Friday, April 13, 2012

புலிப்பால் கறக்கும் எருமை மாடு

அந்த ஊருக்குப் புலிப்பால் கறக்கக்கூடிய ஒரு எருமை மாட்டை தானம் தருவதென்றும்,அந்த எருமை மாட்டைக் கொண்டு நாடு முழுவதும் புலிப்பால் சப்ளைசெய்வதென்றும் அவர்கள் திட்டமிட்டபோது யாரிடமும் அதுகுறித்து கலந்தாய்வுசெய்யவில்லை.காரணம் அப்போது அது நாகரீகத்தை வடிகட்டிய கிராமமாக இருந்தது. அந்த கிராமமக்களுக்குப் புலிகள் குறித்தோ அல்லது புலிப்பால் தேவை குறித்தோஎந்த அறிவுத் தெளிவும் இருக்கவில்லை.அவர்கள் அறிந்த புலிகள் இரண்டேஇரண்டுதான் ஒன்று தேவர் பிலிம்ஸின் சினிமா புலி இதை அடக்குபவர்எம்.ஜீ.ஆர்.மற்றொன்று சீட்டா பைட் தீப்பெட்டியில் இருக்கும் வெட்டும்புலி அட்டைப்படம்.அப்படிப்பட்ட பகுதிக்கு புலிப்பால் கறக்கும் எருமை தானம் என்பதை அங்கிருக்கும் மக்களால் நம்ப முடியவில்லை.அன்று இரவே ஊர் கூட்டத்தைக்கூட்டினார்கள்.ஊரில் உள்ள எல்லோரும் கூட்டத்தில்கலந்து கொண்டார்கள். புலிப்பால் கறக்கும் எருமை வந்த பிறகு தங்கள் ஊரின்வளர்ச்சி அபரி மிதமாக இருக்கப் போகிறது என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தது.எருமையை கட்டிப்போடும் இடத்திற்கருகே ஒரு பெட்டிக்கடை யாவது போட்டுவிட வேண்டும் என எல்லோரும் நினைத்தார்கள். ஊர்கூட்டம் நடந்து கொண்டிருந்த மைதானத்தின் கடைசிமூலையில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு மட்டும் எருமைமாடு புலிப்பால் கறக்காது என்று தோன்றியது.அவன் எதுவும் சொல்லாமல் சுவர் மீது காலை ஊன்றியபடிநின்றான்.அவனது முதுகு பக்கத்தில் பிதா சுதன் பரிசுத்த ஆவியைக் கொண்டுஎம்மை ரட்சிப்பீராக-ஆமென் என்ற சுவர் வாசகம் இருந்தது. ’’அவங்க ஒரு எருமையைக் கொண்டு வந்து நம்ம எடத்துல கட்டி, புலிப்பால் தேவை இருக்கறவங்களுக்கு பால் கறந்து குடுக்கதுல நமக்கென்ன லாவம் ’’என்றுகேட்டான் கூட்டத்தில்ஒருவன். கூட்டத்திலேயே அதிகம் படித்தவரும்அறிவாளியாக கருதப்படுபவ ருமான ஒரு பெரியவர் எழுந்து தொண்டையைச் செருமியபடி’’அப்படி தனித்தனியா பெலனை எதுர்பாக்க ஏலாது.ஊருக்குள்ள அந்நிய நட மாட்டம்இருக்கும் அது நம்மள்ல கடகண்ணி வச்சிருக்கவுகளுக்கு யாவாரத்தக் குடுக்கும், வந்து போறவுக தங்கறதுக்கு ஒரு குடுசகிடுச போட்டுத்தரலாம் அதுலஒரு வருமானத்தப் பாக்கலாம்.எருமைக்குன்னு ஒரு கூடாரம் கட்டுவாவ அதுல சோலி கிடைக்கும்..இம்புட்டு எதுக்குடே எருமைக்குன்னு தனியா டேம்லருந்து தண்னி எடுத்துட்டு வாரவளாம். அந்தத் தண்ணில நாம ஒரு பயிறுபச்ச உண்டாக்கிக் கிடலாம்’’. பெரியவர் ஒவ்வொரு அணுகூலமாக சொல்லச் சொல்ல எல்லோரும் அதில் அவரவர் சாத்தியங்களைப் பொருத்திப் பார்த்துக் கொண்டார்கள். கூட்டத்திற்குள் ஒரு சிறு அமைதி ஏற்பட்டது. அப்போதுதான் அவன் அந்தஅற்புதமான கேள்வியைக் கேட்டான். ’’எருமை மாடு சாணி போடுமா?’’ எல்லோரும் அவனை வினோதமாகப் பார்த்தார்கள்.சிலர் வாய்விட்டுச் சிரித்தார்கள். ’’லேய் ..படுச்ச முட்டாளா இருக்கிய எருமன்னா சாணி போடாதா?’’ ’’இல்ல புலிப்பால் கறக்கற எருமயாச்சே எப்படி சாணி போடும்னு கேட்டேன்’’என்றான். பெரியவருக்கு தன் அறிவிற்கு எதிராக பேசுவது கோபத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.’’புலிப்பால் குடுக்க எருமை எப்படி சாணி போட்டா நமக்கென்னடே…இந்தாருங்கப்பா இது நம்ம ஊருக்கு கெடச்ச பெருமஅதுக்குத்தக்கன நடந்துக்கங்க.அவம் சொன்னான் இவன் சொன் னான்னு ஆரும்எதுவும் சொல்லப்படாது.எருமைய நாம காபந்து பண்ணி யே தீரணும் புலிப்பால்கறந்தே தீரணும்’’.அந்தக் கூட்டத்துக்கு ஒருமுற்றுப் புள்ளி வைக்கற மாதிரி அவரு பேச்சு ஓங்கி ஒலித்தது எல்லோரும் அந்தப் பேச்சுக்கு அடங்கினார்கள். அதுக்குப்பிறகு யாரும் எருமையப்பத்தி கெம்பல..கூட்டம்கலைந்தது. எல்லாரும் எருமைகூடாரத்துல நமக்கு ஒரு நல்ல சோலி கிடைக்கும் என்கிறதெம்பில் தூங்கப் போனார்கள். மறுநாளிலிருந்து ஊருக்குள் வேத்து் மனிதவாடை கொஞ்சம் தூக்கலாகவே இருந்துது. மண்ணைக் கிளறியபடி ஏதோ தஸ்ஷு புஸ்சு என்று என்னத்தையோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.’எருமைக்கு கூடா ரம் போடுததுக்கு ஒரு எடத்த ரெடி பண்ணுதாவ’’ என்று சொன்னான் ஒருத்தன்.’ஒத்த எருமைக்கு இம்புட்டு ஆராய்ச்சியா’ எல்லாரும் ஆச்சர்யப்பட்டார்கள். ’’மாடு என்னமோ எருமைன்னாலும் கறக்கறதுபுலிப்பாலாச்சே’’ என்றார் மீசைய நீவி விட்டுக் கொண்டேபூதப்பாண்டி.அவரு இதைக்கம்பீரமாகச் சொன்னபோது அவரு எடத்துக்குப் பக்கத்தில எருமைகட்டற எடத்தபாத்து கொண்டு இருந்தார்கள் அந்தக் கெப்புரு அவருக்குள் இருந்துது. ஒரு வழியாக் கடலுக்குப் பக்கத்துல ஒரு இடத்தைக் கண்டு பிடித்து இதுதான் எருமை கட்ட தோதான இடம் என்று முடிவு பண்ணினார்கள். எருமைய குளிப்பாட்ட கடலிலிருந்து தண்ணீர் எடுக்கப் போகிறார்கள் என்கிற யோசனை சிலருக்கு ஒருவிதமான பயத்தைக் கொடுத்தது காரணம் அவர்கள் அந்தப்பகுதியில் மீன்பிடித்துப் பிழைக்கிறவர்கள். ’’எரும குளிச்ச தண்ணில வாழமாட்டோம்னு மீனுவல்லாம் வேற திக்குக்கு போயிருமாம்ல’’ தனது சந்தேகத்தை முன் வைத்தான் புதிதாய் கடலாடும் ஒரு இளைஞன். அவனுக்கு ஒத்திசைவாய் மற்றொருவன் ’’ஒருகடல் தண்ணிய இந்த எரும ஒன்னா குளிக்குமாம்’’ என்றான். ‘’இவ்ளோ பெரிய கடல்ல ஒத்த எருமை குளிக்க எம்புட்டு தண்ணிய எடுத்துரப் போறாவ’’ என்று அமைதிப்படுத்தினார் ஒருவர். ஒரு நல்ல நாளாகப்பார்த்து எருமைக்கு கூடாரம் கட்டுவதற்கு வானம் தோண்டஆரம்பித்தார்கள்.அன்று அந்தக்கிராமம் பாக்காத ஆளையெல் லாம் பார்த்தது. ’’எங்கிட்டோ ஒரு மூலையில இருக்கற நம்ம மேல இம்புட்டு அக்குசா இருக்காகளே இனி எந் நாளும் இவுஹளுக்கு உம்மையா இருக்கணும்’’ ஒரு பெருசு வாய் விட்டு சொன்னார். பெரியபெரிய மனிதர்களெல்லாம் எருமையை அங்கு கொண்டுவந்து சேர்க்க பிரயாசையெடுப்பது சிலருக்கு ஒரு சந்தேகத்தை எழுப்பியது. இது ஏதோ ஒரு அழிவிற்கான வேலை என்கிற அச்சம் அவர்களுக்குள் எழுந்தது. ’’வெள்ளாமை வெளையற வயல்ல மண்ணள்ளிப் போட்டது கணக்கா என்னத்தயோ பண்ணப் போறாவன்னு தெரிஞ்சுபோச்சு.மாட்டை இங்கன கட்டக் கூடாதுன்னு பல ஊருக்காரவுஹ மறிச்சதும் மாட்ட எங்கனயும் கட்ட ஏலாம இங்ககொண்டாந்துருக்காங்க’’ என்று சொன்னவனை யாரும் மதிக்கவில்லை.. ’’எருமை… புலிப்பால் கறக்குங்கறது என்னமோ நெசந்தான் ஆனா அந்த எருமை கழியற சாணி ஆபத்தானது..இத எப்படியாவது நிறுத்திப் போட னும்.இது நம்ம பூமி இதுக்கு நாமதான் நல்லது செய்யணும்’’ என்றவன் அத்தோடு நில்லாமல் எருமையைக் கொண்டு வரக்கூடாது என குரல் கொடுக்க ஆரம்பித்தான். மாட்டைக் கொண்டு வர விரும்பிய மனிதர்களுக்கு இது பெரிய தலைவலியாக இருந்தது.எருமையை வாங்கவில்லை என்றால் எருமை வியாபாரிகள் ’இவ்வளவுதானா உங்க செல்வாக்கு’ என்று சிரித்து விடுவார்களே எனப் பயந்தார்கள்.இவர்களை மிரட்டித்தான் காரியம் சாதிக்கமுடியும் என முடிவெடுத்தவர்கள்.எருமை வேண்டாம் என்று சொன்னால் சுட்டுவிடுவோம் என மிரட்டினார்கள். அந்த மிரட்டலுக்கு யாரும் பயப்படவில்லை.எருமை வேண்டாம் என்கிற குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கத்துவங்கியது.ஆனபடி ஆகட்டும் என்று சுட்டார்கள்.ஒரு மரணபலியோடு அடங்கியது கூட்டம். அடங்கியது எருமை வேண்டாம் என்கிற கூட்டம் மட்டுமில்லை. வெளிநாட்டில் எருமை வியாபாரிகளுக்குள் சண்டை வந்து அவர்களுக்குள் பிரிவினை வர…, எருமைத்திட்டம் அத்தோடு அடங்கியது. .அப்போது நல்ல வியாபாரம் தெரிஞ்ச சிலர் கையில் அதிகாரம் இருந்துது. அவர்கள் வீட்டுமனை வியாபாரி மாதிரி நாட்டைக் கூறு கட்டி விற்க நினைத்தார்கள். அள்ளி தண்ணீர் குடித்த குளமெல்லாம் அழிந்தது.பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்கவில்லையென்றால் நோய் வரும் என்கிற நிலை உருவாகியது.வந்தேரிகள் பணம் சம்பாதிக்க சொந்த மக்களின் சங்கில் கூசாமல் ஏறி மிதித்தார்கள். நாடே சூனியம் பிடித்த மாதிரிதான் இருந்தது. தொழில் வியாபாரம், விவசாயம் எதுவும் விளங்கவில்லை.எல்லாம் புலிப்பால் இல்லாத குறைதான் என்று ஒரு பேச்சு இருந்தது.’’அந்த எருமையக் கொண்டாந் திருந்தா இந்தச் சீண்ட்ரமில்ல’’என்று எல்லாரும் பேசத்துவங்கினார் கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அந்த எருமைய கொண்டு வரும் திட்டத்தைத் திரும்பவும் தூசி தட்டி ஆரம்பித்தார்கள். ’’அடப்பாவிகளா வாங்கின விலைக்கு வந்துட்டீங்களே’’ என்று எருமை வேண்டாம் என்று சொன்ன கூட்டமும் மீண்டும் எழுந்து நின்றது. நாட்டைக் காப்பற்ற உயிரைக் கொடுப்போம் என்று சொல்லி கையில் காலில் விழுந்தவர்கள் வெங்காயத்தை விழுங்கிய கோழியைப் போல அமைதியாக இருந்தார்கள். எருமை வேண்டாமென்றவர்களின் குரலை அவர்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை நீங்க போடுகிற கூச்சலைப் போடுங்க..நாங்க செய்யுற வேலயச்செய்யுறோம் என்று இவர்கள் சத்தத்தை வகை வைக்காமல் எருமையக் கொண்டு வரும் வேலை நடந்துகொண்டு இருந்தது. அப்போதுதான் ஒரு நாட்டில் ஒரு எருமை செத்து பெரிய பிரச்னை ஏற்பட்டது.’’.அது மாதிரி ஒரு சூழ்நெல வந்தா என்ன பண்ணுவியோ? எருமைய நெனச்சாலே எங்களுக்கு பயமா இருக்குய்யா.. வேணாம்யா’’ என்று தயவு பண்ணி இவர்கள் கேட்கவும் .நாட்டில் இருக்கும் மாட்டு டாக்டரெல்லாம் ஒன்றாக அந்த ஊர்ல கூடி குமிந்தார்கள். ’’இது ஒரு நல்லஎருமை சாணியெல்லாம் போடாது புளுக்கைதான் போடும் என்று அடித்துச் சொன்னவ்ருக்கும் எருமைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.. ஆனால் அவர் முக்கியமான புழுக்கை விஞ் ஞானி. பெரிய பெரிய பதவியிலெல்லாம் இருந்தவர். ’’நம்ம மண்ணுல புரண்டு வளந்த மனுசன் எரும புழுக்கை போடும்னு சொல்லிட்டாரே’’ என்று எல்லாருக்கும் வேசடையாக இருந்தது. ’’ஆரு என்ன சொன்னாலும் எங்க போரு போருதான் எருமைய இங்க வளக்கக் கூடாது. வேணுமின்னா கூடாரம் கட்ட எம்புட்டு செலவு பண்ணுனியளோ அத வசூல் பண்ணி குடுத்துருதோம் என்று சொன் னார்கள் எருமை வேண்டாம் என்று சொன்ன கூட்டத்தார். எருமை வேண்டுமென்று ஒரு கூட்டத்தை அங்கங்கே உருவாக்கி அதற்கு மானியம் வழங்கிக் கொண்டிருந்தது அதிகார வர்க்கம். எருமை வேண்டாம் என்று சொல்கிறவர்கள் எங்கோ பணம் வாங்கிக் கொண்டு பேசுகிறார்கள்.அவர்கள் வேற்றுமதத்துக்காரர்கள்.இதில் சாதியும் மதமும் விளையாடுகிறது என நாளுக்கொரு கதைகள் புறப்பட்டுக் கொண்டிருந்தது. நாளுக்குநாள் எருமையை நினைத்து பயப்படும் கூட்டமும் அதிகரித் தது.ஒரு கருப்பு மனிதர் மட்டும் அவ்வப்போது வந்து இதோ எருமை வருகிறது அதோ எருமை வருகிறது என குரல் எழுப்பிக் கொண்டிருந் தார். எரும வேண்டும் என்று சொல்கிற எந்த மனிதனும் அந்தக் கூடாரத்துக்கு அருகே குடியிருக்கவில்லை. அங்கு குடியிருக்கும் மக்களின் கூக்குரலுக்கு ஒருவரும் செவி சாய்க்கவில்லை. மேல உங்களுக்கு இருக்கற பயம் போறவரைக்கும் எருமைய கொண்டார மாட்டோம்னு இங்கிட்டு ஒருபேச்சும் உங்க எருமைய இன்னும் ஒருமாசத்துக்குள்ள ரெடி பண்ணிருவேன்னு அங்கிட்டு ஒரு பேச்சுமா தாடிய நீவிகிட்டே பேசிக் கொண்டிருந்தார் அதிகாரத்துல இருக்கற மாமனுசன். ..இப்படியாக எல்லை தெரியாமல் போகிறது அந்தப் போராட்டம்.இதற்கு மத்தியில் அந்தப் போராட்டத்துக்கு சாதிமத சாயமெல்லாம் பூசப்பட்டிருக்கிறது.. 2 கதை எழுத துவங்கிய போதே இதை ஒரு முடிவற்ற கதையாக எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். எழுத நினைத்ததை யெல்லாம் எழுதிவிட்டது போல தோன்றினாலும் கதையில் ஏதோ ஒன்று குறைவது போல தெரிந்தது. நண்பன் கவி்தாவிடம் கொடுத்து கருத்துக் கேட்டபோது இது கதையே இல்லை.ஒரு மைய கதாபாத்திரம் இல்லாமல்இருப்பதால் கதையோடு ஒன்றமுடியவில்லை .அதுவுமில்லாம நீ குறியீடா சொல்லி இருக்கற புலிப்பால்,, எருமைமாடு இது எதையுமே ஃபாலோ பண்ண முடியல. அதனால கதையில ஒரு நம்பகத்தன்மை வரமாட்டேங்குது.அதை மட்டும் சரி பண்ணிட்டேன்னா ஒருவேளை இந்தக்கதை வேறொரு தளத்தை அடையலாம்.என்றான். இருவரும் அமைதியாக சிந்தித்தபடி இருந்தோம்.. ஒருவரி சொல்றேன்.அதுலஇந்தக்கதை முழுமையடையுமான்னு பாரு என்றேன். சொல்லு என்றான். அந்தக் கிராமத்தின் பெயர் கூடங்குளம்.

Thursday, January 5, 2012

நாடகம்

ஹோயே..ஹோ..அலைகளின் பேரிரைச்சலை மீறி கடல் அரக்கர்களின் ஓங்காரக்குரல் எழத் துவங்கிவிட்டது.சூறைக்காற்றின் ஆரவாரத்தோடு பெரு மழைக்கான அறிகுறிகளுக்கிடையேஸ கட்டியக்காரன் இளவரசி கடல் பூதத்தால் கடத்தப்பட்ட கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான். நீல தேசத்து இளவரசியைக் காப்பாற்ற இன்னும் அரைமணி நேரமே உள்ளது. வேலன் தனது ஓலைத்தொப்பியை தலையில் மாட்டியபடி துடுப்பை கையிலெடுத்துக் கொண்டு குறுவாளைத் தேடியபோது அவனது செல்ஃபோன் ஒலித்தது.i don’t wanna live wth u I’m leaving-nimmi.என நிர்மலா குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.வேலன் எதிர்பார்த்த செய்திதான் ஆனாலும்ஸஒரு நிகழ்ச்சிக்கிடையே அதுவும் இளவரசியை காப்பாற்றப் போகும் தருணத்தில் வருமென எதிர்பார்க்கவில்லை. வேலன் நிம்மியின் எண்ணுக்கு அழைத்தபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது,ஒரு வேளை அவள் சிம்மை கழற்றி தூக்கியெறிந்திருக்கக் கூடும்.மேடையில் கட்டியங்காரன் நீல தேசத்து மகாராஜா இளவரசியை கடல் பூதத்திடமிருந்து மீட்டுக் கொடுப்பவர்களுக்கு தனது தேசத்தில் ஒரு பகுதியை தானமாகத் தருவதாக தண்டோரா போட்டிருப்பதை சொல்லிக் கொண்டிருந்தான்.இதுவரை நாற்பத்தெட்டு முறை இளவரசியை காப்பாற்றி இருக்கிறான் வேலன்.அத்தனைக்கும் ராஜ்ஜியத்தில் பங்கு தருவதென்றால் அரசன் வேலனிடம் கொத்தடிமையாகத்தான் இருக்க வேண்டும். மகாராஜா மேடையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்..அவரது முகத்தில் பெருங்கவலையும் குழப்பமும் சூழ்ந்திருந்தது அவரது மனநிலைக்கு ஏதுவாக டிஜ்ருடு வாத்திய இசை ஒலித்துக் கொண்டிருந்தது..வேலனின் மனம் முழுக்க நிம்மியின் நினைவுகள் பெருகி வழிந்தது.நிம்மியின் இந்த முடிவு ஏதோ அவசரத்தில் எடுத்த முடிவென்று சொல்லிவிட முடியாது.கடந்த ஆறு மாதமாக அவளது பேச்சு விடைபெறுதலை நோக்கியே நகர்ந்து கொண்டிருந்தது. அவள் ஒற்றை கேள்வியில் மையம் கொண்டிருந்தாள். ‘நாம ஏன் சேர்ந்து வாழணும் வேலு..’”எங்கு துவங்கினாலும் அவளது பேச்சு இந்த வார்த்தையோடுதான் முற்றுப்பெறும். அந்த வார்த்தையை உபயோகித்தபிறகு அவள் வேறு எதுவும் பேசுவதில்லை வேலன் ஏதாவது பேசினால் கூட பதில் சொல்வதில்லை. டிஜ்ருடுவின் இசை வேகம் அதிகரித்தது.மேடையில் விளக்கொளி அணைய கட்டியங்காரன் ‘’வேலுமாமா துடுப்ப எடுத்துட்டு இளவரசியை காப்பாத்த கடலுக்கு வந்துட் டார்’’எனஇசையை மீறிய ஒரு குரலில் சத்தமாக சொன்னான். டிஜ்ருடு வாத்தியத்தின் ரூன் ட்டூன் ட்ரூம் ட்ரூம்..இசையோடு, காற்றில் துடுப்பசைத்தபடி வேலன் நீலப்புடவை அலைகளுக் குள்ளிருந்து வெளிப்பட்டான். வேலனின் துடுப்பின் வேகம் டிஜ்ருடு இசைக்கேற்ற தாளக் கட்டோடு இருந்தது. வேலுமாமா.. வேலுமாமா.. என குழந்தைகள் கோரசாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். தூய சவேரியார் கல்லூரி மைதானமே குழந்தைகளால் நிறைந்திருந்தது எல்லாம் ஃபாதர் சேவியரின் ஏற்பாடு.அவர் ஒரு குழந்தை மனிதர்.குழந்தைகளுக்கான கவிதைகள்,குழந்தை நாடகம் என அவரது சிந்தனை முழுக்க குழந்தைகளைச் சுற்றியே இருக்கும்.நிம்மிக்குக்கூட குழந்தைகளென்றால் உயிர்.‘’டேய் வேலுப்பிள்ளே உன்னை ஒரு குழந்தையாத்தாண்டா பாக்கறேன் அதான் உம்மேல இவ்ளோ லவ்வு’’என்பாள்.அந்த இவ்ளோவில் இருக்கும் ராகம் ஒரு இசையாய் இருக்கும். இந்தக் கல்லூரியில் வேலுவிற்கு இது இரண்டாவது நிகழ்ச்சி ஏற்கனவே வேலுவின் வீரதீரங்களை அறிந்த குழந்தைகளிடமிருந்துதான் அந்த ஆரவாரம் கிளம்பியது.வேலன் நடு மேடைக்கு வந்து நின்றபடி இளவரசிய காப்பாத்தப் போறேன் நீங்க வர்றீங்களா? என குழந்தைகளைப் பார்த்து கேட்டான்.ஆயிரம் குழந்தைகளும் உற்சாகமாக தலையசைத் தார்கள். என்னை மாதிரி துடுப்பு வலிங்க..என்றபடி வேலன்..ஏஹோய்..ஏஹே ஹோய் என பாடியபடி துடுப்பசைக்க குழந்தைகளும் ஒரு கணத்தில் வேலனாக மாறி துடுப்பசைத்தார்கள். பிரதான சாலையில் போகிறவர்களுக்குக்கூட கேட்கும் விதத்தில் அவர்களின் ஏஹோய் ஏஹே ஹோய் சத்தம் பெரிதாக இருந்தது. ஆயிரம் குழந்தைகளின் குதூகலத்தையும் மீறி வேலுவிற்குள் துக்கம் பெருகியது. இது போல ஒரு நாடக மேடையில்தான் முதல்முதலில் வேலு நிர்மலாவை சந்தித்தான். உறவையும் பிரிவையும் தீர்மானிக்குமிடத்தில் நாடக மேடைகள் இருப்பதை எண்ணி அவன் சிரித்த போது,வேலுமாமா என்கிற குரல் உச்சத்தைத் தொட்டிருந்தது. கடல் பூதம் அவனது பாய்மரப்படகை கவிழ்க்க சூறாவளிக்காற்றை ஏவிவிட்டிருப்பதை கட்டியக்காரன் சொன்னனான்.டிஜ்ருடுவின் ஓங்கார இசையோடு முரசின் ஓசையும் கலந்து அடிவயிற்றில் திம்திம்மென ஒலித்தது.வேலு நிலைகுலைந்தான் அவன் துடுப்பு கைநழுவிப் போனது.i don’t wanna live wth u.குறுஞ்செய்தி வாசகம் அவன் நினைவைவிட்டு அகலவில்லை. வேறெப்போதும் வேலன் இப்படி இருந்ததில்லை அரிதாரம் பூசியபிறகு அவன் அந்தக் கதா பாத்திரமாக மட்டுமே இருப்பான்.ஆனால் இன்று நிம்மியின் கணவனாக இருந்தான். I’m leaving எங்கே சென்றிருப்பாள்.வேலனுக்காக உறவுகளையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு வந்தவள். நீலதேசத்து இளவரசி மாதிரி ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கி இருப்பாளோ? என்கிற அச்சம் அவனுள் எழுந்தது.சூறைக்காற்றில் படகு உடைந்தது.வாள் சுழற்றியபடி கடல் அரக்கர்கள் வேலுவை சூழ்ந்தனர். ஒரு கடல் அரக்கனின் குண்டாந்தடி வேலுவின் மண்டையில் இறங்கியது..பாய்மரப்படகு இரண்டாக பிளந்து கடலுக்குள் வீழ்ந்தான் வேலு.குழந்தைகள் திகைப்புடன் பார்த்துக் கொண்டி ருந்தனர்.கடல் பூதத்தின் பேய் சிரிப்போடு விளக்குகள் அணைந்தது. ‘’திமிங்கில அடிமைகளே உங்கள் பசிக்கு இவனை இரையாக்கிக் கொள்ளுங்கள்’’ இருளில் கடல் பூதத்தின் குரல் ஒலித்தது. . மெல்லிய விளக்கொளியில் மேடையில் விழுந்துகிடந்தான் வேலு. குழந்தைகளின் பேரமைதி வேலுவை மேலும் துயரப்படுத்தியது.நிம்மி எங்கே சென்றிருப்பாள். வேலுவிற்கு தன்னை ஏதேனும் ஒரு திமிங்கிலம் விழுங்கிவிட்டால் நல்லது என்று தோன்றியது. வேலு கண் மூடினான்.அசைவற்றுக்கிடந்தான்..அப்படித்தான் கிடக்க வேண்டும். வெள்ளிமீன் வந்து, தான் கடல் பூதத்தால் தனது வம்சத்தை இழந்த கதையைச் சொல்லி அவனை பவளப் பாறை மறைவிற்கு எடுத்துச் செல்லும் வரை அப்படியே சலனமற்று கிடக்க வேண்டும். வேலுவிற்கு அந்த தருணம் பிடித்திருந்தது.எந்த பாவனையுமற்று இருப்பது அழகாக இருப்பதாக உணர்ந்தான். வேலுவின் வாழ்க்கை முழுக்க முழுக்க பாவனைகளால் கட்டமைக்கப்பட்டி ருந்தது.இருபத்தி இரண்டு ஆண்டுகளாக குழைந்தைகள் நாடகக்கலைஞனாக இருக்கிறான். தினப்படி நாடகம்.., இல்லையென்றால் ஒத்திகை இருக்கும்.சில சமயம் அன்றன்றா பட்சியாகவோ.. ஐராபாசியாகவோ வீட்டிற்கு வந்துவிட நேர்வதும் உண்டு. நிம்மி மிக நல்ல மன நிலையில் இருக்கும் போது ‘’வாடா பாவனை ராஜகுமாரா’’ என்றுதான் அழைப்பாள். நிம்மியின் வார்த்தைகளுக்குள் சொக்கிக் கிடந்த காலம் ஒன்று உண்டு. தஞ்சை கலைஇலக்கிய பெருமன்ற விழாவில்தான் வேலன் முதல்முதலாக நிர்மலா வை சந்தித்தான்.அன்று இளவரசியாக நடிக்க வேண்டிய பாலகிருட்டிணன் குடித்து விட்டு விழுந்து கிடந்தான்.அவனை தட்டி எழுப்பியபோது ‘’இளவரசிக்குத்தான் டயலாக் இல்லையே என்னை அப்படியே தூக்கிக் கொண்டுபோய் நிறுத்து நடிக்கிறேன்’’ என்று உளறினான்.’’ஏண்டா இடுப்பில இருக்கற வேட்டி அவுந்து கிடக்கறது கூடதெரியாம கிடக்கறே..இப்படியே எப்படிடா நடிப்பே’’ ‘’பட்டாபட்டி டவுசர் போட்ட இளவரசி புதுமையாத்தானே இருப்பா’’ என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பேராசிரியர் காமராசோடு வந்திருந்தாள் நிர்மலா நிர்மலாவின் சிரிப்பைத்தான் முதலில் பார்த்தான் வேலு. ‘’பட்டாபட்டி இளவரசி’’ என சொல்லிச் சொல்லி சிரித்தாள்.அவள் சிரிப்பு அடங்கவும் காமராசு ‘’என்னாச்சு வேலு இன் னைக்கு நாடகம் போட முடியாதா?’’ என அக்கறையோடு விசரித்தார்.’’இளவரசியா நடிக்க றதுக்கு யாராவது வேணும் சார்.’’வேலன் தனது பார்வையை நிர்மலாவைவிட்டு அகற்றாமல் காமராசுவிடம் கேட்டான். ”யேய் நான் இளவரசிடா.. என்னை எவனும் காப்பாத்த வேணாம். என்னைய நானே காப்பாத்திக்குவேன். நாங்க பாக்காத கடல்பூதமா? எத்தன மேடையில பாத்திருக்கோம் நேத்து கூட, கடல் பூதமும் நானும்தான் சரக்கப் போட்டோம்.ஒரு குவாட்டருக்குக்கூட தாங்க மாட்டான் மங்குனிப்பய அவன்லாம் கடல் பூதமா நான்சென்ஸ்””போதையில் பாலகிருட் டிணன் உளறினான்.கடல் பூதமாக நடிக்கும் குழந்தைசாமி பாலகிருட்டிணனின் புட்டத்தில் ஒரு மிதி மிதிக்க..,வேலனுக்கு அவமானமாக இருந்தது. ‘’நா வேணா இளவரசியா நடிக்கட்டுமா?’’வெகு இயல்பாக நிர்மலா கேட்டாள்.காமராசு நிர்மலா வை ஆச்சர்யமாக பார்த்தபடி, வேலனிடம் ‘’தெரிஞ்ச பொண்ணு உன்னைய பாக்கணும்னு சொல்லிச்சு அதான் கூட்டிட்டு வந்தேன்.அதுவும் நல்லதாப்போச்சு’’ என்றார். வேலன் அவருக்கொரு நன்றியை சொல்லிவிட்டு ஒத்திகையை ஆரம்பித்தான். வேலனின் நாடகத்தில் அதுவரை எந்தப்பெண்ணும் நடித்ததில்லை.அன்றைய நாடகம் வழக்கத்தைவிட சிறப்பாக அமைந்தது. நாடகம் முடிந்தபிறகும் அவர்கள் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். கல்லூரிக் காலத்தில்.., தான் வேலுவின் நாடகத்தை ஒருமுறை பார்த்திருப்பதாகச் சொன்னாள் நிர்மலா..விடை கொடுக்க பேரூந்து நிலையம் வரை வந்தாள் இருவரும் தங்களது எண்களைப் பறிமாறிக் கொண்டார்கள். அதன் பின் தொடர்ந்த போன் உரையாடல்களில் இருவரும் அவர்களுக்குள்ளிருந்த காதலை உணர்ந்தார்கள். ‘வீட்டில் வந்து பெண் கேட்கும் தைரியம் இருக்கா வேலுப்பிள்ளே’ என ஒரு குறுஞ்செய்தியை நிர்மலா அனுப்பிய மறுநாள் வேலு தஞ்சாவூரில் இருந்தான். நிர்மலாவின் அப்பா வெகு நிதானமாக பேசினார்.ஒரு கூத்தாடியுடன் தனது மகளின் வாழ்க்கையை பொருத்திப்பார்க்க விருப்பமில்லை என்றார்.அதையும் மீறி நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களானால் நான் தடையொன்றும் சொல்லப்போவதில்லை அப்படி திருமணம் செய்வதற்கு முன் எனக்கும் என் மகளுக்குமான உறவு முறிந்து போகும் என்றார். ‘’அப்பா இவரோட நா ரொம்ப தூரம் பயணப்பட்டுட்டேன்.இனி திரும்பி உங்க வழிக்கு என்னால வர முடியாது. எப்பவாவது நான் செஞ்சது தப்பில்லன்னு தோனினா என்னை வந்து பாருங்க.’’என்றபடி வேலுவோடு புறப்பட்டாள் நிர்மலா. அப்பாவின் நிதானமும் அழுத்தமும் அப்படியே நிர்மலாவிடம் இருந்தது வெறும் பேச்சுவார்த்தைக்கென்று வந்தவன் நிர்மலாவோடு திரும்பினான்.திருமண வாழ்க்கைக்கான எந்த ஏற்பாடும் வேலனிடம் இல்லை.பாலகிருட்டிணன்,குழந்தைசாமி இவர் களுடன் ஒரு அறையில் தங்கியிருந்தான் வேலன். நிர்மலாவிற்கு அவர்களோடு தங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை.அவள் அவர்களோடு மிகவும் அன்பாக இருந்தாள். பாலகிருட்டி ணனை இளவரசி என்றும்.குழந்தைசாமியை பூதமென்றும் அழைத்தாள். வேலனின் வாழ்க்கையில் நிர்மலாவின் வருகைக்குப்பின் பெரிய மாற்|றமிருந்தது. அவனது நடை உடைகளே மாறியிருந்தது.அடுத்த மூன்று வருடத்தில் ஒரு சொந்த வீடு கட்டும் அளவிற்கு வேலுவை மாற்றியிருந்தாள்.சொந்த வீடு கட்டியபிறகு தான் தனது வாழ்க்கை தன் கைவசப்பட்டதாக உணர்ந்தான் வேலன்.வேலுவின் காதல் காலம் அங்கிருந்துதான் துவங்கியது.சின்னச் சின்ன வார்த்தைகள்தான் நிம்மியிடம் எப்போதும் அழகு..’’குட்டிப்பையா’’ என அவள் அழைக்கும்விதத்தில் ஒருவித மயக்கம் இருக்கும். ஒரு நாள் ‘’எம்மேல உனக்கு கோபமே வராதாடா?’’ என்றாள். வேலனுக்கு அது வேடிக் கையாக இருந்தது. எதற்காக தன்னிடம் கோபத்தை எதிர்பார்க்கிறாள் எனபது அவனுக்குப் புரியவில்லை.’’எதுக்குக் கோபப்படனும்’’என்றான். ‘’போடா மக்கு பிளாஸ்திரி கோபத்துக்குப்பிறகு வர்ற அன்பு எப்படி இருக்கும் தெரியுமா?எங்க அப்பாவும் நானும் செல்லமா கோபப்படுவோம். யாரு முதல்ல பேசறதுன்னு ஒரு ஈகோ வரும் சுவரப்பாத்து ஒரு மூணுநாள் பேசுவோம்.அது எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?’’ நிம்மி அவள் அப்பாவை தன்னில் பார்க்க விரும்புகிறாளென வேலனுக்குத் தோன்றியது. நிம்மி அப்படி யோசிக்கக் கூடியவள்தான்.அவள் அப்பாவை விட்டு வந்த அன்று பேரூந்து பயணத்தில் வேலு. என் கையை அழுத்தமா பிடிச்சிக்கடா,.மனசுக்குள்ள இருந்து அப்பா கூப்பிட்டுகிட்டே இருக்காரு திரும்பிப் போனாலும் போயிருவேன் என்றாள்.அப்பா அவளுக்குள் அழுந்தப் பதிந்த மனிதன்.அவள் அப்படி தன்னை பார்க்க விரும்புகிறாள் என்கிற எண்ணமே அழகானதாகவும் வினோதமானதாகவும் இருப்பதாய் உணர்ந்தான் வேலன்.அதற்காகவே வேலன் அவனிடம் கோபப்பட விரும்பினான். பாலகிருட்டிணன் மீது குழந்தை சாமி மீது தினசரி வரும் கோபம் நிம்மியின் மீது வரத் தயங்கியது.நிம்மி உம்மேல கோவமே வரமாட்டேங்குது என வேலன் சொன்ன போது நிம்மி சிரித்தபடியே உன் கோபமும் என்னை லவ் பண்ணுதோ என்னவோ என்றாள்.அவள் அப்படிச் சொன்னவிதம் வேலனுக்குப் பிடித்திருந்தது. ஒருநாள் சமையலை காரணம் காட்டி பாவனையாய் அவளிடம் கோபப்பட்டான்.என் சமையல் பிடிக்கலன்னா என்மேல உனக்கிருக்கற அன்பு குறைஞ்சிட்டு வருதுன்னு அர்த்தம் நிம்மியும் அவனோடு பதிலுக்கு மல்லுகட்ட துவங்கினாள் அந்த சண்டை சில மணிநேரம் நீடித்தது.’’குட்டிபையா எம்மேல கோபமாடா’’ என நிம்மி அருகில் வந்து கேட்கவும் சிரித்தபடியே ‘’ஆமா’’ என்றான். ‘’அட முட்டாப்பயலே பேச்சுவார்த்தையில தீர்றபிரச்சனைன்னா அதுக்கு பேரு கோவம் இல்லடா ஊடல்’’ என்று வேலனின் தலையில் குட்டினாள்.சின்ன வயதில் அம்மா செல்லமாக குட்டுவது போல இருந்தது. அவள் மடியில்படுத்தபடி எனக்கு அம்மா இல்லாத குறையை நீ தீர்த்து வைக்கிறே என நெகிழ்ச்சியாகச் சொன்னான்.’’எனக்கு குழந்தையில்லாத குறையை நீ தீத்து வைடா’’நிம்மியின் இந்த வார்த்தைதான் அவர்களை வழிநடத்தி இந்த பிரிவின் எல்லையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. வெள்ளி மீன் தனது கதையை சொல்லி முடித்து பவளப்பாறைகளுக்கிடையே வேலனை இழுத்துச் சென்றது.வேலனின் காதிற்குள் இளவரசியை மீட்பத|ற்கான மந்திரத்தைச் சொன்னது.நிம்மியை மீட்டெடுக்கும் மந்திரத்தையும் யாரேனும் இப்படி காதிற்குள் வந்து சொன்னால் நன்றாக இருக்குமென வேலனுக்குத் தோண்றியது.மந்திரத்தை வேலன் உச்சரித்தான்.கடல் பூதத்தின் உடல் நடுங்கியது.கடல் ஜீவராசிகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அளவிற்கு சர்வ வல்லமை படைத்த தன்னை ஒரு சாதாரண படகோட்டி அழிக்க முனைவதா! என்கிற ஆத்திரத்தில் வேலனை அழிக்க சில்வண்டு ராட்சசனை ஏவி விட்டான்.மேடையின் மையத்தில் சில்வண்டு ராட்சசன் ஒரு கயிற்றில் தொங்கியபடி பறந்து கொண்டிருந்தான்.சில்வண்டு ராட்சஸன் மேடையில் தோண்றியதுமே குழந்தைகளின் உற்சாகம் கரை புரண்டது. இந்த நாடகத்திற்கென்று இரண்டடி குள்ள மனிதனை சில்வண்டு ராட்சஸனான தேர்வு செய்தது அவனுக்கான ஆடைகளை வடிவமைத்தது எல்லாம் நிம்மிதான். ‘’வர வர நீ சினிமா ஹீரோ மாதிரி ப்ளே போட ஆரம்பிச்சிட்டே..வேலுமாமாவால முடியாதது ஒன்னுமில்லங்கற மாதிரி இருக்கு உன் நாடகம்.ஹடில்ஸ் நிறைய இருக்கனும்டா அப்பத்தான் நாடகம்சுவாரஸ் யமா இருக்கும்’’.என்று சொல்லி சில்வண்டு ராட்சஸனை உருவாக்கினாள். சில்வண்டு ராட்சஸனுடன் பறந்தபடியே சண்டை போட வேண்டும்.இன்றைக்கு இருக்கும் மன நிலையில் அது சாத்தியமா என்று தெரியவில்லை.ஒரு கணம் கவனம்பிசகினாலும் கயிறு கை நழுவிப் போய்விடும்.குழந்தைகளுக்கு வேலுமாமாவின் மீதான பிம்பம் உடையும். வேலு தனக்குள் இருக்கும் துயரங்களை தூர வைத்துவிட்டு கண் மூடி மந்திரத்தை உச்சரித் தான்.மெல்ல வேலு அந்தரத்தில் எழத்துவங்கினான்.ஒரு தாளக்கட்டோடு குழந்தைகள் கைதட்ட ஆரம்பித்தார்கள். ‘’உனக்கென்னடா தினமும் ஆயிரம் குழந்தைகளப் பாக்கறே அவங்க வேலுமாமா வேலுமாமான்னு உன்னக் கொண்டாடுறாங்க அதுலயே வாழ்ந்து முடிச்சிருவே ஆனா நா இவ்ளோ பெரிய வீட்டுல ஒத்தையாளா இருக்கணும்.’’ஒரு நாள் நாடகம் முடித்து வீடு திரும்பியதும் நிம்மி கண்கலங்கி இதைச் சொன்னாள்.வேலனுக்கு அவளது வலி புரிந்தது. மறு நாள் மருத்துவமனைக்கு சென்றார்கள்.பல பரிசோதனைக்குப் பிறகு வேலனுக்கு ஒரு குழந்தை பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்கிற மருத்துவ உண்மையை அறிந்து கொண்டார்கள்.’ ’சரி விடு நமக்கொரு குழந்தை கொடுத்து வைக்கல’’ என்று அதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டாள் நிம்மி. ‘’ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம்’’ என்றான் வேலன்.’’என்னால தாய்மையை இரவல் வாங்க முடியாதுடா’’என்கிற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள். நிம்மி எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொண்டதைப்போல வேலனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.ஒரு புன்னகையில், ஒற்றை பார்வையில், ஒரு உடல் அசைவில் ஆயிரம் குழந்தைகளை கட்டி வைக்கும் தனக்கொரு குழந்தை இல்லையென்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.வீட்டில் இருக்கும் தனிமையை முதல்முதலாக உணர ஆரம்பித்தான் வேலன்அவனது இயலாமை அவனுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. நிம்மியின் தனிமையும்,வேலனின் இயலாமையும் அவ்வப்போது முட்டிக்கொண்டன. உனக்கொரு பத்து புள்ள பெத்துதரனும்டா..அதுதான் என்னோட லட்சியம்.திருமணம் முடிந்து வந்த போது அவள் தனது லட்சியமாக பறைசாற்றியதை தன்னால் துளியளவுகூட நிறை வேற்ற இயலவில்லை என்கிற ஆற்றாமையை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வீடு அவனுக்கு அன்னியமாகத் தெரிந்தது.நிம்மியின் புன்னகைக்குள் புதைந்துகிடக்கும் கண்ணீர்த்துளிகளை அவனால் பிரித்துப்பார்க்க முடிந்தது அதுவே அவனை தாங்க இயலாத துயரத்திற்கு இட்டுச் சென்றது. விந்து வங்கியின் உதவியோடு ஒரு குழந்தை பெறலாம் என நண்பன் சொன்ன யோசனையைச் சொன்ன போதுதான் முழுவீச்சாக நிம்மியின் மூர்க்கமான கோபத்தை வேலனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ‘’நா வாழ்க்கையில நேசிச்ச ஒரே ஆம்பள நீதாண்டா எனக்கு பத்தாங்கிளாஸ் படிக்கறப்போ அவனப் பிடிச்சது பன்னென்டாங்கிளாஸ் படிச்சப்போ இவன புடிச்சது கடைசியா உன்னைப் பிடிச்சதுன்னு வரல.பெத்தா உன் புள்ளயப் பெறுவேன் இல்லன்னா காலம் பூரா மலடாவே இருந்துட்டுப் போவேன்’’ என்று கத்தி தீர்த்துவிட்டாள். வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் நிம்மி அதன்பின் பேசுவது குறைந்து போனது. ‘’வரும்போது நாப்கின் வாங்கிட்டு வர்றியா’’ என நிம்மி கேட்கும் தருணங்களில் வேலன் மிகவும் உடைந்து போவான்.வாளால் சிரம் அறுத்தது போல உயிர் ஒருமுறை போய் திரும்பும். சில்வண்டு ராட்சஸன் நெஞ்சில் குறுவாளால் குத்தியபடி கடல் பூதத்தின் உயிர் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சொல்லுமாறு கேட்டான் வேலன்.ஆழக்கடலில் ஒரு குடுவையில் பூதத்தின் உயிர் இருப்பதை அறிந்து கொண்டான்.சில்வண்டை கொன்று போட்டுவிட்டு கடலுக்குள் மறைந்தான் வேலன். வேலனின் உடலுக்கு மேல் நீலப்புடவை அலைபரப்பிக் கொண்டிருந்தது.இன்னும் பத்து நிமிடங்கள் கடல் பூதத்தின் உயிரை எடுத்துவிட்டால் நீலதேசத்து இளவரசி வந்துவிடுவாள் அத்தோடு நாடகம் முடிந்துவிடும்.வேலனுக்கு நாடகம் எப்படா முடியுமென்றிருந்தது.ஒரு வேளை நிம்மியே மனது மாறி போனில் அழைத்தாலும் அழைப்பாளெனத் தோன்றியது அப்படி அழைத்தாளானால் நன்றாக இருக்கும்.நிம்மியை தான் தான் புரிந்து கொள்ளவில்லையென் பதை வேலன் உணர்ந்தான்.அவள் இயல்பாய் சொன்ன வார்த்தைகள் கூட அவனுக்குத் தவறாகப்பட்டிருக்கிறது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவள் வேலனை எத்தனையோமுறை சரி செய்ய முயன்றிருக்கிறாள்.ஒரு முறை ‘’நீயென்ன அவ்ளோ பெரிய இவனாடா மூஞ்சிய காட்டிகிட்டு திரியற..இந்த ஆயிரத்திஎண்ணூறு ஸ்கொயர் பீட் வீட்டுல ரெண்டே ரெண்டுபேருதான் இருக்கோம் ரெண்டு பேருமே பேசாம இருந்தா எப்படி?’’என்றாள் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தவனை வழிமறித்து அவள் இதைச் சொன்ன விதம் வேலனுக்குத் தவறாக தெரிந்தது.’’ஆமா நா ஒன்னும் பெரிய ஆளு இல்லதான்.உனக்கு ஒரு புள்ளய குடுக்கக்கூட வக்கில்லாதவந்தான் என்ன செய்யச் சொல்றே’’ என்றபடி அவளது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான். இரவு திரும்பி வந்த போது நிம்மியின் முகம் வீங்கியிருந்தது.வேலன் அதை கவனித்த போதும் எதுவும் கேட்காமல் அறைக்கு சென்றான்.நிம்மியும் எதுவும் பேசாமல் வந்து படுத்தாள். ஒரு கனத்த மௌனத்திற்குப் பிறகு ‘’உனக்கு என்னை சமாதானப்படுத்தனும்னு தோனலல்ல..’’ அவள் எங்கோ பார்த்தபடி சொன்னது வேலனுக்கு எரிச்சலை ஏற்படுத் தியது.’’நான் ஒன்னும் தப்பா பேசல..என்னோட இயலாமையச் சொன்னேன் அவ்வளவுதான்’’ என்றபடி திரும்பிப்படுத்தான். நிம்மி அப்போதும் அழுது கொண்டுதானிருந்தாள். காலையில் உணவு பரிமாறியபடியே ‘’இந்த ஆறுவருச வாழ்க்கையில உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் எனக்கு அர்த்தம் தெரியும் ஆனா நீ என் மனசைக்கூட புரிஞ்சுக்கல.இப்படி ஒரு வாழ்க்கை ஏன்னு எனக்கு புரியல நாம ஏன் சேர்ந்து வாழணும் வேலு’’ முதல்முறையாக அந்தக் கேள்வியை அப்போதுதான் கேட்டாள்.கடந்த ஆறுமாதமாக அந்தக் கேள்வியை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறாள்.இன்று அந்தக்கேள்விக்கான விடைதான் idon’t wanna live wth u. பாலகிருட்டிணன் ஒரு குடுவையை வேலுவின் அருகே உருட்டி விட்டான்.அதற்குள்தான் கடல் பூதத்தின் உயிர் இருக்கிறது. அதை திறந்தால் புகையாய் கிளம்பும் அந்த புகை முற்றி லுமாக வெளியேறியதும் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு கடல்பூதம் விழுந்து மரிக்கும். மேடையில் கலங்கிய புகைகளுக்கு மத்தியில் நீல தேசத்து இளவரசி தோன்றுவாள் அத்தோடு நாடகம் முடியும்.வேலன் தனக்குள்ளிருந்த சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டி எழுந்து நின்றான். கடல் பூதத்திற்கெதிராக ஒரு நீண்ட வசனம் பேச வேண்டும். தடுமாற்றமில்லாமல் பேசிவிட முடியுமா என்கிற கேள்வி அவனுள் எழுந்தது.குடுவையுடன் எழுந்த வேலுவைப் பார்த்து குழந்தைகள் எழுந்து நின்று கை தட்டின.இனி பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் பெரியவர்கள் கைதட்டுவார்கள்.கடல்மீதான மீனவனின் உரிமை.பூதத்தால் அழிக்கப்படும் மீனவர்களின் வலி.என ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு உள் அரசியல் இருக்கும்.பூதத்தின் கழுத்தில் கிடக்கும் சிகப்புத் துண்டுக்கும்,மண்டையோட்டு மாலைக்கும் கூட ஒரு அரசியல் சாயம் உண்டு. எல்லாம் சரியாக செய்ய வேண்டும் என்கிற பதட்டம் வேலனுக்குள் எழுந்தது. ‘’ஏ ஹோய் ஏஹே ஹோய் கடல் தாயே உன் மகன் உன்னை காக்க வந்திருக்கிறேன்’’.என பேசத் துவங்கியபோது எழுந்த ஆரவாரம் கடல் பூதம் செத்துவிழும்வரை ஓயவில்லை.மேடை முழுவதும் புகையாய் இருந்தது.புகைக்கு மத்தியிலிருந்து பாலகிருட்டினன் இளவரசியாக வந்தான்.ஒரு பெரும் கைத்தட்டலோடு நாடகம் முடிந்தது. அதுவரை வேலனுக்குள் அடக்கிவைக்கப்பட்ட மிருகத்தைப் போல இருந்த கண்ணீர் பீறிட்டுக்கிளம்பியது அவன் குலுங்கி அழத்துவங்கினான்.வேலனுக்கு நிம்மி இல்லாமல் இனி ஒரு போதும் நாடகம் நடத்த இயலாதென தோன்றியது. கலைந்து கிடந்த மேடையில் ஒற்றை மனிதனாய் அமர்ந்தபடி இதுதான் தான் நடிக்கும் கடைசி நாடகமென தீர்மானித்துக் கொண்டான்.அது அவனை மேலும் துயரப்படுத்தி யது.லேசாக மழை தூறியது.சற்று முன் வேலனை ஒரு கோமாளியாகப் பார்த்து சிரித்த குழந்தைகளின் சிரிப்பெல்லாம் மழைத்துளியாய் விழுவதாக உணர்ந்தான். வேலனின் செல் ஃபோன் ஒலித்தது.நிம்மி மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.குற்றவுணர்ச்சியில் நீ தினம்தினம் படும் அவஸ்தையை தாங்க முடியவில்லை. என்னை மன்னித்துவிடு உன் உலகம் அழகானது அதனோடு வாழா பழகிக் கொள்.நிம்மி என்றிருந்தது. வேலன் மீண்டும் அவளது எண்ணுக்கு முயற்சி செய்தான் அவள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாள்.செல் போனை தூக்கி எறிந்துவிட்டு வேலன் எழுந்து நடக்கத் துவங்கினான்.அதன்பின் வேலன் ஒரு போதும் நாடகம் நடத்தவில்லை..நிம்மி உள்ளிட்ட யாரும் வேலனைப் புரிந்து கொள்ளவில்லை.வேலனைப் புரிந்து கொள்ள,, வேலனாய் வாழ வேண்டும்.

Friday, December 30, 2011

நீர்மை....

நீர்மை [ முன் குறிப்பு: அன்வர் பாலசிங்கம் எழுதிய ‘வனமும் இனமும்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை ] வூடு ரெண்டுபட்டுப் போச்சுன்னு ஒத்தவரில சொல்லிர ஏலாது.எல்லாத்தையும் சரி பண்ண ஒன்னரை மணி தேரம் பிடிக்கும் அம்புட்டு கலப்பு கலைச்சிருந்தான் ஆதவன்.வாணி சுளீருன்னு அவம் முதுவுல ஒன்னு போட்டதுதான் தாமசம்,அடிபட்டவலியோட மேசை மேலருந்த மீன் தொட்டியைத்தள்ளிவுட்டான். தொட்டி உடைஞ்சு நடுக்கூடமெல்லாம் தண்ணி சிந்திச்சு. வாணி திகைச்சுப் போய் நின்னா.இனி அடிச்சு புரோசன மில்லன்னு நெனச்சிருப்பா.இல் லேன்னா அடிச்சு சலிச்சுப் போயிருப்பா.இவனை சமானப்படுத்தி குளிக்க வச்சு,பள்ளிகூடத்துக்கு அனுப்பறது சிரமம். இன்னைக்கு லீவுன்னு கூட யோசிச்சிருக்கலாம். பாலசிங்கம் அவசரமாக எந்தி ரிச்சு துடிச்சுட்டிருந்த மீனை ஒரு குவளையில தண்ணி புடிச்சு அதுக் குள்ள வுட்டாரு. பிரச்னை பெருசா ஒன்னுமில்ல அவன் பென்சிலைக் காணல. அதுக்குத்தான் இம்புட்டு ஆர்ப்பாட்டம். வாணியும், பாலசிங்கமும் மூச்சுக்காட்டாம இருந்தாவ. அதுவேற ஆதவனுக்கு கோவத்த கிளப்பிவுட்டுருச்சு. ஒருமூலைல போயி உக்காந்தாம், கைல கெடச்ச தலவாணியத் தூக்கிவுட்டெறிஞ்சாம். கேவிக்கேவி அழுதமானிக்கே ’’இந்த வூட்டுல நா எதவச்சாலும் காணாமப் போயிருது’ன்னான். ஆதவன் இதச்சொன்னதும் பாலசிங்கத்துக்கு வந்த சிரிப்பு இன்னமட்டும்ன்னு இல்ல. சத்தமா சிரிச்சாரு. வாணி எரிச்சலா யிட்ட்டா ஆதவனுக்கும் கூடக் கொஞ்சம் கோவம் வந்துருச்சு.’இப்ப என்னத்துக்கு சிரிக்கியோ’ன்னா வாணி. ’’இல்ல ஒரு சின்ன பென்சிலக் காணலங்கறதுக்கே வீட்ட அடிச்சுநொருக்கிப்போட் டானே நம்ம இனத்தையே மலையாளத்தானுவ களவாண்டு வச்சிருக்கா னுவளே அவனுவள என்ன செய்யுதது’’ன்னார் வாணிக்கு அவரு பேச்சுக்கால் ஒன்னும் புரியல. வாணி ஒரு பள்ளிகூடத்துல மூனாப்புபுள்ளயளூக்கு ரைம்ஸ் சொல்லித் தாற டீச்சரு. புள்ளய ளோட பழகிப் பழகி அவளும் என்ன சொன்னாலும் பேந்த்தப் பேந்த முழிக்கப் பழகிட்டா. ’’என்ன முழிக்கே ’’வனமும் இனமும்’’ன்னு ஒரு நாவல் எழுதறம்ல, அதோட மைய இழையே இதுதான. உனக்கு இப்படிச் சொன்னா புரியாது பள்ளிக்க்கூடத்துக்கு கெளம்புத வழியப்பாரு. நாவல் எழுதி முடிச்சதும் படிச்சுத் தெரிஞ்சுக்கோன்னு சொன்ன பாலசிங்கம் வரலாற ஆய்வு பண்ணுத மனுசன். பெரிய படிப்பும் கிடயாது,நெறைய எழுதுனதும் கிடயாது,தான் பாத்தது, கொண்டது, வாழ்ந்தது எல்லாத்தையும் சேத்துப் போட்டு ’கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’னு ஒரு நாவல எழுதிப் போட்டாரு..அதுலருந்த உண்மை சிலருக்குப் புடிச்சுது சிலருக்கு புடிக்கல. அவுகவுக திட்டியும், குட்டியும், தட்டிக்குடுத்து.. அவர ஒரு எழுத்தாளனா ஆக்கிப் போட்டாவ. இந்தா.. ரெண்டாவது நாவல எழுத பொறப்பட்டுட்டாரு. அதிச்சநல்லூர் வகையறாக்களோட முதுமக்கள் தாழி சிறு முனஞ்சில கண்டெடுத்த நாள் அது. அங்கனபோன தொ.பரமசிவம் அய்யா ஒரு சுடுமண் கிண்ணத்த எடுத்துட்டுவந்து,’’இது எங்க முப்பாட்டன் பொழங்குன பாத்திர பண்டம் இன்னைக்கு இதுல தான் வெஞ்சனம் வச்சி சாப்பிடனும்’னு சொன்னாரு.அன்னைக்குத்தான் பாலசிங்கம் தொ.பாவை சந்திக்கப்போனாரு. சிறுதெய்வங்களப்பத்தி எழுதி எழுதி தொ.பா. அய்யாவே ஒருசிறுதெய்வம் மாதிரி ஆயிட்டாரோன்னு அவரப் பாக்கற எல்லாத்துக்கும் தோனும்.அப்படி இருப்பாரு. தெக்குபசார்ல அடச்சகடத் திண்ணையில அவரு உக்காந்திருக்கற அழகே, ஒரு சொள்ள மாடசாமி கணக்காத்தான் இருக்கும் அப்படி ஒரு காபி குடிக்கற நேரத்துல தான் பாலசிங்கம் அங்கன போயி சேந்தாரு.’’அய்யா முதுவானப் பத்தி ஒரு நாவல் எழுதப்போறேம்.’’.ன்னு சொன்னாரு. உச்சி மோராத குறையா தொ.பா அய்யா கொண்டாடி மகிழ்ந்தாரு. ’’தமிழ்நாடு ஒருவந்தேறிப்பய நாடாயிப் போச்சுடா.. நம்ம தெய்வத்தைக் கண்டெடுக்குத மாறி, நம்ம மனுசனையும் கண்டெ டுக்கத்தான் வேண்டியதிருக்கு. முதுவான் தமிழன்டா..அவன் வரலாறை தொலக்கு’ன்னு சொன்னாரு. மக்கா நாளு, முதுவான் காட்டுக்குக் கிளம்பிப்போனாரு பால சிங்கம்.மனசுக்குள்ள எம்.டி.வாசுதேவன் நாயருக்கு ஒரு நன்றிய சொல்லிகிட்டாரு.செம்மொழி தமிழா? தெலுங்கா? கன்னடமான்னு ஒரு குடுமிபுடி சண்டை வந்தப்பதான், வாசுதேவன் நாயர் ஒரு கேள்வியக்கேட்டாரு.புலையர்களுக்கு முன்னால இருந்த மலை யாளஆதிவாசி யாருன்னு கேட்டாரு அப்பத்தான் மலையாளிகளுக்கு நம்ம முன்னோர்கள் யாருங்கற கேள்வியே மண்டையில ஒறைக்க ஆரம்பிச்சது. செம்மொழின்னு நாமளும் கோதாவில இறங்கணும்னா நமக்கு ஒரு பாரம்பரிய அடையாளம் வேணும்னு நெனச்சாவ.. அப்ப கிடச்சவந்தான் முதுவான். மூணாறுல போயி பாலசிங்கம் இறங்கி முதுவான் காட்டுக்குபோவனும்னு சொன்னாரு.அங்கன ஒருசாயா கடையில நின்ன மனுஷன்.’’முதுவான் காடுன்னு சொன்னா யாருக்கும் தெரியாது அதுக்குப்பேரு இடைமலைக்குடி, ராசாமலைக்கும், வால்பாறை மலைக்கும் இடையில இருக்கற பள்ளத்தாக்கு அங்க போறதுக்கு ஒருபதினாறு கிலோமீட்டர் நடந்து போகணும்’’ என்றார். பாலசிங்கம் சிரிச்சாரு ‘ஏல எம் மூப்பாட்டனக் கண்டுபிடிக்க ஒரு நூறு வருசம் பொறத்தால போவப்போறேன். இந்த பதினாறுமயிலு ஒரு தொலவா’ன்னு நெனச்சுக்கிட்டாரு. ராசாமலவரைக்கும் ஜீப்புல போறதுன்னு முடிவாச்சு.ஜீப்புக்கு என்னமோ பண்டுவம் பாக்கணும்னு டிரைவரு பூபதி எடுத்துட்டு போயிட்டான்.அந்நேரம் பாக்க ஒரு பெரியவர் அங்கன வந்தாரு. அவருக்கு ஒரு எம்பத்தஞ்சுவயசு இருக்கும். மலங்காடு வயசு ஏறஏற மனுசனுவள விளைஞ்ச தேக்கு கட்டையப் போல மாத் திருது.. எந்தப் புடிமானமுமில்லாம் பொறங்கைய கட்டிகிட்டு எறக்கத்துலருந்து மேல ஏறிவந்தாரு.மூச்சுவாங்குற பேச்சுக்கே எடமில்ல.நேரா வந்தவரு பாலசிங்கம் பக்கத்துல உக்காந்தாரு. ’’மோனே ஒரு சாயா’’ன்னு கடக்காரங்கிட்ட சொல்லிட்டு பாலசிங்கத்தை ஏற இறங்கப்பாத்தாரு. பாலசிங்கத்துக்கும் இந்த மனுசங்கிட்ட பேச்சக்குடுத்தம்னா ஒரு அம்பது வருசக் கதையையாவது சொல்லுவாருன்னு ஒரு நெனப்பு தோனிச்சு. பாலசிங்கம் மெல்ல பேச்சுக்குடுத்து, தான் எதுக்கு வந்திருக்கம்னு சொன்னாரு. கையில இருந்த டீயை வேகுவேகுன்னு குடிச்சவரு. கிளாசை டங்குன்னு பெஞ்சு மேல வச்சிட்டு ’’முதுவான் தமிழன்னு நினக்கு ஆரடா பரஞ்சது..வல்லதும் பரஞ்சு பெஹளம் உண்டாக்கறது கேட்டோ இவிட ஒருபாடு ஆள்காரர் உண்டு சவட்டிக்களையும் ””அவரது பேச்சில் பாலசிங்கத்தை மிரட்டும் தொனி இருந்துது.பாலசிங்கம் நிதானமா இருந்தாரு.’’இங்க ஒரு முருகன் கோவில் இருக்கே அதுல கார்த்திகை மாசத்துல முதநாளு முதுவான்கள் மட்டும் வந்து சாமி கும்பிடறாங்களே அது யேன்?’’ மலையாளிகளுக்கு முருகன் சாமி உண்டா’ன்னு ஒரே ஒரு கேள்விதான் பாலசிங்கம் கேட்டாரு. பெரியவருக்கு பதில் சொல்லத் தெரியல.. பெரியவர் அமைதியாக இருந்தாரு. பாலசிங்கம் ’’ரஹீம் பாய் உங்களுக்கே இந்த மூணாறு சொந்தம் கிடையாது.நீங்கள்லாம் பெரும்பாவூர்லருந்து வந்து குடியேறின முஸ்லீம்தான்.உங்களுக்கு முன்னால போடிமெட்டுலருந்து யாவாரம் பண்ணிட்டு இருந்தவரு கங்கணம் செட்டியார் கோவேரி கழுதையில சாமான்கள ஏத்திட்டு வந்து யாவாரம் பாத்தாங்க. அப்பத்தான் ஜாண்டேவிட் மன்றோ இங்க தேயிலத் தோட்டத்தை உருவாக்கினாரு. அதக்கணக்குப் பண்ணி நீங்க யாவாரம் பாக்க வரவும்தான் அவங்க இங்க யாவாரத்த நிறுத்துனாங்க தேயிலத் தோட்டத்துக்காக இந்தப் பூமிய விட்டுக்குடுத்தவங்க முதுவான் இனத்துக்காரங்கதான்’’அதனாலதான் இன்னைக்கும் இந்த மலைக் குப்பேரு கண்ணந்தேவன் மலைன்னு இருக்கு’’ தனக்குள்ல இருந்த வரலாற்றுல ஒருதுளியக் கிள்ளிப்போடவும் ரஹீம்பாய் அடங்கினாரு. இவங்கிட்ட பேரு சொன்னது தப்பாப் போச்சேன்னு நெனச்சாரு. பாலசிங்கம் வயசுக்கு அவரு சொல்ற சேதி ரஹீம் பாய்க்கு ஆச்சரியமாஇருந்துது இருந்தபோதும் தான் ஒருமலையாளிங்கறத உட்டுக்குடுக்காம பேசனும்னு பாலசிங்கத்தை மடக்கப் பாத்தாரு. ’’இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?’’பாலசிங்கத்தை அப்படியே பஸ்ஸப்புடிச்சு ஊருக்குப் போக வைக்கற கேள்வியக் கேட்டு புட்டோம்ங்கற நெனப்புல தாடியத் தடவிகிட்டே பாலசிங்கத்தைப் பாத்தாரு ரஹீம் பாய். ’’இடுக்கி டேம்ல ஒரு சில இருக்கே அது ஆரு சில? ஒரு முதுவானோட சிலை.இடுக்கி எங்க மண்ணுங்கறதுக்கு அந்தசிலை சாட்சி முதுவான் தமிழங்கறதுக்கு முருகன் சாட்சி’’.பாலசிங்கம் இதை சொல்லி முடிக்கவும் ஜீப் டிரைவர் பூபதி வந்து சேர்ந்தான். அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்த ரஹீம்பாயை பொருட்படுத்தாமல்..ஜீப்லஏறி உக்காந்தாரு பாலசிங்கம்.ஜீப்ப ஓட்டி கிட்டு வந்த பூபதி ’’அதென்னசார் மலையாளத்தான நம்ம ஆளுன்னு கூசாம அடிச்சுவுடுதிய.. எனக்கு போடிமெட்டு ஒரு பத்துவருசமா இங்கதான் தொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன். பாரஸ்டு வாட்சர் வேலை, செக்போஸ்ட்டு வேலையெல்லாம் முதுவானுங்கதான். இடமலக்குடிலருந்து வருவாங்க. ரெண்டொரு முதுவானுங்கல எனக்குத் தெரியும். மலையாளத்துலதான் கையெ ழுத்துப் போடுவாங்க’ன்னான்பூபதி. ’இல்லைய்யா மலையாளத்துல கையெழுத்துப் போட வச்சாங்க. அதுக்குன்னு ஒரு தனி அறிவொளி இயக்கமே நடத்து னாங்க’ன்னார் பாலசிங்கம்.. பூபதி அலுவுசமான ஒரு சேதியக் கேக்குற மாதிரி கேட்டுகிட்டு வந்தான். ’’ஒரு பதினஞ்சு வருசத்து முந்தி முதுவான் களை யாரும் கண்டுக்கிடல..மலையாளிகளுக்கு ஒரு பாரம்பரியம் வேணும்னுதான் அவங்கள தங்களோட பழங்குடியா அறிவிச்சு வேலை சலுகையெல்லாம் குடுத்தாங்க.’’ன்னாரு பாலசிங்கம். பூபதிக்கு பாலசிங்கம் சொன்ன வார்த்தையில அம்புட்டு நம்பிக்கை வரல.நாட்டுல சிலபேரு இப்படியும் இருப்பாங்கன்னு நெனச்சுகிட்டு பேசாம வண்டிய ஓட்டினான்.பாலசிங்கம் மலைய ரசிச்சுகிட்டே வந்தாரு. ’’ சின்னக்கானல் எஸ்டேட்டு இருக்கே அங்கனக்குள்ள ஒரு ரெசாட்கூட இருக்குமே’’ ன்னாரு பாலசிங்கம்.அவருக்கு ரெசாட் பேஎரெல்லாம் தெரியும் அவன பேச்சுக்குள்ள கொண்டு வரணும்னுதான் தெரியாத மாறி கேட்ட்டாரு. ‘’ஆமா சார் மகேந்திரா ரெசாட்டு பெரியபெரிய பணக்காரங்க வந்துபோறஎடம் நாகூட அங்கசவாரிக்குப் போயிருக்கேன்’னான்.. அதுக்கு எதுத்தாப்ல இருக்கற எடமெல்லாம் யாருக்கு இருக்கு. பூபதி தன் இயல்பாய் வண்டியை நிறுத்திவிட்டு ’’அட ஆமா சார் அம்புட்டு மதிப்பு உள்ள எடம் முதுவானுங்க கைலல்லா இருக்கு.எப்படி சார்..’’ ஒரு சின்ன நம்பிக்கை டிரைவருக்கு பாலசிங்கம் மீது வந்தது. ‘’முதுவான்கள் என்னைக்காவது ஒருநாள் நாங்க மலையாளிகள் இல்ல தமிழர்கள்னு சொல்லிரக்கூடான்னுதான் இம்புட்டு சலுகை’ன்னு பாலசிங்கம் சொல்லி முடிக்கவும் வாயடைச்சுப்போன பூபதி மெல்ல வண்டிய நவுத்துனான்.அதுக்குப் பொறவு ராசாமல வார வரைக்கும் ரெண்டுபேரும் பேசவேயில்ல. ராசாமலைல துரைக்குட்டின்னு ஒருமுதுவான் பாலசிங்கத்த கூட்டிட்டுப் போவக் காத்திருந்தான். மூனுபேருமா ஒருடீக்கடையில டீயக்குடிச்சாவ. இன்னும் மூனுமல ஏறிஎறங்கனும் பொழுதோட போயி சேரமுடியுமான்னு பாலசிங்கத்துக்கு கவலயாயிப் போச்சு. முதுவான் ’’அதெல்லாம் ரெண்டு எட்டுவிரசலா எடுத்து வச்சா போயிரலாம் அய்யா’ன்னு சொன்னான். வழியில் பசித்தால் சாப்பிடுவதற்கென்று இரண்டு நேந்திரங்காய் அப்பத்தை வாங்கி வைத்துக் கொண்டார்கள்.’’நாலுகடி மூனுகுடி’என கணக்கு தீர்த்த பூபதி,’’சார் என் நம்பரத் தர்றேன் நீங்க போவும் போதும் என் வண்டியிலதான்வரணும்’னான்.பாலசிங்கம் சரின்னு சொன்னாரு. ’’சொல்றேன்னு தப்பா நெனக்காதீய சார்.இந்த மலங்காட்டவிட்டு எறங்குதவரைக்கும்முதுவானுங்க மலையாளியில்லன்னு சொல் லாதிய என்னமும் பண்ணி போடுவானுங்க’ன்னான். பாலசிங்கம் சிரித்தார். ’’தமிழ்நாட்டுக்குள்ள மலையாளிகள் வாரதுக்கு பதிமூனு வழி இருக்கு.அதுல பன்னெண்டு வழியில அவங்க ஊடுருவி தொழில் செய்துகிட்டு இருக்காங்க செங்கோட்டை வழியா மட்டும் வரல.ஏன்னா மலையாளிகளுக்கு அருவான்னா பயம். அதுனால தான் திருநெல்வேலியில அவங்க காலடி எடுத்து வைக்கல.. நா திருநெல்வேலிக்காரன்’’னார்.பூபதி சிரிச்சுகிட்டே கை குடுத்து வழியனுப்பி வச்சான். இப்படி ஒருகாட்டுப் பயணம் பாலசிங் கத்துக்கு புதுசுஇல்ல.ஆனா இது ஆளறவமற்ற காடு ராசா மலையில நடக்க ஆரம்பிச்சா இடமலக்குடி வரைக்கும் இடையில ஒரு ஊருகூட கிடையாது. மனுச நடமாட்டமில்லாத காட்டுக்கு ஒருவாசனை இருக்கும் மண்ணும்,தண்ணியும் மலஞ்செடிகொடியும் சேந்து ஒருவாசம்வீசும் அத இன்ன வாசனன்னு சொல்ல ஏலாது. அப்படியொருவாசன அடிச்சுது. அந்தக் காட்ட வாசம் புடிச்சுகிட்டே போனாரு பாலசிங்கம்.செங்குத்தா இறங்குத பள்ளத்தாக்குல மட்டும் துரக்குட்டி முதுவான் கையப் புடிச்சுக் கிட்டாரு. அந்தஇடமலக்காட்டுக்கு போற பாதை பகல் நேரத்துலயே ரொம்ப குளுரா இருந்திச்சு.இம்புட்டு மல தாண்டி முதுவான் எப்படி இந்தக்காட்டுக்குள்ள போனாம்ங்கற கேள்வி பாலசிங்கத் துக்கு வந்திச்சு. துரக்குட்டி முதுவாங்கிட்ட அதக்கேட்டாரு.ஒரு பேச்சுக்காலபோட்டுகிட்டே போனம்னா, நடை தோத்தாதேன்னும் நெனச்சாரு .துரக்குட்டி ஒரு காட்டோடைல இருக்க பாறமேல உக்காந்தாம்.’’ஆரும் சொந்தங் கொண்டாடாத மூணாறு மலதான் எங்க எடமா இருந்திச்சு. ரெண்டாம் பல்லவ ராசாக்கமாரு தெக்க படையெடுத்து வந்தப்ப எங்கபொண்டுபுள்ளயள காப்பாத்திக்கறதுக்காகநாங்க கம்பம்மெட்டு வழியா பெரியாத்துக் கரையப்புடிச்சு பைனாவு வந்து அங்கன ருந்து இங்கன வந்து சேந்தோம்.அது ஆயிரத்த எண்னூத்தி அருவதாம் வருசம்.முதல்ல இந்தக் காட்ட இனங்கண்டு வந்து சேந்தது நாங்கதாம்’ன்னான். பாலசிங்கம் சிரிச்சாரு என்னமோ துரக்குட்டியே தலம ஏத்து கூட்டிகிட்டு வந்த மாறியும், இது ஏதோ முந்தாநேத்து நடந்த சம்பவம் மாறியும் சொன்னான் துரக்குட்டி.. ’’இது பெரும்ஆனைக்காடா இருந்துதுய்யா...எங்க பெரிய முதுவாங்க வழிவழியா சொல்லுதகதையில எம்புட்டோ சொல்லு வாங்க’’ன்னான். தூரத்தில் வரையாடுங்க கூட்டமா தண்ணி குடிச்சுகிட்டு நின்னுச்சுங்க..துரக்குட்டிய பாத்ததும் துள்ளு போட்டு கிட்டு திரிஞ்சுதுங்க. எம்புட்டு பாசமா பாக்குது பாருங்க..முதுவான் வாசனைக்கு ஒரு மிருகமும் அண்டாது.வேட்டையாடுற பழக்கம் இல்லைல்ல.. அதனால அச்சப்படவும் செய்யாது, அமயம் போடவும் செய்யாது’’ .என்றபடி நடக்கத் துவங்கினான். பாலசிங்கம் முதுவானுங்க ஒரு சைவப் பழங்குடின்னு நெனச்சுகிட்டே துரக்குட்டி பொறத்தால நடக்க ஆரம்பிச்ச்சாரு.இப்படியே ரெண்டு மலயக் கடந்துட்டாவ.. குளுரு உடம்ப ஈரமாக்கிச்சு இத்தனை குளுருலயும் முதுவானுங்க காலையில நாலுநாலரை மணிக்கெல்லாம் பதுனாறுமயிலு கால்நடையா நடந்து மூணா றுக்கு வாரது, பாலசிங்கத்துக்கு ஆச்சரியமா இருந்துது. நமக்கு பகல் குளுரையே தாங்க முடியலயே ராமானமே எப்படிவந்து சேருதாவன்னு.. யோசிச்சாரு. அதுவுமில்லாம மூணாறுலருந்து முதுவானுங்க ஏன் இடைமல நாட்ட நோக்கி நகந்தாங்கன்னு அவருக்கு குழப்பமா இருந்திச்சு. இந்த குழப்பத்துகெல்லாம் முதுவாங்ககுடிக்குப் போனதுக்குப் பொறவுதான் பாலசிங்கத்துக்கு வெடகிடச்சது. பொன்னப்ப முது வாந்தான். இப்ப இருக்கறதுலயே மூத்த முதுவான். அவருக்கு வயசு எம்பதுக்கும் மேல இருக்கும்ன்னு சத்தியம் பண்ணி சொன் னாக்கூட ஆரும் நம்பமாட்டாவ.திரட்டிஉருட்டி வச்ச மாறி அப்படி ஒரு தேகம் அவருக்கு. பாலசிங்கம் வாரசேதி அங்க எல்லாருக்கும் தெரிஞ் சிருக்கு.பொண்டுகள எல்லாம் ஒரு குடுசைக்குள்ள வச்சுட் டுத்தான் பாலசிங்கத்தை உள்ளவர அனுமதிச்சாவ இப்பவும் முதுவான் குடிக்குள்ள அம்புட்டு சீக்கிரமா ஆரும் போயிர ஏலாது. ராத்திரி நிலா வெளிச்சத்துல வச்சு பொன்னப்ப முதுவான் பேச ஆரம்பிச்சாரு. ’’அய்யா முதுவான் ஆருகிட்டயும் சண்டைக்குப் போவாதவன் .அவன் மானத்தக் காக்க மலையேறினவன். காட்டைத் துலக் கறதும், அதவுட்டுக் குடுத்துட்டு வாரதும் தான் காலகாலமா முதுவானுக்கு இருக்க சாபக்கேடு. மூனு ஆறும் சங்கமிக்கற அந்த எடத்த கண்டுபுடிச்சி அதுக்கு மூனாறுன்னு பேருவச்சதே முதுவாந்தான்யா..வெள்ளக்காரன் தேயிலத்தோட்டத்தை போடனும்னு வந்தப்போ அவனுக்கு உதவி செய்ய முதுவான் பயந்து போனாம். நம்ம இடத்துக்குள்ள இவன வுடுறதான்னு யோசிச்சான்.சண்டை போட்டுவிரட்டலாம். ஆனா தோத்துப் போயிட்டா,அடுத்தாப்ல பொண்ணுபுள்ளய மேலதான் கைய வப்பான்.அது மானக்கேடுன்னு முடிவு பண்ணி ராத்திரியோட ராத்திரியா மூணாரைக் காலிபண்ணிட்டு போற துன்னு முடிவெடுத்து மலை எறங்க ஆரம்பிச்சாங்க அப்படி வந்து சேந்த இடந்தான் இந்த எடமலக்குடி.அப்ப முணாத்துலருந்து இடுக்கிக்கு வார தண்ணிய கல்லப்போட்டு மட்டுப்படுத்துனது முதுவானுங்கதான். வெள்ளக்காரனுக்கு கொஞ்சம் நன்றி விசுவாசம் இருந்திச்சு.அந்தமலைக்கு ஒருமுதுவான் பேரை வச்சான். அய்யா அது கண்ணன்தேவன்மலை இல்லையா?கந்தன்தேவன்மலை.. காலப்போக்குல கந்தந்தான் கண்ணனா மாறிப்போச்சு’ன்னார் பொன்னப்ப முதுவான். முதுவான் பேசி முடிச்சதும் பாலசிங்கம் தனக்குத் தெரிந்த வரலாறை சொல்ல ஆரம்பிச்சாரு. ’’எக்குத்தப்பாத்தாம்யா இந்தமண்ணு நம்ம கையவிட்டு போயி ருச்சு. வெள்ளக்காரன் இக்ரிமெண்டு போடுதப்போ முதுவாங்க மூணாறுல இல்ல அதனால பூஞ்சார் அரசர்கிட்ட இக்ரிமெண்டு போட்டுட்டான்.அவன் இந்த நாட்டவுட்டு போறப்போ எல்லா எஸ்டேட்டையும் டாடாகைல குடுத்துட்டு போயிட்டான் .அதுக்குப் பொறவுதான் மூணாறுல மலையாளிகளோட எண்ணிக்கை அதிகமாயிருச்சு’’ன்னார். முதுவான் அமைதியா கேட்டுகிட்டு இருந்தாரு. ’’அய்யா நீங்க ஒன்னு பண்ணுங்க அடிமாலிக்குப் போங்க அங்க பூஞ்சார் இளவ ரசரை பாருங்க அவருநெறய சேதி சொல்லுவாரு’’ன்னாரு. முத்து ரத்தினம் துரச்சி இப்படித்தான் முதுவானுங்கள்ல நெறையபேருக்கு பெயர் வச்சிருக்காவ..பாலசிங்கத்துக்கு முது வாங்க பேசுறது ஈழத்தமிழ் மாதிரி இருந்துது. ஒரு பத்து நா அங்கணயே தங்கியிருந்து முதுவான்களோட வாழ்க்கை முறைய தெரிஞ்சுகிட்டு அடிமாலிக்கு கிளம்பினாரு பால சிங்கம். அங்க ஒரு அணுகுண்டோட காத்திருந்தார் பூஞ்சார் மன்னரோட வாரிசு விஜயகுமார். ஜீப்பக் கொண்டுவந்த பூபதி கூடவே வேலன்னு ஒருத்தர கூட்டிகிட்டு வந்தான். வேலனுக்கு பாலசிங்கத்த பாத்ததுல அம் புட்டு சந்தோசம். ‘’உங்களப்பத்தி பூபதி சொன்னான் சார். நல்லா எழுதுங்க’’ன்னான். தன் இயல்பாய் அவன் ஜீப் டயர்மேல் ஒரு காலத்தூக்கி வைச்சு கம்பியப்புடிச்சுட்டு பேசிக்கிட்டிருந்தது ஏதோ வட்டிவசூலுக்கு வந்தவன் பேசிட்டு நின்னமாறி இருந்திச்சு. கொஞ்சம் கரடுமுரடா இருந்தான்வேலன். ’’எஸ்டேட்ல வேல பாக் கறேன் சார்.இங்க என்ன பிரச்சனைன்னாலும் அவங்க ஒன்னும் செய்யமுடியாது.கீழஅடிமாலி வரைக்கும் நாமதான் இருக்கோம் . நம்ம தயவுஇல்லாம இங்க ஒருபய கதையும் செப்பெடுக்காதுண் ணே’ன்னு அவன்சொன்னது போறபோக்குல இடுக்கிமாவட்டத்த தமிழ்நாட்டோட சேத்துட்டுப் போயிருங்கண்ணேன்னு சொன்ன மாதிரி இருந்தது. அவங்ககிட்டருந்து விடைபெற்று பஸ்ஸுல ஏறி உக்காந்தாரு பாலசிங்கம்.வேலன்சொல்லுதது.நெசந்தான்.மலையாளி தமிழன்னு என்ன பிரச்சனை வந்தாலும் இடுக்கிலயோ மூணாத்துலயோ அது பெருசா பாதிக்கறது இல்ல.காரணம் இங்க தமிழங்க அதிகம்.எலக்ஷன்லயே அவங்க ஜெயிக்க முடியாதுங்கறதுதான் நிலமையா இருக்கு. முதுவான்களப்பத்தி ஒரு ஆய்வு பண்ணலாம்னு முடிவு எடுத்தப்பவே முதல்ல பாலசிங்கம் தேடுனது மூணாறு மக்களச் சுத்தி இருக்கற அரசியலத்தான். உடுமஞ்சோலை, தேவிகுளம், பீர் மேடு, கட்டப்பனை, இங்கல்லாம் ஒரு தமிழந்தான் தேர்தல்ல ஜெயிக்க முடியும்ங்கறதுதான் நெலமையா இருக்கு.ஒருசட்டமன்ற உறுப்பினரை தீர்மானிக்கற சக்தியா இருக்கறமக்கள்இரண்டாங்கட்ட குடிமக்களா இருக்கறது பாலசிங்கத்துக்கு ஆச்சர்யமா இருந்துது. இடுக்கி மாவட்டத்துல ஒருஇருவது, இருவத்தஞ்சு தமிழன் பஞ்சாயத்து தலைவனா இன்னைய வரைக்கும் இருக்கான். .இப்ப டிப்பட்ட ஒருபூமி தமிழ்நாட்டோட இல்லாம போனதுல ஒளிஞ்சுக் கிட்டு இருக்கு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதுல இருக்கற அரசியல். இப்படியே பலதையும் யோசிச்சமானிக்கு அடிமாலிக்கு போயி சேந்தாரு பாலசிங்கம். அடிமாலிங்கறது வேற ஒன்னும் இல்ல அடிமலைங்கற வார்த்தையத்தான் அவுக அப்படி சொல்லுதாகன்னாரு பூஞ்சார் இளவரசர்..நான் ஒரு தமிழன்னு தன்னை அறிமுகப்படுத்திக் கிட்டாரு அவரு பேரு விஜயகுமார்ன்னு சொன்னாரு. உண்மை யிலயேஅவருபேரு சுந்தர்ராஜன் சுத்தமான மலையாளத்துல பேசி னாரு .பாலசிங்கத்துக்கு அவரு தமிழன்னு சொன்னத நம்பமுடி யல, முதுவான் நம்ம இனம்ப்பாங்கற அவரோட உரிமை பாலசிங்கத்துக்கும் பிடிச்சிருந்தது.’’இப்படித்தான் ஒரு நா மூணாறு ஹைரேஞ்சுக்கு போயி நீங்கள்லாம் எங்கசாம்ராஜ்யத்துக்கு உள்ள வாழறவங்க. சீக்கிரமா இந்தமண்ணை நாம மீட்டு எடுப்போம்ன்னு சொல்லிட்டு வந்தேம் ஆமா..நான்தமிழன் இது எம் பூமின்னு ஒரு வழக்கு கேரளகோர்ட்டுல இருக்கு.. கடைசி வரைக்கும் போராடு வேன் சேட்டனுவள சும்மா உட மாட்டேன்’’னு அவரு சொன்னது இந்த வரலாற்று நாவலுக்கு ஒரு முக்கியமான ஆவணம்னு பாலசிங்கத்துக்கு தோனிச்சு. மறுபடியும் மூணாறுக்கே திரும்பி வந்தாரு பாலசிங்கம். இடுக்கி கலக்ட்ரேட்லயும் மூணாறு தாலுகாவுலயும் தரவுகள எடுக்குதது அவ்வளவு சுலபமா இல்ல.ஆயிரத்தெட்டு கேள்விகள கேட்டு உசுரப் புடுங்கிட்டாவ. ஒரு மூணுமாசம் மலையாளத்தான் கிட்ட மல்லுகட்டி எல்லாத் தரவுகளையும் தேடியெடுத்தாரு பால சிங்கம்.முதுவான் தமிழந்தான்னு நெஞ்சு நிமித்தி சொல்லலாம்ங்கற நம்பிக்கை வந்ததுல தெண்டி,பட்டின்னு அரசாங்க வேலயில இருக்கற மலையாளத்துக்காரன் திட்டுனது மனசுல நிக்கல.ஆனா மலையாளிங்க எல்லாரும் திட்டுனாங்கன்னு சொல்ல ஏலாது. எல்லா எனத்துக்குள்ளயும் சில மனுசங்க இருப்பாங்க.. ,அதுல சில மனுசனுக்குள்ள ஞாயமான மனசு இருக்கும் அப்படி ஞாயமான மனசு இருந்த மலையாளிகள்ல சிலபேரு பால சிங்கத்துக்கு உதவியா இருந்தாங்க. ஒரு வழியா ஊரு வந்து சேந்து வனமும் இனமும்ங்கற பேருல கதைய எழுதஆரம்பிச்சாரு பாலசிங்கம் எழுத எழுத தமிழன் மேல இருக்க ஆத்தாமை பொங்கி வந்திச்சு. மண்ணு, மனுசன், தண்ணி மூனையும் பறி குடுத்துட்டு நிக்கற தமிழன நினச்சா பாவமா இருந்திச்சு. அதேசமயம் இன்னமும் தமிழன் மாபெரும்வீரன், போர்குணம் மிக்கவன்னு, பழம்பெருமை பேசிக் கைத்தட்டு வாங்கிட்டு திரியுத அரசியல்வாதிங்க மேல கோவம் வந்திச்சு. அப்பத்தான் முல்லைபெரியாரு அணைய உடைக்கனும்னு கேரளாவுல பிரச்சனைய ஆரம்பிச்சு வச்சாவ. சர்தாம் நாம் ஒரு நல்ல சந்தர்பத்துலதான் இந்தக் கதைய எழுதுதோம்ன்னு நெனச்சுகிட்டாரு பாலசிங்கம். அடிக்காக, .துரத்தி உடுதாகன்னு தினம் ஒரு சேதியா வந்து சேந்திச்சு. அங்க தமிழம் மேல ஒரு கொல வெறிய தூண்டுத வேலைய மலையாளத்து அரசியல்வாதிக செய்ய ஆரம்பிச்சாக..இங்க நாம் தனுஷோட கொலவெறி பாட்ட தூக்கிகிட்டு திரிஞ்சோம். டேம் நல்லாருக்கு இடிக்கப்படாதுன்னு அங்கொன்னும் இங்கொன்னுமா பேச்சுக்கால் ஆரம்பிச்சது.ஆனாலும் ஆரம்பிச்ச பொகச்சல் ரெண்டு பக்கமும் நிக்கல காணாக்கொறைக்கு டேம் 999ன்னு ஒருபடத்த வேற எடுத்துவுட்டாக. அது இன்னும் பத்திக்கிச்சு. அணை உடைஞ்சிரும் போலருக்கு, நாம எல்லாம் சாவப்போறம்ன்னு மலையாளிகளுக்கு பயம் வந்திச்சு. அவுகளை யும் குற சொல்ல ஏலாது. நம்மகிட்ட எவனாவது இப்படி ஒரு புளுகுமூட்டைய அவுத்துவுட்டா நாமளும் வேசடையாத் தான் கிளம்புவோம்.அப்படித்தான் கிளம்புனாவ இதுக்குள்ள ஒரு அரசி யல் கிடந்து வெளையாடுதுன்னு ஆருக்கும் புரியல.. தேயில தோட்டத்துக்கு வேலைக்குப் போன அப்பாவி சனங்கள மானபங்கப்படுத்தி அடிச்சு துரத்தியிருக்காவ. கைப் புள்ளயோட ஆனை காட்டு வழியா, ஓட்டமும் நடையுமா வந்த பொண்டுபுள்ளயள நெனச்சி எல்லாரும் கைசேதப்பட்டுக் கிட்டி ருக்க, ஆருக்கு வந்த விருந்தோன்னு வேடிக்கை பாத்துட்டு இருந்துது மத்திய சக்காரு. வூடு ரெண்டுபட்டு போச்சுன்னு ஒத்த வார்த்தையில சொல்லிரயேலாது.எல்லாத்தையும் சரிபண்ண ரொம்ப காலமாவும். அம்புட்டு கலப்பு கலச்சி போட்டாவ.. இத யோசிச்சமானிக்கே ஆதவன் கலச்சுப் போட்ட வீட்டை ஒழுங்குபடுத்திட்டு இருந்தாரு பாலசிங்கம். அப்பத்தான் பக்கத்து வீட்டுப்பையன் மலையாளத்தான் கடைய அடிச்சி நொருக்கிப் போட்டாவன்னு வந்து சொன்னான். செத்த ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்னு மனசு கேக்காம போனாரு பாலசிங்கம். காலையில முத டீயை அந்த பாவா கடையிலதான் பாலசிங்கம் குடிப்பாரு.அந்த பாசம் மனச அறுத்துகிட்டு இருந்துது. பாலசிங்கம் போறதுக்குள்ள அங்க தகறாரு எல்லாம்முடிஞ்சி போயிருந்துது. கூடி நின்னவுகதான் கடைய நொறுக்குனவுகள சத்தம் போட்டு விரட்டியிருக்காவ. பெரிய சேதாரம் ஒன்னும் இல்ல.ரெண்டு பாட்டில ஒடச்சுப் போட்டுபோயிருக்காவ. அவ்வளவுதான். பாவாபையன் வகாபு தான் கடையில இருந்தான் பாலசிங்கத்தைப் பாத்ததும் அங்க நடக்கற கலவரத்துக்கு நாங்க என்ன பண்ணுவோம்ன்னு கலங்குனான்.பாலசிங்கம் அவன் தோள ஆதரவா புடிச்சிகிட்டாரு. இங்க உன்ன அடிச்சவனும் தமிழன், அவங்கிட்டருந்து உன்ன காப்பாத்தினவனும் தமிழன் ஆனா அங்க இப்படியில்ல. உங்களவிடஎங்களுக்கு நீர்மை ஜாஸ்தி.அதனாலதான் பெரிய பிரச்னை எதுவும் இல்லாம வாழ்ந்துகிட்டிருக்கிய.. தமிழன் எல்லாத்தையும் விட்டுக்குடுப்பான். ஆனா விட்டுக் குடுக்கற குணம் மட்டுமே தமிழன் குணம் இல்ல..புரிஞ்சுக்கங்கன் னார் பாலசிங்கம். புரிஞ்சுக்குவாங்கன்னு தான் பாலசிங்கத்துக்கு தோனிச்சு என்ன இருந்தாலும் படிச்சவங்க இல்லியா.? புகைப்படம் : தேனி ஈஸ்வர் .

Friday, December 10, 2010

குமார் தையலகம்…

தாமிரா...

குமாரைச்சுற்றி வட்டம்,சாய்சதுரம்,செவ்வகம்,அருங்கோணம்,முக்கோணம் போன்ற ஒருகூட்டம் எப்போதும் இருக்கும்.அது குமாரின் நண்பர்கள் கூட்டம்.அவரது ஆத்மார்த்த நண்பர்கள் என ஒருபட்டியல் எடுத்தால்,அதற்கான ரேஷன்கார்டை ஒரு அம்பதுபேர் வைத்திருப்பார்கள்.

குமாருக்கு அலியார் ராவுத்தர் உரக்கடை மாடியில் ஒரு தையலகம் இருந்தது. ஸ்கூலைக் கட்டடித்துவிட்டு வரும் ஜேக்கப் புத்தகப்பை வைக்க,அலியார்மகன் அக்பர் திருட்டு தம் அடிக்க,பாண்டியன்.டன்..டன் முரட்டுசங்கீதத்தோடு தூங்க,தவசிஅரசியல் பேச, என பல்நோக்குதிட்டத்தில் தையல் தவிர அங்கு எல்லாம் நடந்தது.வந்து போகி றவர்களுக்கான டீ செலவிற்கு அவ்வப்போது துணிதைப்பார் குமார்.

’’எடே..சீட்டு விளையாட ஒருகை குறையுது வந்து உக்காருடே,’’ என தளவா அழைத்தால்போதும்,வெட்டிக்கொண்டிருக்கும் துணியைக்கூட, அப்படியே போட்டுவிட்டு வந்து அமர்வார் குமார்.தையல்கடை சீட்டாட்டக் களமாகும். கார்டைக் கையில் பிடித்தபடி’’குமாரே..நீ துணிகுடுக்கலங்கறதுக்காக எவனும் அம்மணமா போவமாட்டான்டே கவலப்படாம விளையாடு’’ என்பான் தளவா.

குமார் எல்லோரையும் கெடுக்கிறார் என்கிற பேச்சு ஊருக்குள் இருக்கிறது. உண்மையில் குமாரைத்தான் எல்லோரும் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். யார் வேண்டுமானா லும் ஒருமுறை வந்து கெடுத்துவிட்டுப் போகலாம் என்கிற அளவிற்கு, குமார் நல்லவர்.

அடிப்படையில் குமார் ஒரு நாத்தீகர் ஆனால் அவரது நாக்கில் எப்போதும் சனி குடி கொண்டிருக்கும்.அந்த சனி எழுந்து ஒருநாள் கரகாட்டம் ஆடியபொழுதுதான் அவர்கள் ஒருநாடகம் போடுவது என முடிவெடுத்தார்கள்.அவர்கள் எடுத்தமுடிவில் தவறில்லை அதை நாகராஜன் முன்னிலையில் எடுத்ததுதான் தவறு.

நாகராஜன் அகராதியில் முடியாது என்கிற வார்த்தையே கிடையாது. இமயமலை யைத் தூக்கி கூனிகுளத்துக்கரையில வைக்கணும் நாகராஜன் என்றால் ’’இந்தா குளிச் சுட்டு வந்து வச்சுர்ரேன்’’என்பான்.அவன் சொல்லும் விதத்தில் அதை நாகராஜன் செய்து முடிப்பான் என நம்பத்தோன்றும்.அவன் பேச்சுசாதுர்யம் அப்படிப்பட்டது.அதுவுமில் லாமல் இரண்டொருநாடகத்தில் நடித்து, நாடகத்துறையில் முன்அனுபவம் பெற்ற வனாகவும் இருந்தான்.இந்தக் காரணங்களை மனதில்கொண்டு,நாகராஜை முன்னி ருத்தி,இந்த நாடகத்தை நடத்துவதென்று முடிவெடுத்தார் குமார்.

’’நீ எதப்பத்தியும் கவலப்படாத குமார் நா சொல்றதமட்டும் செய் மத்தத நா பாத்துக் கறேன்.’’நாகராஜனின் இந்த வார்த்தை குமாருக்கு மட்டுமில்லை,அங்கிருந்த எல்லோ ருக்கும் தெம்பூட்டுவதாக இருந்தது.எல்லோரையும் கர்வமாகப்பார்த்தபடி’’யேய் நல்லா கேட்டுக்கங்கப்பா, இந்த நாடகத்துக்கு உங்ககைலருந்து ஒரு பைசா செலவுபண்ணக் கூடாது. அது இந்த நாகராஜனுக்கு பெரிய அவமானம்.நா வசூல் பண்ணித்தாறேன். இல்லன்னா நானே செலவு பண்றேன்.’’

’’சர்தாம்டே..எப்படி வசூல் பண்றது.குறைச்சுப்பாத்தாலும் ஒரு பத்தாயிரம் ரூபாயாவது வேணுமே.’’என்றான் அக்பர்.

’’நா இருக்கும் போது எதுக்கு குறைச்சுப்பாக்கறே..’’என்றபடி,மேவாயை தடவிக் கொண்டு ’’ம்..பத்தாயிரம்..சரி அக்பர் ஒரு லிஸ்டப் போடு’’ அக்பர் பேப்பர் எடுக்க, கடகட வென நாலைந்து பண்ணையார்கள் பெயரைச்சொல்லி தலைக்கு ஆயிரம் எனப்போட்டான்.’’ஏம்ப்பா இவ்வளவு பணம் தருவாங்களா?ஒரு ஐநூறுரூபா போடேன்’’. என்ற தளவாயிடம் நான் இதைஎடுத்துச் செய்யனுமா வேணாமா? ஐநூறு ரூபா குடுங்க பண்ணையார்ன்னு கேட்டா அவங்க என்னை அசிங்கமா நெனப்பாங்களா? இல்லியா?என ஏகத்துக்கு கோபப்பட்டான் நாகராஜன், அவன் கோபத்தைப் பார்த்து எல்லோரும் அமைதியானார்கள்.

நாகராஜனின் கணக்குப்படி பதினைந்தாயிரம் வந்தது.’’சரிதானாடே போதுமா? இல்ல இன்னும்கொஞ்சம் வசூல் பண்ணித்தரட்டுமா?அடுத்தநாடகத்துக்கு இருக்கட்டு மேன்னு இன்னும் சிலரை விட்டு வச்சிருக்கேன்.’’நாகராஜன் இதைச்சொன்னதும் எல்லோரும் கோரஸாக ’’இல்ல,இது போதும் மத்ததை அடுத்த நாடகத்துல பாத்துக் கலாம்’’என்றார்கள்.

குமார் செலவில் டீவடை சாப்பிட்டுவிட்டு,மிச்சம் இருக்கும் ஜந்தாயிரம்ரூபாயை ஒரு அக்கவுண்ட் ஒபன் பண்ணி அதில் போட்டு வைத்தார்கள். நாடகமன்றத்துக்கு பாரதி தாசன் நாடகமன்றம் என பெயர் வைத்து.செப்டம்பர்பதினேழு அன்று நாடகம் நடத்துவதென்று முடிவானது.நிர்வாகக்குழுவை உருவாக்கி சங்கத்தை கலைக்க யெத்தனித்தபோதுதான் அக்பர் முக்கியமான கேள்வி ஒன்றைக்கேட்டான். ’’எல்லாம் சர்தாம்..கத என்ன..?’என்ற அக்பரின் கேள்விக்கு குமார் இன்னொரு ரவுண்ட் டீ, வடை சொல்ல வேண்டியதாகஇருந்தது.வடை வரும்வரை தீவிர சிந்தனையில் இருந்த நாகராஜன், வடை வந்ததும் ஒரு வடையை எடுத்துக்கடித்தபடி ’’நா ஒரு கத சொல்றேன்’’ என்றான்.ஆளுக்கு ஒரு வடையாக எடுத்து தட்டைக்காலி செய்தபோது ’’ஒரு ஊர்ல ஒரு பண்ணையார்’’எனக்கதையைத் துவங்கினான் நாகராஜன். ’’ரொம்ப நல்லா இருக்குடே’’என்ற தளவாவின் வடைவிமர்சனத்தை நாகராஜனின் கதை விமர் சனமாக எல்லோரும் புரிந்துகொண்டார்கள்.அந்தஉற்சாகத்தில் முழுக்கதையையும் சொல்லி முடித்தான் நாகராஜன்.

நாகராஜன் கதையைவிட,அவன் வசூல் பண்ணித் தருவதாகச் சொன்ன கணக்கு எல்லோருக்கும் பிடித்ததாக இருந்தது. இரண்டு நாட்களில் கதையை முடித் துத் தருவதாகச் சொல்லி நாகராஜன் விடைபெற்று சென்றதும் தளவா அடக்க முடி யாமல் சிரித்தான்.

’’எல்லாப்பயலுவளையும் முட்டாளாக்கிட்டு போய்ட்டானே, கெட்டிக்காரம்ப்பா நாகராசன் ரெண்டு டீ வடைக்கு எம்புட்டு பேச்சு..அது எப்படி குமாரு, இல்லாத பணத்தை அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிப் போடப்போறியளோ..இது ஒப்பேறாது’’ தளவாவின் அவநம்பிக்கை யாருக்கும் பிடிக்கவில்லை.எல்லோரும் நாகராஜனை நம்பினார்கள்.’’

’’ வசூல் பண்ண முடியலன்னா நா செலவு பண்றேன்னு சொல்லி இருக்கான்டே செய்வான்’’கோபமாக சொன்னார் குமார்.

’’கிழிச்சாரு...குடிச்ச டீக்கே காசு குடுக்கல,இவரு செலவு பண்ணுவாராக்கும் ’’தளவாவின் பேச்சில் கிண்டல் இருந்தது.யாரும் அதை பொருட்படுத்தவில்லை. எல்லோருடைய மனதுக்குள்ளும் பதினைந்தாயிரம் ரூபாய் பற்றிய நம்பிக்கை பிரதானமாக இருந்தது.

சொன்னபடியே இரண்டு நாட்களில் இடுப்பு சாரத்தில் ஒரு நாப்பது பக்க நோட்டைக் கட்டிக்கொண்டு வந்தான் நாகராஜன்.அதற்குள் நாடகத்திற்கான மேடைக் கதை இருந்தது.

’’யேய் குமாரு நீ யோகக்காரனப்பா, கதை பிரமாதமா வந்திருக்கு’’.

‘’அத நாங்க சொல்லனும்,முதல்ல கதயச் சொல்லு.’’அக்பர் இதைச் சொன் னதும் நாகராஜனுக்கு முகம் சுருங்கிப்போனது அதைக் காட்டிக்கொள்ளாமல், திருச்சி பண்ணையார்கிட்ட பேசுனேன் குமார்,எல்லாசெலவையும் நானே பண்றேன் னார். நாந்தான் வேணாம் ஆயிரம் ரூவா மட்டும் குடுங்கன்னேன்’’

நாகராஜன் பணவிவகாரத்தை ஒரு துருப்புச்சீட்டைப் போல உபயோகித்தான் எல்லோரும் அமைதியானார்கள்.அந்தஅமைதியோடு எழுதிவைத்த நோட்டைஎடுத்துக் கொடுத்தான்.நிதானமாக படித்துப் பார்த்த அக்பர்‘’கதயில நிறைய ஓட்டை இருக்கடே’’ என்று சொல்லவும்,சட்டென்று ‘’அந்த ஓட்டைய அடைக்கறதுக்குத்தான உன்னை வசனம் எழுதச்சொல்றேன்’’என்றான் நாகராஜன்.தன்னை வசனகர்த்தாவாக்கிய, நாகராஜனை தனது சோடாபுட்டிக்கண்ணாடி வழியே,கண்கலங்கிப் பார்த்தான்,அக்பர். அந்தக் கலக்கத்தில் நன்றி இருந்தது.

‘பண்ணையார் உன்னை அழிக்காம விடமாட்டேன் ஹா..ஹா..ஹா..ன்னு ஒரு மர்மக் குரல் ஒலிக்கும்,பண்ணையார் பயப்படுவாரு இதுதான் நாடக்த்தோட முதசீனு இத மட்டும் மாத்திராத..அப்பத்தான் நாடகம் முடியறவரைக்கும் ஆடியன் ஸுக்கு ஒரு சஸ்பென்ஸ் இருந்துகிட்டே இருக்கும்.எழுதிமுடிச்சுட்டு என்கிட்ட ஒரு தடவ காட்டிரு’’ என இன்ஸ்டெக்‌ஷன் கொடுத்துவிட்டுச்சென்றான்,நாகராஜன்.

அன்றிலிருந்து அக்பர் காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை ஏதாவது ஒரு வசனத்தைப் பேசியபடி இருந்தான்.குமார் தையலகம் ஒரு தற் காலிக நாடகமன்றமானது.தனது இயல்பான சோம்பேறித்தனத்தையும் மீறி,குமார் பரபரப்பாக இயங்கினார். நடிக்க, விருப்பம் தெரிவித்தவர்கள் பெயர்பட்டியலைப் பார்த் ததும் குமாருக்கு அயர்ச்சியாக இருந்தது.எல்லோருமே கதாநாயகனாக நடிக்கும் வாய்பைக் கேட்டார்கள்.இரண்டு டூயட் வேண்டுமென்பது குறைந்தபட்சக் கோரிக்கை யாக இருந்தது. தங்களுக்கு,ஒரு ஜோடி இருக்கும்படி பார்த்துக் கொண்டால்,நடிகை செலவை ஏற்றுக்கொள்ளவும் சிலர் தயாராக இருந்தார்கள்.

குமாருக்கு தனது நாடகத்திட்டம் இத்தனை வரவேற்பைப்பெற்றதில்,தலைகால் புரியவில்லை.ஆண்டியாப்பிள்ளையிடம் பந்தலுக்கும்,வேலுஆசாரியிடம் மேடைக்கும் சொன்னார்.நாகர்கோவிலுக்குச்சென்று அரசுசெட்டிங்ஸிற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டுவந்தார்.எல்லாம் கைக்காசு.குமாரின் இந்தவேகமும்,பரபரப்பும் தளவாவிற்கு வேடிக்கையாக இருந்தது.

’’என்னடே...,துட்டு செழிப்பா இருக்கு போலருக்கு,அந்த பதினைஞ்சாயிரத்த வசூல் பண்ணியாச்..சா.’’தனது கடை வாசலில் வைத்து இதைக் கேட்டான் தளவா. அவனது கேள்வி மிகவும் நக்கலாக இருந்தது.அதே நேரத்தில் குமார் இந்த நாடகத் தின் மூலம் அழிந்துவிடக்கூடாது என்கிற ஆதங்கமும் இருந்தது.

‘’ இப்ப நம்ம கைலருந்து போடுவோம் பொறவு எடுத்துக்குவோம். வசூல் பண்ணிக் குடுத்துருவான்.வேறஎன்ன’’குமாரின் இந்த பதில் தளவாவிற்கு திருப்தியாக இல்லை. ’கடனகிடன வாங்கி மாட்டிக்கிடாத..பொறவு பஜார்ல லாந்தமுடியாது’ என்றான். அவர் கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நாகராஜன் குடுத்தான் என திருநெல்வேலியிலி ருந்து ஒருபார்சலை கொண்டு வந்து கொடுத்தான் சாகுல்.’ பார்சல் பெருசா இருக்கடே.. பதினஞ்சாயிரத்தையும் ஒத்த ரூவா நோட்டா குடுத்து விட்டுருக்கானோ’ என்றபடி பார்சலைப்பிரித்தான் தளவா.அதற்குள் டொனேஷன் புக்கும்,பிட்நோட்டீஸும் இருந் தது.’குமாரே உன்னை வசூல் பண்ணிஎடுத்துக்கிட சொல்லி இருக்கான்.புரியுதா?’

தளவா சொன்ன இந்த வார்த்தைகளின் உண்மை சிலநாட்களில் குமாருக்குப் புரிந்தது.நாடகத்திற்கான ரிகர்சல் ஆரம்பித்தப்பிறகும் நாகராஜனிடமிருந்து பணம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.பத்தாயிரத்தை வசூல் பண்ணிவிட முடியுமா?என்கிற கேள்வி எழுந்தது.

எனக்கு,ஒரு டூயட் குடு குமாரு ஐநூறு ரூவா தாறேன் என்று பேரம் பேசினான் காஜா.’’யே..நீ நடிக்கவே இல்லியே டூயட் மட்டும் எப்படிப்பாடுவே’’என்றார் குமார். கதாநாயகி கதாநாயகனை சின்னவயசுல எப்படி இருப்பான்னு கற்பனை பண்ணி பாட றான்னு சீன் வை’’என்ற,காஜா நான்கடிக்கு சற்று கூடுதல் உயரம்.இப்படி ஆளாளுக் குக் கிண்டல் செய்யும் நிலைஏற்பட்டுவிட்டதே என்கிற ஆதங்கம் இருந்தாலும் குமார் எந்தவிதமான சமரசத்துக்கும் தயாராக இல்லை. நாகராஜனை முன்னிருத்தி ஆரம்பிக் கப்பட்ட நாடகம் நாகராஜனின் கண்முன்னால் இந்த நாடகத்தை நடத்திக் காட்டிவிட வேண்டும் என்கிற வெறியை ஏற்படுத்தியது.இத்தனை இளைஞர்களை வைத்துக் கொண்டு ஒரு நாடகத்தை நடத்த முடியாதா... அதையும்தான் பாத்துருவோம்,என முடிவெடுத்தார் குமார்

‘’நாம ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டுத்தான் நாடகத்தை நடத்தனும் என்னசொல்லுதியோ?’’ரிகர்சல் நடக்கும் இடத்திற்குவந்து குமார் இதைச்சொன்னதும், கவலப்படாதீங்க குமாரண்ணே நாங்க வசூல் பண்ணித்தாறோம் என உற்சாகப்படுத்தி னார்கள்.ஆளுக்கு ஒருடொனேஷன் புத்தகத்தை வாங்கிச் சென்றார்கள்.உடையாரும், குமாரும்வெளிவசூலுக்கு போவதென்றும் அக்பரும், சேக்கும் ரிகர்சலைப் பார்த்துக் கொள்வதென்றும் முடிவானது.பம்பரமாகசுழன்று வசூல்வேட்டையை நடத்தினார்கள். எதிர்பார்த்தமாதிரி பணம் வசூலாகவில்லை.

ஒருநாள்

வசூல்முடித்துவிட்டு வரும் வழியில் நாகராஜன் குமாரை சந்தித்தான் இந்த நாடகத்துக்கும் தனக்கும் சம்மந்தமில்லாதவனைப்போல ‘’அப்புறம் குமாரு வசூல் எப்படி இருக்கு’’ என்றான்.குமாருக்கு வெறிகொண்ட கோபம் வந்தது. அத்தனையும் அடக்கிக்கொண்டு ‘’யேன்டே..இப்படி கழுத்தறுத்தே’’என அமைதியாகக் கேட்டார்.

‘’நீ நெனைக்கற மாதிரி நாடகம் நடத்துறது சாதாரணவிஷயமில்ல.நானும் நிறைய பேருகிட்ட பேசிப்பாத்தம்டே எவனும் காச இளக்க மாட்டேங்கறான்.’’

‘அதையாவது சொல்லலாம்ல பதினஞ்சாயிரம் வசூல் பண்ணித் தாறேன்னுட்டு நீ பாட்டுக்கு காணாமப் போயிட்டே..’’

‘’தப்புதான்.. ஆனா நீ ஒன்னு புரிஞ்சுக்கனும்.நா வசூல் பண்ணமுடியலன்னு சொல்லி இருந்தா நீ என்ன பண்ணி இருப்பே .சரி நாடகம் நடத்த வேணாம்னு முடிவு பண்ணி இருப்பே.. இப்ப, எம்மேல இருக்கற கோபத்துல இறங்கி வேலை செய்றே.. உன்னை வேலை செய்ய வச்சிருக்கேன்.இந்த நாடகத்த நடத்தறது நீ இல்ல குமாரு நாந்தான்..எப்படியாவது நீங்க நாடகத்தை நடத்தனும்ங்கறதுக்காக நா ஊருக்கே வராம இருக்கேன் தெரியுமா?’’ நாகராஜன் பேசுவது குமாருக்கு நியாயமாகவேபட்டது. நாகராஜன் கெட்டவனோ,ஏமாற்றுக்காரனோ இல்லை தன் சக்திக்கு மீறி பேசுகிறவன்.

’’சரிடே வசூல நா பாத்துக்கறேன் நாடகத்துக்கு வந்து சேரு’’என்றார்.

’’ஒன்னு பண்ணு குமாரு வசூல் எப்படி இருக்குன்னு பாரு கையக் கடிக்கும்னா நாடகத்தை தள்ளிப்போடு.நம்மள எவன் கேப்பான்’’குமாரை பேராபத்திலிருந்து காப் பாற்றும் முனைப்போடு இதைச் சொன்னான். நாடகத்தை நிறுத்து என்கிற நாகராஜ னின் வார்த்தை குமாரை மேலும் தூண்டிவிட்டது.அதுவரை கூடவே அமைதியாக வந்து கொண்டிருந்த சனி வாய் திறந்தது.’’ நா யேன்வே நாடகத்தை நிறுத்தறேன். மிஷினை வித்து செலவு பண்ணுவம்வே’’என்றார் குமார்.

எல்லாரும் அசந்து போறமாதிரி இந்த நாடகத்தை நடத்த வேண்டும் என்கிற வெறியோடு ஓவியன் செல்வகுமாரை அழைத்து ஊர் முழுக்க சுவர் விளம்பரம் செய்தார். ஊர் களைகட்டியது.

நாடகத்தன்று வந்து சேர்ந்தான் நாகராஜன்,அவன் மீது யாரும் எந்தவிதமான கோபத்தையும் காட்டவில்லை.’’நீ செஞ்ச வேலைக்கு உன்னய ஊனிதான் பந்தல் போட்டிருக்கணும்,போனாப்போகுதுன்னு மன்னிச்சுவிட்ருக்கோம்’’ அக்பர் மட்டும் இதைச்சொன்னான்.

‘’யே.. என்கிட்ட நீ கோவப்படமுடியாது,மானத்தோட மல்லுகட்டறது வேஸ்டுன்னு அத தூக்கியெறிஞ்சவன் நான் போய் வேலையப்பாருடே’’சிரித்தபடிச் சொன்னான் நாகராஜன்.

இரண்டாயிரம்பேர் ஒரு பொட்டல்வெளியில் கூடியதை மூலைக்கரைப்பட்டி அன்றுதான் பார்த்தது.ஒரு திருவிழாவைப்போல நாடகம் நடந்த அந்த இரண்டரை மணி நேரமும்,கைத்தட்டலும் சிரிப்புமாக கழிந்தது.நாடகம் நல்லாருக்கு நீங்க தர வேண்டிய பாக்கித்தொகைய தர வேணாம் என்றார் அரசு செட்டிங்ஸ்காரர்,அப்படி இருந்தும் இரண்டாயிரம் ரூபாய் துண்டு விழுந்தது குமார் சொன்ன சொல்லைக் காப்பாற்றும்விதமாக மிஷினை விற்றுதான் செட்டில் செய்தார்.

இப்போது அந்த ஊரில் குமார் தையலகம் இல்லை..பாரதிதாசன் நாடகமன்றம் இல்லை என்ன இருந்தாலும் குமார் போட்ட நாடகம் மாதிரி வராதுடே என இன்னமும் மக்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Monday, August 31, 2009

எழுக தமிழ் எழுக தமிழ்

எழுக தமிழ் எழுக தமிழ்- இனி
விடியலின் தூரம் அதிகமில்லை
எழுக மொழி எழுக இனம் -இனி
எதிரிகள் என்பவர் யாருமில்லை

சரணம்

அட தமிழா வெறும் புழுவாய்
வாழ்தல் என்ன மடமையடா
அடிபடவா... அழிந்திடவா...
ஆதி இனமாய் பிறந்து வந்தாய்

நதியுமில்லை வளமுமில்லை
நமக்கென ஒரு குழி நிலமும் இல்லை -புதிய
விதி படைத்திடுவோம் -தமிழ்
பூமியை பாரினில் வடித்தெடுப்போம்.

நீ தமிழன் நான் தமிழன்
நாம் தமிழர் என்றே ஒன்றிணைவோம்..
நீ தமிழன் நான் தமிழன்
நாம் தமிழர் என்றே வென்றிடுவோம்...

சரணம்

புறமுதுகால் கொங்கைகளை
அறுத்த தாய்மை அழியவில்லை
முறமெடுத்து திறம் பதித்த
மூத்த வீரம் அடங்கவில்லை.

பெரும்கனலே எரிமலையே
இன்னும் என்ன உறக்கமடா..
திசைகள் எட்டும் தமிழ் ஒலித்தால்
தீய சக்தி அடங்குமடா...

{ நீ தமிழன் நான் தமிழன்}


சரணம்

ஒரு முறையா இரு முறையா
பலமுறை யாசகம் கேட்டழுதோம்
உயிர்நிலமாய் மண் புதைந்து
நம் இனம் அழிவதை பார்த்திருந்தோம்

ஆண்ட இனம் மாண்டழிய
நாம் ஆறரைகோடி பிணங்கள் இல்லை
அயல் நிலத்தில் புகலிடத்தில்
வாழ்தல் நமக்கு பெருமை இல்லை

{ நீ தமிழன் நான் தமிழன்}

சரணம்

தணல் எரிந்து உயிர் துறந்த
தம்பிகள் வீரம் தோற்பதில்லை
மனம் திரும்பு இனம் விரும்பு
மானத்தை காத்திடு முரசறைந்து


விரல் சொடுக்கு கரம் உயர்த்து -உலகம்
உன் தாழ் பணிந்திடட்டும்.
அடிமைகளாய் வாழ்வதில்லை -இனி
நாம் தமிழர் என்றே அணி திரள்வோம்
{ நீ தமிழன் நான் தமிழன்}


வருகுதடா வருகுதடா
தம்பியின் புலிப்படை வருகுதடா
பெருகுதடா பெருகுதடா
தமிழின மாண்புகள் பெருகுதடா

Monday, June 1, 2009

கடவுள்



வந்த வேலை முடிந்ததென்று

கடவுள் ஒருநாள்

விடை பெற்றார் ...

போகட்டும் விடு என பொத்திக்கொண்டிருந்தோம்.

பின் ஒருநாள்

நேர்மை விடை கேட்டது ..

அது ஊழல் உற்சவமேறிய காலம் என்பதால்

நேர்மைக்கும் விடை கொடுத்தோம் ..

நல்ல அடையாளங்களெல்லாம்

நாளுக்கொன்றாய்

விடை பெற்றது .

எது குறித்தும் கவலை இல்லை எங்களுக்கு

நாங்கள் கூடிக்களிக்கவும்

ஆடிப்பாடவும்

கூடவே வந்தன ..கொள்ளைத் தவறுகள்..!

ஓர் நாள்

துயரம் துருவேறிச் சூழ்ந்தது .

அப்போது

எம்மைக்காக்க

எதுவும் இல்லை எம்மிடம் ..!

***

பாவமன்னிப்பு கோரும்

வரிசை நீண்டதாய் இருந்தது .

பாவிகளின் வரிசையில்

கடைசி ஆளாய் கடவுள்

***

படைக்கும் கடவுள்

பக்கத்தில் வரவில்லை ..

காக்கும் கடவுள்

காணாமல் போனான் .

அழிக்கும் கடவுள் மட்டும்

எம்மை ஆட்டிப்படைக்கிறான் .

***

பாவங்களை ரட்சிக்கும்

கடவுள்

ஒரு மாறுதலுக்காக

பாவிகளை ரட்சிக்கத் துவங்கி இருக்கிறான் .

Saturday, May 30, 2009

என் தேவதைக்கு .. (அரசியல் கலப்பில்லாத அக் மார்க் காதல் கடிதம் )





மெயில் காலத்தில் உனக்கு காதல் கடிதம் எழுதுவது பிடிக்காமல்

இருக்கலாம்.என்னை ஒரு பழைய மனிதனாகக்கூட நீ பார்க்கலாம் .

ஆனாலும் இனப்பிரச்சனைகளே கடிதங்களில் தீரும் காலகட்டத்தில், காதல் சொல்லவும் கடிதம் போதும் என்பதை நீ நம்ப வேண்டும் . நான் என்ன உன் வீட்டு மந்திரி சபையில் கேபினட் அந்தஸ்தா கேட்கிறேன் .நேரில் வருவதற்கு ..? மனதில்தானே இடம் கேட்கிறேன் .
அன்று ... நேரில் என் குடும்பத்தோடு வந்து ஒரு பேச்சு வார்த்தை நிகழ்த்தினோமே. நினைவிருக்கிறதா ?


அப்போ குடும்பப்பொறுப்பில் இருக்கும் உன் அன்னை

தலைப்பாகை கட்டியிருந்த உன் தந்தையிடம் பேசச் சொன்னார் .

எங்கள் பகுதியில் உங்கள் வியாபாரம் வெற்றி பெற நாங்கள் தான் காரணம். இருந்தபோதும் அந்த தலைப்பா ஆசாமி அதை மதிக்கவில்லை . மிகக்குறைந்த பொறுப்புகளை கொடுத்து டேக் இட் ஆர் லிவ் இட் என்று சொல்லிவிட்டார் .


தன் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் நாலு பேர் உதவியோடு வந்த எங்கள் தாத்தாவின் மனது ரொம்ப பாதிக்கப்பட்டது . இந்த 85 வயதில் அவர் இத்தனை துயரம் அனுபவித்ததில்லை .


எங்கள் குடும்பத்திற்கு அவ்வளவு வெட்கம் மானமெல்லாம் கிடையாது.

இருந்த கொஞ்சநஞ்சம் மானவெட்கத்தை ஓன்று திரட்டி தூக்கி எறிந்துவிட்டு னக்கு என்ன பொறுப்பு எனக்கேட்டேன் . தோட்டக்காரன் வேலையை விட்டுவிட்டான்..அந்த பதவியை நீ எடுத்துக்கோ என்றார் தலைப்பா ஆசாமி ..


உரமும் பூச்சி மருந்தும் வாங்குவதா எங்கள் வேலை ..உன் குடும்பம் எங்களைகிரி வடிவேலு’ மாதிரி அவமானப்படுத்தி விட்டது .சரி ஒண்ணுமே வேணாம் நாங்க போறோம்னு கிளம்பிட்டோம் ..

ஆனா அந்த தலப்பாக்காரர் எங்க தாத்தாவப்பாத்து இவரு

ரொம்ப நல்லவர்னு சொல்லிட்டாரு ..வேற வழியில்லமா குடுத்தத வாங்கிகிட்டோம் .


எங்க ஊர்ல நாங்க எம்புட்டு பெரிய குடும்பம்னு உங்க குடும்பத்துக்கு புரியல . இப்படி பிச்சை வாங்கற மாதிரி வாங்கிட்டு வந்ததப்பத்தி நெட்ல அவ்வளவு கேவலமா எழுதறானுக.
அதையும் பொறுத்துகிட்டோம் .


இப்போ இங்க உங்க சொந்தக்காரங்க எங்க யாவாரத்தில பங்கு கேக்கறாங்க.. எங்க குடும்பம் தமிழ்நாட்லயே அதிக வோட்டு உள்ள குடும்பம்.ரேசன் ஆபீஸ் லையே எங்களுக்கு ரேசன் கார்டெல்லாம் தரலே ரேசன் புக் தான் குடுத்தாங்க. தாத்தாவுக்கு குடும்பம்னா உசிரு

குடும்பத்துக்கு தாத்தான்னா உசிரு. ப்ளீஸ் பங்கு தரமுடியாது ...

மனசில வேணா இடம் தர்றோம் . இல்லன்னா எல்லாத்தையும் முறிச்சுக்குவோம்.


கடைசியா தாத்தா ஒன்னைமட்டும் கண்டிசனா சொல்லச் சொன்னாரு.

அவரு எப்பவும் இப்படி சொன்னது இல்ல ..வாழ்க்கையில முதல் தடவையா "இப்பவே கண்ணக்கட்டுதே" சொன்னார் .இதுக்கு மரியாதை குடுத்து நல்ல முடிவா எடுங்க ...


இப்படிக்கு

அன்புக்காதலன் .