை.
மேல உங்களுக்கு இருக்கற பயம் போறவரைக்கும் எருமைய கொண்டார மாட்டோம்னு இங்கிட்டு ஒருபேச்சும் உங்க எருமைய இன்னும் ஒருமாசத்துக்குள்ள ரெடி பண்ணிருவேன்னு அங்கிட்டு ஒரு பேச்சுமா தாடிய நீவிகிட்டே பேசிக் கொண்டிருந்தார் அதிகாரத்துல இருக்கற மாமனுசன். ..இப்படியாக எல்லை தெரியாமல் போகிறது அந்தப் போராட்டம்.இதற்கு மத்தியில் அந்தப் போராட்டத்துக்கு சாதிமத சாயமெல்லாம் பூசப்பட்டிருக்கிறது..
2
கதை எழுத துவங்கிய போதே இதை ஒரு முடிவற்ற கதையாக எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். எழுத நினைத்ததை யெல்லாம் எழுதிவிட்டது போல தோன்றினாலும் கதையில் ஏதோ ஒன்று குறைவது போல தெரிந்தது.
நண்பன் கவி்தாவிடம் கொடுத்து கருத்துக் கேட்டபோது இது கதையே இல்லை.ஒரு மைய கதாபாத்திரம் இல்லாமல்இருப்பதால் கதையோடு ஒன்றமுடியவில்லை .அதுவுமில்லாம நீ குறியீடா சொல்லி இருக்கற புலிப்பால்,, எருமைமாடு இது எதையுமே ஃபாலோ பண்ண முடியல. அதனால கதையில ஒரு நம்பகத்தன்மை வரமாட்டேங்குது.அதை மட்டும் சரி பண்ணிட்டேன்னா ஒருவேளை இந்தக்கதை வேறொரு தளத்தை அடையலாம்.என்றான்.
இருவரும் அமைதியாக சிந்தித்தபடி இருந்தோம்..
ஒருவரி சொல்றேன்.அதுலஇந்தக்கதை முழுமையடையுமான்னு பாரு என்றேன்.
சொல்லு என்றான்.
அந்தக் கிராமத்தின் பெயர் கூடங்குளம்.
Thursday, January 5, 2012
நாடகம்
ஹோயே..ஹோ..அலைகளின் பேரிரைச்சலை மீறி கடல் அரக்கர்களின் ஓங்காரக்குரல் எழத் துவங்கிவிட்டது.சூறைக்காற்றின் ஆரவாரத்தோடு பெரு மழைக்கான அறிகுறிகளுக்கிடையேஸ கட்டியக்காரன் இளவரசி கடல் பூதத்தால் கடத்தப்பட்ட கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான். நீல தேசத்து இளவரசியைக் காப்பாற்ற இன்னும் அரைமணி நேரமே உள்ளது.
வேலன் தனது ஓலைத்தொப்பியை தலையில் மாட்டியபடி துடுப்பை கையிலெடுத்துக் கொண்டு குறுவாளைத் தேடியபோது அவனது செல்ஃபோன் ஒலித்தது.i don’t wanna live wth u I’m leaving-nimmi.என நிர்மலா குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.வேலன் எதிர்பார்த்த செய்திதான் ஆனாலும்ஸஒரு நிகழ்ச்சிக்கிடையே அதுவும் இளவரசியை காப்பாற்றப் போகும் தருணத்தில் வருமென எதிர்பார்க்கவில்லை.
வேலன் நிம்மியின் எண்ணுக்கு அழைத்தபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது,ஒரு வேளை அவள் சிம்மை கழற்றி தூக்கியெறிந்திருக்கக் கூடும்.மேடையில் கட்டியங்காரன் நீல தேசத்து மகாராஜா இளவரசியை கடல் பூதத்திடமிருந்து மீட்டுக் கொடுப்பவர்களுக்கு தனது தேசத்தில் ஒரு பகுதியை தானமாகத் தருவதாக தண்டோரா போட்டிருப்பதை சொல்லிக் கொண்டிருந்தான்.இதுவரை நாற்பத்தெட்டு முறை இளவரசியை காப்பாற்றி இருக்கிறான் வேலன்.அத்தனைக்கும் ராஜ்ஜியத்தில் பங்கு தருவதென்றால் அரசன் வேலனிடம் கொத்தடிமையாகத்தான் இருக்க வேண்டும்.
மகாராஜா மேடையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்..அவரது முகத்தில் பெருங்கவலையும் குழப்பமும் சூழ்ந்திருந்தது அவரது மனநிலைக்கு ஏதுவாக டிஜ்ருடு வாத்திய இசை ஒலித்துக் கொண்டிருந்தது..வேலனின் மனம் முழுக்க நிம்மியின் நினைவுகள் பெருகி வழிந்தது.நிம்மியின் இந்த முடிவு ஏதோ அவசரத்தில் எடுத்த முடிவென்று சொல்லிவிட முடியாது.கடந்த ஆறு மாதமாக அவளது பேச்சு விடைபெறுதலை நோக்கியே நகர்ந்து கொண்டிருந்தது.
அவள் ஒற்றை கேள்வியில் மையம் கொண்டிருந்தாள். ‘நாம ஏன் சேர்ந்து வாழணும் வேலு..’”எங்கு துவங்கினாலும் அவளது பேச்சு இந்த வார்த்தையோடுதான் முற்றுப்பெறும். அந்த வார்த்தையை உபயோகித்தபிறகு அவள் வேறு எதுவும் பேசுவதில்லை வேலன் ஏதாவது பேசினால் கூட பதில் சொல்வதில்லை.
டிஜ்ருடுவின் இசை வேகம் அதிகரித்தது.மேடையில் விளக்கொளி அணைய கட்டியங்காரன் ‘’வேலுமாமா துடுப்ப எடுத்துட்டு இளவரசியை காப்பாத்த கடலுக்கு வந்துட் டார்’’எனஇசையை மீறிய ஒரு குரலில் சத்தமாக சொன்னான். டிஜ்ருடு வாத்தியத்தின் ரூன் ட்டூன் ட்ரூம் ட்ரூம்..இசையோடு, காற்றில் துடுப்பசைத்தபடி வேலன் நீலப்புடவை அலைகளுக் குள்ளிருந்து வெளிப்பட்டான். வேலனின் துடுப்பின் வேகம் டிஜ்ருடு இசைக்கேற்ற தாளக் கட்டோடு இருந்தது. வேலுமாமா.. வேலுமாமா.. என குழந்தைகள் கோரசாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
தூய சவேரியார் கல்லூரி மைதானமே குழந்தைகளால் நிறைந்திருந்தது எல்லாம் ஃபாதர் சேவியரின் ஏற்பாடு.அவர் ஒரு குழந்தை மனிதர்.குழந்தைகளுக்கான கவிதைகள்,குழந்தை நாடகம் என அவரது சிந்தனை முழுக்க குழந்தைகளைச் சுற்றியே இருக்கும்.நிம்மிக்குக்கூட குழந்தைகளென்றால் உயிர்.‘’டேய் வேலுப்பிள்ளே உன்னை ஒரு குழந்தையாத்தாண்டா பாக்கறேன் அதான் உம்மேல இவ்ளோ லவ்வு’’என்பாள்.அந்த இவ்ளோவில் இருக்கும் ராகம் ஒரு இசையாய் இருக்கும்.
இந்தக் கல்லூரியில் வேலுவிற்கு இது இரண்டாவது நிகழ்ச்சி ஏற்கனவே வேலுவின் வீரதீரங்களை அறிந்த குழந்தைகளிடமிருந்துதான் அந்த ஆரவாரம் கிளம்பியது.வேலன் நடு மேடைக்கு வந்து நின்றபடி இளவரசிய காப்பாத்தப் போறேன் நீங்க வர்றீங்களா? என குழந்தைகளைப் பார்த்து கேட்டான்.ஆயிரம் குழந்தைகளும் உற்சாகமாக தலையசைத் தார்கள். என்னை மாதிரி துடுப்பு வலிங்க..என்றபடி வேலன்..ஏஹோய்..ஏஹே ஹோய் என பாடியபடி துடுப்பசைக்க குழந்தைகளும் ஒரு கணத்தில் வேலனாக மாறி துடுப்பசைத்தார்கள். பிரதான சாலையில் போகிறவர்களுக்குக்கூட கேட்கும் விதத்தில் அவர்களின் ஏஹோய் ஏஹே ஹோய் சத்தம் பெரிதாக இருந்தது. ஆயிரம் குழந்தைகளின் குதூகலத்தையும் மீறி வேலுவிற்குள் துக்கம் பெருகியது.
இது போல ஒரு நாடக மேடையில்தான் முதல்முதலில் வேலு நிர்மலாவை சந்தித்தான். உறவையும் பிரிவையும் தீர்மானிக்குமிடத்தில் நாடக மேடைகள் இருப்பதை எண்ணி அவன் சிரித்த போது,வேலுமாமா என்கிற குரல் உச்சத்தைத் தொட்டிருந்தது.
கடல் பூதம் அவனது பாய்மரப்படகை கவிழ்க்க சூறாவளிக்காற்றை ஏவிவிட்டிருப்பதை கட்டியக்காரன் சொன்னனான்.டிஜ்ருடுவின் ஓங்கார இசையோடு முரசின் ஓசையும் கலந்து அடிவயிற்றில் திம்திம்மென ஒலித்தது.வேலு நிலைகுலைந்தான் அவன் துடுப்பு கைநழுவிப் போனது.i don’t wanna live wth u.குறுஞ்செய்தி வாசகம் அவன் நினைவைவிட்டு அகலவில்லை. வேறெப்போதும் வேலன் இப்படி இருந்ததில்லை அரிதாரம் பூசியபிறகு அவன் அந்தக் கதா பாத்திரமாக மட்டுமே இருப்பான்.ஆனால் இன்று நிம்மியின் கணவனாக இருந்தான். I’m leaving எங்கே சென்றிருப்பாள்.வேலனுக்காக உறவுகளையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு வந்தவள். நீலதேசத்து இளவரசி மாதிரி ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கி இருப்பாளோ? என்கிற அச்சம் அவனுள் எழுந்தது.சூறைக்காற்றில் படகு உடைந்தது.வாள் சுழற்றியபடி கடல் அரக்கர்கள் வேலுவை சூழ்ந்தனர்.
ஒரு கடல் அரக்கனின் குண்டாந்தடி வேலுவின் மண்டையில் இறங்கியது..பாய்மரப்படகு இரண்டாக பிளந்து கடலுக்குள் வீழ்ந்தான் வேலு.குழந்தைகள் திகைப்புடன் பார்த்துக் கொண்டி ருந்தனர்.கடல் பூதத்தின் பேய் சிரிப்போடு விளக்குகள் அணைந்தது. ‘’திமிங்கில அடிமைகளே உங்கள் பசிக்கு இவனை இரையாக்கிக் கொள்ளுங்கள்’’ இருளில் கடல் பூதத்தின் குரல் ஒலித்தது.
. மெல்லிய விளக்கொளியில் மேடையில் விழுந்துகிடந்தான் வேலு. குழந்தைகளின் பேரமைதி வேலுவை மேலும் துயரப்படுத்தியது.நிம்மி எங்கே சென்றிருப்பாள். வேலுவிற்கு தன்னை ஏதேனும் ஒரு திமிங்கிலம் விழுங்கிவிட்டால் நல்லது என்று தோன்றியது.
வேலு கண் மூடினான்.அசைவற்றுக்கிடந்தான்..அப்படித்தான் கிடக்க வேண்டும். வெள்ளிமீன் வந்து, தான் கடல் பூதத்தால் தனது வம்சத்தை இழந்த கதையைச் சொல்லி அவனை பவளப் பாறை மறைவிற்கு எடுத்துச் செல்லும் வரை அப்படியே சலனமற்று கிடக்க வேண்டும். வேலுவிற்கு அந்த தருணம் பிடித்திருந்தது.எந்த பாவனையுமற்று இருப்பது அழகாக இருப்பதாக உணர்ந்தான்.
வேலுவின் வாழ்க்கை முழுக்க முழுக்க பாவனைகளால் கட்டமைக்கப்பட்டி ருந்தது.இருபத்தி இரண்டு ஆண்டுகளாக குழைந்தைகள் நாடகக்கலைஞனாக இருக்கிறான். தினப்படி நாடகம்.., இல்லையென்றால் ஒத்திகை இருக்கும்.சில சமயம் அன்றன்றா பட்சியாகவோ.. ஐராபாசியாகவோ வீட்டிற்கு வந்துவிட நேர்வதும் உண்டு. நிம்மி மிக நல்ல மன நிலையில் இருக்கும் போது ‘’வாடா பாவனை ராஜகுமாரா’’ என்றுதான் அழைப்பாள். நிம்மியின் வார்த்தைகளுக்குள் சொக்கிக் கிடந்த காலம் ஒன்று உண்டு.
தஞ்சை கலைஇலக்கிய பெருமன்ற விழாவில்தான் வேலன் முதல்முதலாக நிர்மலா வை சந்தித்தான்.அன்று இளவரசியாக நடிக்க வேண்டிய பாலகிருட்டிணன் குடித்து விட்டு விழுந்து கிடந்தான்.அவனை தட்டி எழுப்பியபோது ‘’இளவரசிக்குத்தான் டயலாக் இல்லையே என்னை அப்படியே தூக்கிக் கொண்டுபோய் நிறுத்து நடிக்கிறேன்’’ என்று உளறினான்.’’ஏண்டா இடுப்பில இருக்கற வேட்டி அவுந்து கிடக்கறது கூடதெரியாம கிடக்கறே..இப்படியே எப்படிடா நடிப்பே’’
‘’பட்டாபட்டி டவுசர் போட்ட இளவரசி புதுமையாத்தானே இருப்பா’’ என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பேராசிரியர் காமராசோடு வந்திருந்தாள் நிர்மலா
நிர்மலாவின் சிரிப்பைத்தான் முதலில் பார்த்தான் வேலு. ‘’பட்டாபட்டி இளவரசி’’ என சொல்லிச் சொல்லி சிரித்தாள்.அவள் சிரிப்பு அடங்கவும் காமராசு ‘’என்னாச்சு வேலு இன் னைக்கு நாடகம் போட முடியாதா?’’ என அக்கறையோடு விசரித்தார்.’’இளவரசியா நடிக்க றதுக்கு யாராவது வேணும் சார்.’’வேலன் தனது பார்வையை நிர்மலாவைவிட்டு அகற்றாமல் காமராசுவிடம் கேட்டான்.
”யேய் நான் இளவரசிடா.. என்னை எவனும் காப்பாத்த வேணாம். என்னைய நானே காப்பாத்திக்குவேன். நாங்க பாக்காத கடல்பூதமா? எத்தன மேடையில பாத்திருக்கோம் நேத்து கூட, கடல் பூதமும் நானும்தான் சரக்கப் போட்டோம்.ஒரு குவாட்டருக்குக்கூட தாங்க மாட்டான் மங்குனிப்பய அவன்லாம் கடல் பூதமா நான்சென்ஸ்””போதையில் பாலகிருட் டிணன் உளறினான்.கடல் பூதமாக நடிக்கும் குழந்தைசாமி பாலகிருட்டிணனின் புட்டத்தில் ஒரு மிதி மிதிக்க..,வேலனுக்கு அவமானமாக இருந்தது.
‘’நா வேணா இளவரசியா நடிக்கட்டுமா?’’வெகு இயல்பாக நிர்மலா கேட்டாள்.காமராசு நிர்மலா வை ஆச்சர்யமாக பார்த்தபடி, வேலனிடம் ‘’தெரிஞ்ச பொண்ணு உன்னைய பாக்கணும்னு சொல்லிச்சு அதான் கூட்டிட்டு வந்தேன்.அதுவும் நல்லதாப்போச்சு’’ என்றார்.
வேலன் அவருக்கொரு நன்றியை சொல்லிவிட்டு ஒத்திகையை ஆரம்பித்தான். வேலனின் நாடகத்தில் அதுவரை எந்தப்பெண்ணும் நடித்ததில்லை.அன்றைய நாடகம் வழக்கத்தைவிட சிறப்பாக அமைந்தது.
நாடகம் முடிந்தபிறகும் அவர்கள் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். கல்லூரிக் காலத்தில்.., தான் வேலுவின் நாடகத்தை ஒருமுறை பார்த்திருப்பதாகச் சொன்னாள் நிர்மலா..விடை கொடுக்க பேரூந்து நிலையம் வரை வந்தாள் இருவரும் தங்களது எண்களைப் பறிமாறிக் கொண்டார்கள். அதன் பின் தொடர்ந்த போன் உரையாடல்களில் இருவரும் அவர்களுக்குள்ளிருந்த காதலை உணர்ந்தார்கள்.
‘வீட்டில் வந்து பெண் கேட்கும் தைரியம் இருக்கா வேலுப்பிள்ளே’ என ஒரு குறுஞ்செய்தியை நிர்மலா அனுப்பிய மறுநாள் வேலு தஞ்சாவூரில் இருந்தான்.
நிர்மலாவின் அப்பா வெகு நிதானமாக பேசினார்.ஒரு கூத்தாடியுடன் தனது மகளின் வாழ்க்கையை பொருத்திப்பார்க்க விருப்பமில்லை என்றார்.அதையும் மீறி நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களானால் நான் தடையொன்றும் சொல்லப்போவதில்லை அப்படி திருமணம் செய்வதற்கு முன் எனக்கும் என் மகளுக்குமான உறவு முறிந்து போகும் என்றார்.
‘’அப்பா இவரோட நா ரொம்ப தூரம் பயணப்பட்டுட்டேன்.இனி திரும்பி உங்க வழிக்கு என்னால வர முடியாது. எப்பவாவது நான் செஞ்சது தப்பில்லன்னு தோனினா என்னை வந்து பாருங்க.’’என்றபடி வேலுவோடு புறப்பட்டாள் நிர்மலா. அப்பாவின் நிதானமும் அழுத்தமும் அப்படியே நிர்மலாவிடம் இருந்தது
வெறும் பேச்சுவார்த்தைக்கென்று வந்தவன் நிர்மலாவோடு திரும்பினான்.திருமண வாழ்க்கைக்கான எந்த ஏற்பாடும் வேலனிடம் இல்லை.பாலகிருட்டிணன்,குழந்தைசாமி இவர் களுடன் ஒரு அறையில் தங்கியிருந்தான் வேலன்.
நிர்மலாவிற்கு அவர்களோடு தங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை.அவள் அவர்களோடு மிகவும் அன்பாக இருந்தாள். பாலகிருட்டி ணனை இளவரசி என்றும்.குழந்தைசாமியை பூதமென்றும் அழைத்தாள்.
வேலனின் வாழ்க்கையில் நிர்மலாவின் வருகைக்குப்பின் பெரிய மாற்|றமிருந்தது. அவனது நடை உடைகளே மாறியிருந்தது.அடுத்த மூன்று வருடத்தில் ஒரு சொந்த வீடு கட்டும் அளவிற்கு வேலுவை மாற்றியிருந்தாள்.சொந்த வீடு கட்டியபிறகு தான் தனது வாழ்க்கை தன் கைவசப்பட்டதாக உணர்ந்தான் வேலன்.வேலுவின் காதல் காலம் அங்கிருந்துதான் துவங்கியது.சின்னச் சின்ன வார்த்தைகள்தான் நிம்மியிடம் எப்போதும் அழகு..’’குட்டிப்பையா’’ என அவள் அழைக்கும்விதத்தில் ஒருவித மயக்கம் இருக்கும்.
ஒரு நாள்
‘’எம்மேல உனக்கு கோபமே வராதாடா?’’ என்றாள்.
வேலனுக்கு அது வேடிக் கையாக இருந்தது. எதற்காக தன்னிடம் கோபத்தை எதிர்பார்க்கிறாள் எனபது அவனுக்குப் புரியவில்லை.’’எதுக்குக் கோபப்படனும்’’என்றான்.
‘’போடா மக்கு பிளாஸ்திரி கோபத்துக்குப்பிறகு வர்ற அன்பு எப்படி இருக்கும் தெரியுமா?எங்க அப்பாவும் நானும் செல்லமா கோபப்படுவோம். யாரு முதல்ல பேசறதுன்னு ஒரு ஈகோ வரும் சுவரப்பாத்து ஒரு மூணுநாள் பேசுவோம்.அது எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?’’
நிம்மி அவள் அப்பாவை தன்னில் பார்க்க விரும்புகிறாளென வேலனுக்குத் தோன்றியது. நிம்மி அப்படி யோசிக்கக் கூடியவள்தான்.அவள் அப்பாவை விட்டு வந்த அன்று பேரூந்து பயணத்தில் வேலு. என் கையை அழுத்தமா பிடிச்சிக்கடா,.மனசுக்குள்ள இருந்து அப்பா கூப்பிட்டுகிட்டே இருக்காரு திரும்பிப் போனாலும் போயிருவேன் என்றாள்.அப்பா அவளுக்குள் அழுந்தப் பதிந்த மனிதன்.அவள் அப்படி தன்னை பார்க்க விரும்புகிறாள் என்கிற எண்ணமே அழகானதாகவும் வினோதமானதாகவும் இருப்பதாய் உணர்ந்தான் வேலன்.அதற்காகவே வேலன் அவனிடம் கோபப்பட விரும்பினான்.
பாலகிருட்டிணன் மீது குழந்தை சாமி மீது தினசரி வரும் கோபம் நிம்மியின் மீது வரத் தயங்கியது.நிம்மி உம்மேல கோவமே வரமாட்டேங்குது என வேலன் சொன்ன போது நிம்மி சிரித்தபடியே உன் கோபமும் என்னை லவ் பண்ணுதோ என்னவோ என்றாள்.அவள் அப்படிச் சொன்னவிதம் வேலனுக்குப் பிடித்திருந்தது.
ஒருநாள் சமையலை காரணம் காட்டி பாவனையாய் அவளிடம் கோபப்பட்டான்.என் சமையல் பிடிக்கலன்னா என்மேல உனக்கிருக்கற அன்பு குறைஞ்சிட்டு வருதுன்னு அர்த்தம் நிம்மியும் அவனோடு பதிலுக்கு மல்லுகட்ட துவங்கினாள் அந்த சண்டை சில மணிநேரம் நீடித்தது.’’குட்டிபையா எம்மேல கோபமாடா’’ என நிம்மி அருகில் வந்து கேட்கவும் சிரித்தபடியே ‘’ஆமா’’ என்றான்.
‘’அட முட்டாப்பயலே பேச்சுவார்த்தையில தீர்றபிரச்சனைன்னா அதுக்கு பேரு கோவம் இல்லடா ஊடல்’’ என்று வேலனின் தலையில் குட்டினாள்.சின்ன வயதில் அம்மா செல்லமாக குட்டுவது போல இருந்தது.
அவள் மடியில்படுத்தபடி எனக்கு அம்மா இல்லாத குறையை நீ தீர்த்து வைக்கிறே என நெகிழ்ச்சியாகச் சொன்னான்.’’எனக்கு குழந்தையில்லாத குறையை நீ தீத்து வைடா’’நிம்மியின் இந்த வார்த்தைதான் அவர்களை வழிநடத்தி இந்த பிரிவின் எல்லையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
வெள்ளி மீன் தனது கதையை சொல்லி முடித்து பவளப்பாறைகளுக்கிடையே வேலனை இழுத்துச் சென்றது.வேலனின் காதிற்குள் இளவரசியை மீட்பத|ற்கான மந்திரத்தைச் சொன்னது.நிம்மியை மீட்டெடுக்கும் மந்திரத்தையும் யாரேனும் இப்படி காதிற்குள் வந்து சொன்னால் நன்றாக இருக்குமென வேலனுக்குத் தோண்றியது.மந்திரத்தை வேலன் உச்சரித்தான்.கடல் பூதத்தின் உடல் நடுங்கியது.கடல் ஜீவராசிகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அளவிற்கு சர்வ வல்லமை படைத்த தன்னை ஒரு சாதாரண படகோட்டி அழிக்க முனைவதா! என்கிற ஆத்திரத்தில் வேலனை அழிக்க சில்வண்டு ராட்சசனை ஏவி விட்டான்.மேடையின் மையத்தில் சில்வண்டு ராட்சசன் ஒரு கயிற்றில் தொங்கியபடி பறந்து கொண்டிருந்தான்.சில்வண்டு ராட்சஸன் மேடையில் தோண்றியதுமே குழந்தைகளின் உற்சாகம் கரை புரண்டது.
இந்த நாடகத்திற்கென்று இரண்டடி குள்ள மனிதனை சில்வண்டு ராட்சஸனான தேர்வு செய்தது அவனுக்கான ஆடைகளை வடிவமைத்தது எல்லாம் நிம்மிதான். ‘’வர வர நீ சினிமா ஹீரோ மாதிரி ப்ளே போட ஆரம்பிச்சிட்டே..வேலுமாமாவால முடியாதது ஒன்னுமில்லங்கற மாதிரி இருக்கு உன் நாடகம்.ஹடில்ஸ் நிறைய இருக்கனும்டா அப்பத்தான் நாடகம்சுவாரஸ் யமா இருக்கும்’’.என்று சொல்லி சில்வண்டு ராட்சஸனை உருவாக்கினாள்.
சில்வண்டு ராட்சஸனுடன் பறந்தபடியே சண்டை போட வேண்டும்.இன்றைக்கு இருக்கும் மன நிலையில் அது சாத்தியமா என்று தெரியவில்லை.ஒரு கணம் கவனம்பிசகினாலும் கயிறு கை நழுவிப் போய்விடும்.குழந்தைகளுக்கு வேலுமாமாவின் மீதான பிம்பம் உடையும். வேலு தனக்குள் இருக்கும் துயரங்களை தூர வைத்துவிட்டு கண் மூடி மந்திரத்தை உச்சரித் தான்.மெல்ல வேலு அந்தரத்தில் எழத்துவங்கினான்.ஒரு தாளக்கட்டோடு குழந்தைகள் கைதட்ட ஆரம்பித்தார்கள்.
‘’உனக்கென்னடா தினமும் ஆயிரம் குழந்தைகளப் பாக்கறே அவங்க வேலுமாமா வேலுமாமான்னு உன்னக் கொண்டாடுறாங்க அதுலயே வாழ்ந்து முடிச்சிருவே ஆனா நா இவ்ளோ பெரிய வீட்டுல ஒத்தையாளா இருக்கணும்.’’ஒரு நாள் நாடகம் முடித்து வீடு திரும்பியதும் நிம்மி கண்கலங்கி இதைச் சொன்னாள்.வேலனுக்கு அவளது வலி புரிந்தது.
மறு நாள் மருத்துவமனைக்கு சென்றார்கள்.பல பரிசோதனைக்குப் பிறகு வேலனுக்கு ஒரு குழந்தை பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்கிற மருத்துவ உண்மையை அறிந்து கொண்டார்கள்.’
’சரி விடு நமக்கொரு குழந்தை கொடுத்து வைக்கல’’ என்று அதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டாள் நிம்மி. ‘’ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம்’’ என்றான் வேலன்.’’என்னால தாய்மையை இரவல் வாங்க முடியாதுடா’’என்கிற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.
நிம்மி எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொண்டதைப்போல வேலனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.ஒரு புன்னகையில், ஒற்றை பார்வையில், ஒரு உடல் அசைவில் ஆயிரம் குழந்தைகளை கட்டி வைக்கும் தனக்கொரு குழந்தை இல்லையென்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.வீட்டில் இருக்கும் தனிமையை முதல்முதலாக உணர ஆரம்பித்தான் வேலன்அவனது இயலாமை அவனுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.
நிம்மியின் தனிமையும்,வேலனின் இயலாமையும் அவ்வப்போது முட்டிக்கொண்டன. உனக்கொரு பத்து புள்ள பெத்துதரனும்டா..அதுதான் என்னோட லட்சியம்.திருமணம் முடிந்து வந்த போது அவள் தனது லட்சியமாக பறைசாற்றியதை தன்னால் துளியளவுகூட நிறை வேற்ற இயலவில்லை என்கிற ஆற்றாமையை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வீடு அவனுக்கு அன்னியமாகத் தெரிந்தது.நிம்மியின் புன்னகைக்குள் புதைந்துகிடக்கும் கண்ணீர்த்துளிகளை அவனால் பிரித்துப்பார்க்க முடிந்தது அதுவே அவனை தாங்க இயலாத துயரத்திற்கு இட்டுச் சென்றது.
விந்து வங்கியின் உதவியோடு ஒரு குழந்தை பெறலாம் என நண்பன் சொன்ன யோசனையைச் சொன்ன போதுதான் முழுவீச்சாக நிம்மியின் மூர்க்கமான கோபத்தை வேலனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
‘’நா வாழ்க்கையில நேசிச்ச ஒரே ஆம்பள நீதாண்டா எனக்கு பத்தாங்கிளாஸ் படிக்கறப்போ அவனப் பிடிச்சது பன்னென்டாங்கிளாஸ் படிச்சப்போ இவன புடிச்சது கடைசியா உன்னைப் பிடிச்சதுன்னு வரல.பெத்தா உன் புள்ளயப் பெறுவேன் இல்லன்னா காலம் பூரா மலடாவே இருந்துட்டுப் போவேன்’’ என்று கத்தி தீர்த்துவிட்டாள்.
வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் நிம்மி அதன்பின் பேசுவது குறைந்து போனது. ‘’வரும்போது நாப்கின் வாங்கிட்டு வர்றியா’’ என நிம்மி கேட்கும் தருணங்களில் வேலன் மிகவும் உடைந்து போவான்.வாளால் சிரம் அறுத்தது போல உயிர் ஒருமுறை போய் திரும்பும்.
சில்வண்டு ராட்சஸன் நெஞ்சில் குறுவாளால் குத்தியபடி கடல் பூதத்தின் உயிர் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சொல்லுமாறு கேட்டான் வேலன்.ஆழக்கடலில் ஒரு குடுவையில் பூதத்தின் உயிர் இருப்பதை அறிந்து கொண்டான்.சில்வண்டை கொன்று போட்டுவிட்டு கடலுக்குள் மறைந்தான் வேலன்.
வேலனின் உடலுக்கு மேல் நீலப்புடவை அலைபரப்பிக் கொண்டிருந்தது.இன்னும் பத்து நிமிடங்கள் கடல் பூதத்தின் உயிரை எடுத்துவிட்டால் நீலதேசத்து இளவரசி வந்துவிடுவாள் அத்தோடு நாடகம் முடிந்துவிடும்.வேலனுக்கு நாடகம் எப்படா முடியுமென்றிருந்தது.ஒரு வேளை நிம்மியே மனது மாறி போனில் அழைத்தாலும் அழைப்பாளெனத் தோன்றியது அப்படி அழைத்தாளானால் நன்றாக இருக்கும்.நிம்மியை தான் தான் புரிந்து கொள்ளவில்லையென் பதை வேலன் உணர்ந்தான்.அவள் இயல்பாய் சொன்ன வார்த்தைகள் கூட அவனுக்குத் தவறாகப்பட்டிருக்கிறது.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவள் வேலனை எத்தனையோமுறை சரி செய்ய முயன்றிருக்கிறாள்.ஒரு முறை ‘’நீயென்ன அவ்ளோ பெரிய இவனாடா மூஞ்சிய காட்டிகிட்டு திரியற..இந்த ஆயிரத்திஎண்ணூறு ஸ்கொயர் பீட் வீட்டுல ரெண்டே ரெண்டுபேருதான் இருக்கோம் ரெண்டு பேருமே பேசாம இருந்தா எப்படி?’’என்றாள் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தவனை வழிமறித்து அவள் இதைச் சொன்ன விதம் வேலனுக்குத் தவறாக தெரிந்தது.’’ஆமா நா ஒன்னும் பெரிய ஆளு இல்லதான்.உனக்கு ஒரு புள்ளய குடுக்கக்கூட வக்கில்லாதவந்தான் என்ன செய்யச் சொல்றே’’ என்றபடி அவளது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான்.
இரவு திரும்பி வந்த போது நிம்மியின் முகம் வீங்கியிருந்தது.வேலன் அதை கவனித்த போதும் எதுவும் கேட்காமல் அறைக்கு சென்றான்.நிம்மியும் எதுவும் பேசாமல் வந்து படுத்தாள்.
ஒரு கனத்த மௌனத்திற்குப் பிறகு ‘’உனக்கு என்னை சமாதானப்படுத்தனும்னு தோனலல்ல..’’ அவள் எங்கோ பார்த்தபடி சொன்னது வேலனுக்கு எரிச்சலை ஏற்படுத் தியது.’’நான் ஒன்னும் தப்பா பேசல..என்னோட இயலாமையச் சொன்னேன் அவ்வளவுதான்’’ என்றபடி திரும்பிப்படுத்தான்.
நிம்மி அப்போதும் அழுது கொண்டுதானிருந்தாள்.
காலையில் உணவு பரிமாறியபடியே ‘’இந்த ஆறுவருச வாழ்க்கையில உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் எனக்கு அர்த்தம் தெரியும் ஆனா நீ என் மனசைக்கூட புரிஞ்சுக்கல.இப்படி ஒரு வாழ்க்கை ஏன்னு எனக்கு புரியல நாம ஏன் சேர்ந்து வாழணும் வேலு’’ முதல்முறையாக அந்தக் கேள்வியை அப்போதுதான் கேட்டாள்.கடந்த ஆறுமாதமாக அந்தக் கேள்வியை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறாள்.இன்று அந்தக்கேள்விக்கான விடைதான் idon’t wanna live wth u.
பாலகிருட்டிணன் ஒரு குடுவையை வேலுவின் அருகே உருட்டி விட்டான்.அதற்குள்தான் கடல் பூதத்தின் உயிர் இருக்கிறது. அதை திறந்தால் புகையாய் கிளம்பும் அந்த புகை முற்றி லுமாக வெளியேறியதும் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு கடல்பூதம் விழுந்து மரிக்கும். மேடையில் கலங்கிய புகைகளுக்கு மத்தியில் நீல தேசத்து இளவரசி தோன்றுவாள் அத்தோடு நாடகம் முடியும்.வேலன் தனக்குள்ளிருந்த சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டி எழுந்து நின்றான்.
கடல் பூதத்திற்கெதிராக ஒரு நீண்ட வசனம் பேச வேண்டும். தடுமாற்றமில்லாமல் பேசிவிட முடியுமா என்கிற கேள்வி அவனுள் எழுந்தது.குடுவையுடன் எழுந்த வேலுவைப் பார்த்து குழந்தைகள் எழுந்து நின்று கை தட்டின.இனி பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் பெரியவர்கள் கைதட்டுவார்கள்.கடல்மீதான மீனவனின் உரிமை.பூதத்தால் அழிக்கப்படும் மீனவர்களின் வலி.என ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு உள் அரசியல் இருக்கும்.பூதத்தின் கழுத்தில் கிடக்கும் சிகப்புத் துண்டுக்கும்,மண்டையோட்டு மாலைக்கும் கூட ஒரு அரசியல் சாயம் உண்டு.
எல்லாம் சரியாக செய்ய வேண்டும் என்கிற பதட்டம் வேலனுக்குள் எழுந்தது. ‘’ஏ ஹோய் ஏஹே ஹோய் கடல் தாயே உன் மகன் உன்னை காக்க வந்திருக்கிறேன்’’.என பேசத் துவங்கியபோது எழுந்த ஆரவாரம் கடல் பூதம் செத்துவிழும்வரை ஓயவில்லை.மேடை முழுவதும் புகையாய் இருந்தது.புகைக்கு மத்தியிலிருந்து பாலகிருட்டினன் இளவரசியாக வந்தான்.ஒரு பெரும் கைத்தட்டலோடு நாடகம் முடிந்தது.
அதுவரை வேலனுக்குள் அடக்கிவைக்கப்பட்ட மிருகத்தைப் போல இருந்த கண்ணீர் பீறிட்டுக்கிளம்பியது அவன் குலுங்கி அழத்துவங்கினான்.வேலனுக்கு நிம்மி இல்லாமல் இனி ஒரு போதும் நாடகம் நடத்த இயலாதென தோன்றியது.
கலைந்து கிடந்த மேடையில் ஒற்றை மனிதனாய் அமர்ந்தபடி இதுதான் தான் நடிக்கும் கடைசி நாடகமென தீர்மானித்துக் கொண்டான்.அது அவனை மேலும் துயரப்படுத்தி யது.லேசாக மழை தூறியது.சற்று முன் வேலனை ஒரு கோமாளியாகப் பார்த்து சிரித்த குழந்தைகளின் சிரிப்பெல்லாம் மழைத்துளியாய் விழுவதாக உணர்ந்தான்.
வேலனின் செல் ஃபோன் ஒலித்தது.நிம்மி மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.குற்றவுணர்ச்சியில் நீ தினம்தினம் படும் அவஸ்தையை தாங்க முடியவில்லை. என்னை மன்னித்துவிடு உன் உலகம் அழகானது அதனோடு வாழா பழகிக் கொள்.நிம்மி என்றிருந்தது. வேலன் மீண்டும் அவளது எண்ணுக்கு முயற்சி செய்தான் அவள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாள்.செல் போனை தூக்கி எறிந்துவிட்டு வேலன் எழுந்து நடக்கத் துவங்கினான்.அதன்பின் வேலன் ஒரு போதும் நாடகம் நடத்தவில்லை..நிம்மி உள்ளிட்ட யாரும் வேலனைப் புரிந்து கொள்ளவில்லை.வேலனைப் புரிந்து கொள்ள,, வேலனாய் வாழ வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)