Sunday, April 5, 2009

குற்றப் பெருக்கின் முத்தத் தருணங்கள்

குற்றப் பெருக்கின் முத்தத் தருணங்கள்

தாமிரா


தடக் தடக்.. தடக் தடக்கென கூட்ஸ் வண்டி எங்களைக் கடந்து சென்ற போது அவள் அனிச்சையாய் என் விரல்களை பிடித்துக் கொண்டாள். புறப்பட்ட நிமிடத்திலிருந்து அமைதியாக ஒரு மௌன யாத்திரை போலத்தான் வந்தோம். அவள் கைகளைக் கோர்த்துக் கொண்டது ஆறுதலாக இருந்தது.

“அக்கா வீட்டுக்கு போறதுக்கு இப்ப என்ன அவசரம்..?” நான் இதைக் கேட்டு முடித்தபோது எதிரே வந்த ஒரு எலக்ட்ரிக் ட்ரெயின் சத்தமாக ஒரு ஹாரன் அடித்துச் சென்றது. அவள் பதிலேதும் சொல்லவில்லை. ஒருவேளை அந்த ஹாரன் சப்தம் கேட்காமல் இருந்தால் பதில் சொல்லி இருக்கக்கூடும்.இருவரும் தண்டவாளம் கடந்து பிளாட்பார்ம் சென்றடைந்தோம். ஆளரவமற்ற இடத்தில் ஒரு இடம் தேடி அமர்ந்து கொண்டாள்

“ஏதாவது சாப்பிடறியா..?”

“ம்.. கா•பி..”

நான் சுற்றிலும் பார்த்துவிட்டு தூரத்திலிருந்த கேண்டீனுக்குச் சென்றேன். நேரம் கிடைத்தால் வாய் ஓயாமல் பேசுபவர்கள் நாங்கள். ஒவ்வொரு பேச்சு வார்த்தையும் எங்கோ துவங்கி எதிலோ முடியும். இன்று வார்த்தைகளற்று இருப்பது நரகமாக இருக்கிறது.

அந்த முத்தம் தவறோ என்கிற கேள்வி என்னை உறுத்திக் கொண்டிருந்தது. கேண்டீன்காரன் என்ன வேண்டும் என்றான். ஒரு குரோம்பேட்டை என்ற என் பதில் அவனுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். “சார்.. இது கேண்டீன்.. டிக்கெட் கவுண்டர் அங்க இருக்கு..” என்றான். நான் சுதாரித்து ஒரு கா•பி என்றேன்.

கா•பி வாங்கிவிட்டு திரும்பியபோது அவள் எங்கோ வெறித்தபடி இருந்தாள்.
நான் கா•பியை அவள் கையில் கொடுத்தேன்.

கா•பியை நிதானமாக ரசித்துக் குடித்தாள். தூரத்து மரத்திலிருந்து ஒரு காகம் கரைந்தது. அவள் ஏதாவது பேசுவாள் என எதிர்பார்த்தேன். எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். எனக்கு ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போல இருந்தது. மீண்டும் அந்த கேள்வியை கேட்கலாம் போலும் இருந்தது.

“அக்கா வீட்டுக்குப் போறதுக்கு இப்ப என்ன அவசரம்.?” நான் இதைக் கேட்கவும் அவள் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு பதிலேதும் சொல்லாமல் அமைதியாக கா•பியைக் குடித்தாள்.

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை இந்தக் காப்பிக்குப் பிறகு ‘வா வீட்டுக்குப் போகாலாம்’ என அழைப்பாள் என்று தோன்றியது. அப்படிக் கூப்பிட்டால் நன்றாக இருக்குமென்றும் தோன்றியது.

அவள் இறுக்கமாக இருந்தாள். உள்ளூர அவளது பயம் தெரிந்தது. விரல்கள் மெல்லியதாக நடுங்கியது போலிருந்தது.

“டிக்கெட் எடுத்துட்டு வர்றியா.?” என்றாள். என் அருகாமை அவளை அச்சுறுத்தி இருக்க வேண்டும். என்னை விட்டு விலகி இருப்பதற்கான காரணம் தேடுகிறாள். நான் மீண்டும் எழுந்து சென்றேன். சற்று தூரம் சென்று திரும்பி அவளைப் பார்த்தேன். பதட்டமில்லாமல் நிதானமாக கா•பியைக் குடித்துக் கொண்டிருந்தாள். அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

டிக்கெட் எடுத்து திரும்பியபோது அவள் கசக்கி எறிந்த காலிக்குவளை காலில் இடறியது. ஒரு கணம் என்னையே நான் மிதித்து விட்டது போலிருந்தது.

டிக்கெட்டை அவளிடம் கொடுத்தேன்.

“ரிட்டர்ன் டிக்கெட் எதுக்கு வாங்கினே.?”

“ஒருவேளை மனசு மாறி திரும்பி வந்தேன்னா.. எதுக்கும் இருக்கட்டுமே.”

அவள் அமைதியாக டிக்கெட்டை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒரு கொய்யாப்பழ வியாபாரியும் அதன் தொடர்ச்சியாய் ஒரு புத்தக வியாபாரியும் கடந்து சென்றார்கள். அடுத்த தாம்பரம் ரயில் இன்னும் பத்து நிமிடங்களில் வந்து சேரும் என நிலைய அறிவிப்பு குரல் கேட்டது.

நான் அவள் எதிரே நின்றபடி இருந்தேன். ஒரு குண்டு பெண்மணி அவள் அருகே அமர்ந்தாள். இனி எதுவும் பேச இயலாதபடி ஒரு அசௌகர்யமான சூழ்நிலை
ஏற்பட்டது. நேரம் மௌனங்களில் கரைந்து கொண்டிருந்தது. ட்ரெயின் வந்து விட்டால் நன்றாக இருக்கும். விடைபெற்று போய் விடலாம் என்று தோன்றியது.

நான் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தேன். ஆழமாக புகையை இழுத்து வெளியே விட்டேன். ஸ்டேசனில் அதிக கூட்டம் இல்லை. எதிர் சுவரில் ஏசு அழைத்துக் கொண்டிருந்தார். அருகே குக்கர் விளம்பரம் இருந்தது.

எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. சுற்றிலும் பார்த்தபடி என் கண்ணீரை அடக்கிக் கொண்டிருந்தேன். குண்டு பெண் எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, இவளிடம் ‘உன் பேர் என்னம்மா’ எனக் கேட்டாள்.

“சரஸ்வதி”

“இது உங்க வீட்டுக்காரரா.?”

இவள் ஆமாம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் பொதுவாக தலையசைத்தாள். எனக்கு அந்த தலையசைப்பு பிடித்திருந்தது. கடந்த ஓராண்டாக எங்கள் இருவருக்கும் ஒரு இனம் புரியாத நெருக்கம் இருந்தது. எங்கள் உறவின் அடையாளத்தை நாங்கள் தேடிக்கொண்டே இருந்தோம்.

யார் இவள்? யார் இவன்? என்கிற கேள்வி இருவருக்குள்ளும் இருந்தது. இணைந்து நடக்கின்ற நதியின் கரைகளாய் எங்கள் பயணம் நீண்டது. விடை தெரியாத ஒரு புதிர் கட்டங்களில் பயணப்பட்டோம். சமயங்களில் தாயம் விழுந்து ஏணியில் ஏறினோம். சமயங்களில் விருத்தங்கள் விழுந்து தரை இறங்கினோம்.

இந்த சதுரங்க ஆட்டத்தின் முடிவு இன்றைய வைகறைப் பொழுதில்தான் தீர்மானிக்கப்பட்டது. இரவு உணவுக்குப் பின் துவங்கிய பேச்சு வார்த்தை தொடர்ந்து நீடித்தது. ஆல்பெர்க் காம்யூவின் அன்னியனில் துவங்கியது. மெல்ல மெல்ல அந்த இலக்கிய பேச்சு தனிப்பட்ட வாழ்க்கை பகிர்தலாயிற்று.

அவள் தனது பால்ய காதலைச் சொல்லத் துவங்கினாள். பாவாடை சட்டையிலிருந்து தாவணிக்கு மாறி இருந்த நாளில்தான் அவளது முதல் காதல் அரும்பியது. அதைக் முதல் காதல் என்று கூட சொல்ல இயலாது. அவளது தாவணித் திருநாளில் தினமும் ஒருவன் அவளை சைட் அடித்திருக்கிறான்.

ஒருநாள் ஒரு புளியம்பழத்தைச் சுருட்டி ஒரு காதல் கடிதத்தை அவள் முன் விசிறி எறிந்திருக்கிறான். அதில் ‘அன்பே.. நான் உன்னை விரும்புகிறேன்’ என்று இருந்திருக்கிறது.

அடுத்த இரண்டு நாட்கள் சரஸ்வதி காய்ச்சலில் படுத்துக் கொண்டாள். அதன்பின் அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குள் அச்சக் காய்ச்சல் அடித்திருக்கிறது.

“இப்ப நெனைச்சா கஷ்டமா இருக்குடா” என்றாள்

“ஏன்.?”

“அவன் பாவம்ல.. எவ்வளவு கனவுகளோட என் பின்னால சுத்தி இருப்பான். எவ்வளவு ஏமாந்து போயிருப்பான். அட்லீஸ்ட் எம்பின்னால வராத.. எனக்கு உன்னை பிடிக்கலன்னாவது சொல்லி இருக்கணும். நான் அவனை திரும்பிக்கூட பாத்ததில்லை. இப்ப ஊருக்குப் போகும்போதெல்லாம் அவனை எங்கயாவது பாத்துட மாட்டமான்னு தோணுது..”

“பாத்து..?”

“பாத்து என்ன பண்ணப் போறேன்னு தெரியல. ஆனா பாக்கணும் போல இருக்கு. ஸாரிடா.. என்னை மன்னிச்சிருடாங்கற மாதிரி ஒரு பார்வை. எனக்கு அதுபோதும்..”

இதைச் சொல்லும்போது அவள் கண்கலங்கி இருந்தாள். அந்தக் கண்ணீரில் ஒரு பாவமன்னிப்பிற்கான யாசகம் இருந்தது. நான் அவள் முன் நெற்றியைக் கலைத்தபடி.. “நீ உள்ளுக்குள்ள அவனை லவ் பண்ணி இருக்கறே.. அது உனக்கு தெரியாம இருந்திருக்கு. அதான் இத்தனை வருஷம் கழிச்சு உனக்கு அழுகை வருது” என்றேன்.

அதன்பின் அவள் பொங்கி அழுதாள். நான் அமைதியாக அவளை அழவிட்டேன். ஒரு நீண்ட அழுகை முடிந்து நிதானத்திற்கு வந்தாள். நான் தண்ணீர் எடுத்துக் கொடுக்கவும் பெரும் தாகத்தோடு பருகினாள். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பேசத்துவங்கினாள்.

“அவனை நிராகரிச்ச பிறகு என் வாழ்க்கையில காதலே இல்லாம போச்சுடா.. ஆனா இன்னும் எனக்குள்ள ஒரு காதலிக்கற மனசு இருக்கு.”

“நல்லது. லவ்ங்கறது காமன் ப்ரேஸ். ஒரு ஆணைத்தான் காதலிக்கணும்னு இல்லே.. இயற்கையை லவ் பண்ணலாம். குழந்தையை லவ் பண்ணலாம்.. இந்த சொசைட்டியை, கல்ச்சரை, எழுத்தை, ஆர்ட்டை.. எதை வேணா லவ் பண்ணலாம்” என்றேன்.

அவள் மௌனமாக இருந்தாள். தொலைக்காட்சியில் ‘ராமனின் மோகனம்’ ஓடிக்கொண்டிருந்தது. என்னிடம் இருந்த கடைசி சிகரெட்டைப் பற்ற வைத்தேன். தூக்கம் கண்களைச் சுழற்றியது.

“லவ் ஸாங் கேக்கும் போதெல்லாம் எங்கேயோ ஒரு வலி. தோத்துட்டோம்ங்கற இயலாமை. மனசு அப்படியே உருகி வழியிது. என்னால அந்த கணங்களை தாங்க முடியல. உசிரு வலிக்குதுடா..” தூரத்தை வெறித்தபடி அவள் இதைச் சொன்னபோது
அந்த வார்த்தைகளில் துயரம் நிறைந்திருந்தது.

“நான் சிகரெட் வாங்கிட்டு வரட்டுமா.?” என்றேன்

“இப்ப போகாதே ப்ளீஸ்.. தனியா இருக்க பயமா இருக்கு” என்றாள். மணி நாலரை இருக்கும். டீக்கடை திறந்திருப்பான். எனக்கு கொஞ்சம் நடந்து சென்று தூரமாக இருக்கும் டீக்கடையில் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வரலாமெனத் தோன்றியது. இவளை விட்டுவிட்டு இப்போது போக முடியாது. இந்த மௌனம் ஒரு தற்கொலை மனோ பாவத்திற்கான முகாந்திரமாக இருக்கலாம். நான் அமைதியாக இருந்தேன்.

திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவளாய் “ ஒரு கவிதை சொல்லேன்..”
என்றாள். சிகரெட் கரைந்து கையைச் சுட்டது. நான் ஆஷ்ட்ரேயில் வைத்து அழுத்தியபடி கவிதை சொல்லத் துவங்கினேன்.

“போகும் வரும் பாதைகள்..
போகச் சம்மதமெனில் போ..!
இது வழியனுப்பி
பழக்கப்பட்ட மனசு”

கவிதை சொல்லி முடித்ததும் சட்டென என் கைகளை பிடித்துக் கொண்டாள்.

“அழகான கவிதை. எப்படி கேட்டவுடனே பட்டுன்னு சொல்றே. முன்னாடியே யோசிச்சு வச்சிருப்பியோ.?” என்றாள். இல்லையென்பதாய் தலையசைத்தேன்.

“நான் ட்ரை பண்ணினாக்கூட இது மாதிரி கவிதை வருமா.?”

“வரும். நிச்சயமா வரும். காதல் கொண்ட எல்லா மனசுக்குள்ளயும் கவிதை இருக்கு. நான் எழுதறேன். நீ எழுதல. அதான் வித்தியாசம். நீயும் எழுத முயற்சி பண்ணு. உனக்கும் கவிதை வரும்..” என்றேன்.

அவள் தீவிரமாக யோசித்தாள். அவளது துயர கணங்களிலிருந்து மீண்டு விட்டாள் என்றே தோன்றியது. அவளை இன்னும் இலகுவாக்கும் முயற்சியாய் ‘நான் ஒரு வரி சொல்றேன். அதன் தொடர்ச்சியாக நீ ஒரு வரி சொல். இருவரும் சேர்ந்து கவிதை எழுதுவோம்’ என்றேன்.

உற்சாகமாகத் தலையசைத்தாள்.

நான் முதல் வரியை யோசித்துக் கொண்டிருந்த கணத்தில், “நா அடுத்த வரியைச் சரியா சொல்லிட்டா என்ன தருவே.?” எனக் கேட்டாள்.

“என்ன வேணும்னாலும் கேளு தர்றேன்” என்றபடி யோசிக்கத் துவங்கினேன்.

“பருவம் தவறிப் பெய்த மழையே..
என் தூரங்களில் பெய்யச் சொன்னால்..”

என கவிதையை பாதியில் நிறுத்தி அடுத்த வரியைச் சொல் என்றேன். ஒரு சின்ன யோசனைக்குப் பிறகு..

“என் துயரங்களில் ஏன் பெய்தாய்..” என்றாள்.

நான் அவள் கைகளை அழுத்தமாய் குலுக்கியபடி சூப்பர் என்றேன். அடுத்த வரியைச் சொல் என எனக்கு கட்டளையிட்டாள்.

“இலையுதிர் காலத்தில்
நீ வந்து சென்றதை..” என சொல்லி நிறுத்திய கணத்தில்

“எந்தப் பூப்பூத்துக் கொண்டாடுவது நான்” என்றாள். மொத்தமாய் சொல்லிப் பார்க்க அதற்குள் ஒரு அழகான கவிதை இருந்தது. இவ்வளவுதான். இப்படியே யோசித்தால் கவிதை வரும் என்றேன்.

அவள் இப்போது உற்சாகமான மனுஷியாக மாறி இருந்தாள். எனக்குள் இருந்த தூக்கமும் கலைந்து போயிருந்தது.

“என்ன வேணும் கேளு” என்றேன்.

எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவள் கை என் இதயம் நோக்கி நீண்டது. நான் இரண்டு கைகளையும் அகல விரிக்க, எனக்குள் ஒரு பறவைக்குஞ்சாய் வந்து ஒட்டிக்கொண்டாள். இருவரும் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டோம். தொலைக்காட்சி இப்போது ‘மௌனமான நேரம்.. இளமனதில் என்ன பாரம்’ பாடலை இசைத்துக் கொண்டிருந்தது.

வைகறை மெல்ல விடியலை நோக்கி நகர்ந்தது. முத்தத்தின் குற்றப்பெருக்கில் இருவரும் உறைந்துபோய் இருந்தோம். எங்கள் நேசமும், வார்த்தைகளும் பிரேதங்களாகி அறையெங்கும் இறைந்து கிடந்தது.

நான் குளித்து முடித்து புறப்பட்டபோது, அவள் “அக்கா வீட்டுக்குப் போறேன். என்னை ஸ்டேசன்ல கொண்டுபோய் விட்டுரு” என்றாள்.

தாம்பரம் ரயில் வந்து நின்றது. அவள் அமைதியாக இருந்தாள். ரயில் புறப்படுவதற்கான ஹார்ன் சவுண்ட் கேட்ட பிறகும் அமைதியாக இருந்தாள்.

ரயில்கள் தொடர்ச்சியாய் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது. நாங்கள் மௌனமாக ஸ்டேசனில் அமர்ந்து இருந்தோம்.

ஏதோ ஒன்றை சொல்லிவிடும் தவிப்பு அவளுக்குள் இருந்தது. ஏதேனும் ஒரு ரயிலில் அவள் ஏறும் முன் என்னிடம் பேசக்கூடும் அல்லது பயணத்தை ரத்து செய்துவிட்டு என்னோடு திரும்பி வரக்கூடும்.

நான் காத்திருந்தேன் அவள் மௌனம் கலையும் தருணத்திற்காக.

அடுத்த ரயில் பிளாட்•பார்மில் வந்து நின்றபோது அவள் என்னை நோக்கித் திரும்பினாள்.

“ஒரு செகண்ட் உன்னை அவனா பாத்துட்டேன். அதுதான் தப்பு.. “ என்றபடி ரயிலை நோக்கிச் சென்றாள். அவளைச் சுமந்தபடி ரயில் கூச்சலிட்டுக் கிளம்பியது.

நான் திரும்பி நடந்தேன். அவள் அந்த வார்த்தையை சொல்லி இருக்க வேண்டாம்.

அமிர்தவர்ஷினி

அமிர்தவர்ஷினி

ஒரு மார்கழி மாதத்துப் பனிக் குளிரில்தான் அவளைப் பார்த்தது. அவளைப் பார்த்த கணத்திலிருந்துதான் இந்தக் கதையைத் துவங்கவேண்டியதிருக்கிறது. என் வாழ்க்கையைத் துவங்கியதும் அந்த கணத்திலிருந்துதான். அப்போது என் உலகம் செவ்வகமாக இருந்தது. அதன் ஈசான மூலையில் அவள் வீடு. அங்கிருந்துதான் அவள் சூரியனாய் எழுந்தருள்வாள். மேற்கில் அவளும் நானும் படிக்கும் பள்ளிக்கூடம்.

அந்தப் பள்ளிக்கூடம் பூக்களால் ஆனது. செம்பருத்தி, நித்யகல்யாணி, வாடாமல்லி, காக்கரச மரத்தின் மஞ்சள் பூ மற்றும் எங்கள் காதலால் நிறைந்த பள்ளி அது. வடக்கில் அவளும் நானும் சந்தித்துக்கொள்ளும் சுப்ரமணியசாமி கோவில். தெற்கே அதிகாலையில் இருவரும் ஆனந்த நீராடும் மணிமுத்தாறு கால்வாய். இந்த நீள் செவ்வக சதுக்கம் தாண்டி உலகம் இல்லை.

அப்போது எனக்கு பன்னிரண்டு வயது. பட்டாம்பூச்சி வயசு. பட்டாம்பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்களில் சில வரிசைக்கிரமங்கள் இருக்கின்றன. நோட்டுப் புத்தகத்தில் வைத்த மயில் தோகை குட்டி போடாது, பனஞ்சோறு தின்னாது என்பதை அறிந்து கொண்ட தருணத்தில் என் அரை ட்ராயரில் இருந்த கோலி குண்டுகளும், பம்பரமும் விடைபெற்றுச் சென்றன. டீக்கடை பெஞ்சுகளில் விரியும் தினசரிக்குள் கடைசி தலையாய் என் தலையையும்
புதைத்துக் கொண்டேன். அந்தோணி தைனஸின் சிரிப்பைத் திருடி வைத்திருந்தேன். பென்சிலால் வரையப்பட்ட டெய்ஸியின் கருத்த விழிகள் என் வீட்டுச் சுவரில் இருந்தபடி என்னை விழுங்கிக் கொண்டிருந்தன.

படுக்கையில் மூத்திரம் பெய்யும் கனவு, பள்ளத்தில் உருண்டு விழும் கனவு, பேய்கள் துரத்தும் கனவு இப்படியான சின்ன வயதுக் கனவுளெல்லாம் உடைந்து சிதறின. சின்னச் சினேகிதிகள் தங்கள் மந்திரச் சொற்களால் என்னை மீட்டும் இசைக்களமாகவே இருந்தன எல்லா கனவுகளும்.

அப்படியொரு கனவிற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நொடியில்தான் அவள் பாடினாள்.
“கூவின குங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின.. இயன்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்
தொருபடு கின்றன விருப்பொடு நமக்கு..”

என் பனிப்போர்வை விலக்கி அவள் பாட்டு வருடியது. அவள் பாடல் என்னை ஸ்பரிசித்த கணம் தேவகணம். அவள் குரல் பேரழகாய் உருவெடுத்து நின்றது. என் போர்வையிலிருந்து என்னை புலம் பெயர்த்து தூக்கிச் சென்றது அந்தக் குரல்.

நான் அவள் வாசலில் நின்றேன். மெய் மறந்து கண்மூடியபடி பாடினாள்.

“யாவரும் அறிவரியாய் எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாய்..!”

ஒரு வீணையின் அதிர்வோடு அவள் பாடி முடித்துக் கண்திறக்க, அவளெதிரில் உருகி நின்றேன். வெட்கம் அவள் விழிகளில் மின்னலாய் பூத்தது. பாடிய பாட்டுக்கு இணையான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு ஓடினாள். தோட்டம் வரை வாசல்களாய் இருந்தது அவள் வீடு. அவள் ஒரு புள்ளியாய் ஓடி மறைந்தாள். மறைந்த அந்தப் புள்ளி என் மனதில் மையமிட்டது. தனியாய் அவள் வீட்டிற்குச் சென்ற நான் அவளோடு திரும்பினேன்.

“யார் இவள்.?” கேள்விகளால் துரத்தப்பட்டேன். என் பயணம் துவங்கியது. கதவுகளும் சன்னல்களுமற்ற என் மனவெளியில் அவள் ஒளியாய் பரவினாள். தைனஸின் புன்னகையேந்திய கிண்ணம் அவள் கால்பட்டு இடறியது. டெய்ஸியின் பென்சில் விழிகள் இருண்மைக்குள் தொலைந்தது.

“யார் இவள்.?”

“அமிர்தவர்ஷினி.. பி.டபிள்யூ.டி இஞ்சினியர் பொண்ணு. நாளைக்கு நம்ம ஸ்கூல்ல ஜாயின் பண்றா..”. வடக்குத் தெரு முத்துக்கிருஷ்ணன் அவளைப் பற்றிய தகவல்களைச் சொன்னான்.

“அமிர்தவர்ஷினி.. அமிர்தவர்ஷினி..” என் சுவாசத் தம்புரா அவள் பெயரில் சுதி சேர்த்துக் கொண்டது.

மறுநாள் பள்ளி அசெம்ப்ளி ஒரு தேவதையோடு துவங்கியது. தேவதை நீலப்பாவாடையும், வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தாள். அவள் இரட்டைச் சடை ஒன்று முன்னும் ஒன்று பின்னுமாக இருந்தது. நெற்றியில் சின்னதாய் ஒரு சந்தனக் கீற்று. கழுத்தில் டாலர் இல்லாத ஒரு செயின்.

“கடவுளே.. இவள் என் வகுப்பறைக்கு வர வேண்டும்..” மனம் உருகி பிரார்த்தனை செய்தேன். அது கடவுளிடம் நான் கேட்ட முதல் பிரார்த்தனை. கன்னி பிரார்த்தனை. கடவுள் கருணைமிக்கவன். காதல் அறிந்தவன். அவனே ஒரு காதலன்.

“மே ஐ கம் இன் சார்..” என்றபடி கணக்குப் பாடவேளையில் அவள் என் வகுப்பறையில் அடியெடுத்து வைத்தாள். எல்லா விழிகளும் அவள் அழகைப் பருகின.
நான் அவள் அழகை அணிந்து கொண்டேன். கணக்கு ஆசிரியர் பாலகிருஷ்ணன் பித்தகோரஸ் தேற்றத்தை எங்கள் புத்தியில் திணிக்க மல்லுக்கட்டிக் கொண்டிருந்த வேளையில், நான் அவளிடம் எப்படி பேசுவது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

இடைவேளையின் மணிச்சத்தம் ஒரு தேவகானமாய் இசைத்தது. அந்த தண்டவாள அதிர்வு அடங்கும்போது நான் அவளைப் பார்த்தேன். அவள் என் பார்வையை ஒரு புன்னகையால் எதிர்கொண்டாள். வகுப்பறையில் அவளும் நானும் மட்டும் இருந்தோம். கடவுள் கருணையானவன்.

“நல்லா பாடறே..”

சிரித்தாள்.
“நாளைக்குப் பாடுவியா.?”

சிரித்தாள்.

“பாட்டுக் கேக்க நாளைக்கு வரட்டுமா.?”

மீண்டும் சிரித்தாள்.

அந்த புன்னகைத் தோரணம் எனக்குப் பிடித்திருந்தது. அவள் ஒவ்வொரு சிரிப்பிலும் கோடி வார்த்தைகளை ஒளித்து வைத்திருந்தாள்.

“உம் பேரென்ன.?”

“மணியரசு” என்றேன். ‘மணியரசு’ ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள். முதல் முறையாக என் பெயர் பிறவிப் பயனடைந்தது.

“நீ என்ன கவர்மெண்ட்டா.. அரசுன்னு பேர் வச்சிருக்கற.?” என்றபடி சிரித்தாள். சிரிப்பை சோழியாக சுழற்றுகிறாள். விருத்தங்களும் தாயங்களுமாக விழுந்து தொலைக்கிறது. மீண்டும் மீண்டும் சுழல்கிறது அவள் சோழிகள்.

மறுநாள் அவள் வீட்டு வாசலில் நின்றபோது ‘யாதுமாகி நின்றாய் காளி.. எங்கும் நீ நிறைந்தாய்’ பாடிக் கொண்டிருந்தாள். பாடியபடியே என்னை சைகையால் அழைத்தாள். திண்ணையில் அமரச் செய்தாள். அவள் பாவனைப் பேச்சு அழகாக இருந்தது. பாடி முடித்ததும் உள்ளே திரும்பி,

“அம்மா கவர்மெண்ட் வந்திருக்கு.. ஒரு கா•பி கொண்டு வா”
என்றாள்.

அம்மா கா•பி எடுத்து வர, “ஹீ ஈஸ் மை கிளாஸ்மேட்.. ஸ்மார்ட் பாய். மை மியூசிக் லவ்வர்” என அறிமுகம் செய்து வைத்தாள். என் இசைக் காதலன் என அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்த இசையை பார்வையால் கரைத்துக் கொண்டிருந்தேன்.

“எங்களை மணிமுத்தாறு கால்வாய்க்கு அழைச்சுட்டுப் போறியா.?” வர்ஷினியின் அம்மா அதைக் கேட்டதும் உற்சாகமாக தலையசைத்தேன்.

அவர்களோடு நடந்து செல்லும்போதுதான் கவனித்தேன். அமிர்தவர்ஷினி என்னைவிட சற்று உயரம். நல்ல சிகப்பு. தாட்டியான உருவத்துடன் கூடிய ஒரு பெரிய மனுஷித் தன்மை அவளிடம் இருந்தது. நான் குள்ளமாக, ஒல்லியாக இரண்டு தெற்றுப் பற்களுடன் இருந்தேன். எந்த விதத்திலும் அவளுக்குப்
பொருத்தமாக இல்லை. நான் குதிகால்களை உயர்த்தி அவள் உயரத்துக்கு இணையாக நடந்து வந்தேன்.

அமிர்த வர்ஷினிக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. எல்லாவற்றையும் அழகாகப் பார்க்கும் ஒரு தேவதை மனதைக் கொண்டிருந்தாள். நீர்க்கருவை மரத்தின் சாட்டை வடிவ மஞ்சள் பூவைப் பார்த்து ‘அழகா இருக்குல்ல’ என்றாள். சட்டென ஒரு பூவைப் பறித்துக் கொடுக்கவும் உதிர்த்து உள்ளங்கையில் வைத்து ஊதினாள். அந்த பிரதேசமெங்கும் மஞ்சள் பூத்தது.

அன்றிலிருந்து அவர்களின் நீராடும் பயணத்தின் மெய்க் காப்பாளனானேன் நான். சில நிலா நாட்களில் நாங்கள் வெள்ளி நதியில் நீராடுவோம். எப்படியோ அமிர்தவர்ஷினி குடும்பத்தோடு எனக்கொரு இணக்கமான நேசம் ஏற்பட்டது.

அமிர்தவர்ஷினியின் வருகைக்குப் பிறகு அந்த ஊர் அழகாக இருந்தது. சூரியனும் நிலாவும் கையெட்டும் தூரத்திலிருந்தது. நட்சத்திரங்கள் ஒவ்வொரு இரவிலும் வந்து எங்களை வேடிக்கை பார்த்தது. தரையில் வானவில் பூத்தது. என் பொழுதுகள் எல்லாம் அவளிடம் சரணடைந்திருந்தன. என் கால்கள் அமிர்தவர்ஷினியோடு நடந்தன.. அல்லது அமிர்தவர்ஷினிக்காக நடந்தன. அந்த ஊரில் ஒரே ஒரு பெண்தான் இருந்தாள். அவள் அமிர்தவர்ஷினி.

“அமிர்தவர்ஷினி.. இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்.?”

“இது ஒரு ராகம். இந்த ராகம் பாடினா மழை வரும்”

“பொய் சொல்றே..” நான் தெப்பக் குளத்தில் கல் எறிந்தபடியே இதைச் சொன்னேன்.

“பாடிப் பாரு.. மழை வரும்” என்றாள்.

“அமிர்தவர்ஷினி.. அமிர்த...வர்ஷினி...” நான் அவள் பெயரை ராகமாகப் பாட அவள் சிரித்தாள். அது பெரும் சிரிப்பு. இந்தப் பிரபஞ்சத்தை உலுக்கி விடும் பேய்ச் சிரிப்பு. அவள் சிரித்து அடங்கிய கணத்தில் அவள் கன்னத்தில் ஒரு துளி பெய்திருந்தது. துளிகள் பெருகின. இரண்டு படிகள் மேலேறி அமர்ந்தோம். எங்கள் கால்களை மழை நனைத்தது. கருக்கிருட்டில் கனிந்தது வானம். ஒரு பேரிடியை துவக்கமாகக் கொண்டு பெய்தது பெருமழை. நாங்கள் படித்துறை மண்டபத்தில் ஒதுங்கினோம்.

இடிச்சத்தம் எங்கள் விரல்களைக் கோர்த்து நின்றது. மழை எங்களை உருக்கி ஒருவருக்குள் ஒருவரை ஊற்றியது. அவள் என் தோளில் சாய்ந்தாள். அவளின் ஈர ஸ்பரிசம் என்னை உஷ்ணப்படுத்தியது. ஒரு கணம் சட்டென விலகியவள் படித்துறை மழையில் ஏகாந்தமாய் நனைந்தாள். அவள் கூந்தல் நடுவகிட்டில் ஒரு நதி ஓடியது.

அது அவள் நனையப் பெய்த மழை. அவள் நனைந்தாள். மழை அவளை ஒரு ஓவியமாக்கி விட்டிருந்தது. நான் மண்டபத்தில் அமர்ந்து அவளையே பார்த்தபடி இருந்தேன். அந்த மழை என் காதலை அவளுக்கு மொழி பெயர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். அதன் பின் அவள் பார்வையிலும் அணுகுமுறையிலும் இணக்கமான மாற்றங்கள் தெரிந்தது. நனைந்து திரும்பியவள் என் சட்டையைக் கேட்டாள். நான் கழற்றிக் கொடுக்கவும் சட்டையால் தலை துவட்டிக்கொண்டாள். அந்த மழை அவளுக்குக் காய்ச்சலையும் எனக்குக் காதலையும் தந்தது.

அந்த பள்ளியாண்டு முழுவதும் அவள் எனக்கு வண்ணமிகு கணங்களை பரிசளித்தபடியே இருந்தாள். பத்தாவது ரேங்கில் இருந்த என்னை இரண்டாவது ரேங்கிற்கு கொண்டு வந்தாள். அச்சுறுத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் சூட்சுமத்தை அவளிடம்தான் கற்றுக்கொண்டேன். வாரம் ஒருமுறை நகம் வெட்டுவது, திருத்தமாய் உடுத்திக் கொள்வது, எப்போதும் •பிரஷ்ஷாக இருப்பது என அவள் ஆளாக்கிய மனிதனாய் இருந்தேன்.

எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் துணிச்சல் என்னிடமிருந்தது. தாழ்வு மனப் பான்மை என்னை விட்டு விலகியது. ஆனபோதும் அவளிடம் காதல் சொல்லும் தைரியம் மட்டும் வரவே இல்லை.

அது பள்ளியின் கடைசி நாள். ப்ளஸ் டூ மாணவ மாணவிகள் கண்ணீரோடு ‘பசுமை நிறைந்த நினைவுகளே..’ பாடியபடி விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் விடைபெறும் சூழ்நிலையில்தான் இருந்தோம். அமிர்தவர்ஷினியின் அப்பாவிற்கு டிரான்ஸ்•பர் கிடைத்திருந்தது. இந்தத் தேர்வுக்காலம் வரைதான் என்னோடு இருப்பாள். அதற்குள் என் மனதில் உள்ளதை சொல்லிவிட வேண்டுமென முடிவு செய்தேன்.

அன்று மாலை அமிர்தவர்ஷினி என்னிடம் மடிக்கப் பட்ட ஒரு கடிதம் எடுத்து நீட்டினாள்.

“வச்சுக்க.. அப்புறமா படிச்சுப் பாரு..”

“என்ன இது.?”

“லவ் லெட்டர்” கண்கலங்க சொல்லிவிட்டு சட்டென நகர்ந்தாள். கடவுள் காதல் அறிந்தவன். அவனே ஒரு காதலன். தாங்க இயலாத தவிப்போடு யாரும் பார்க்காத வண்ணம் சைக்கிள் ஸ்டாண்ட் அருகே சென்று கடிதம் பிரித்துப் படித்தேன்.

அது காதல் கடிதம்தான். ஆனால் அது அமிர்தவர்ஷினி எனக்கு எழுதிய கடிதம் இல்லை. அமிர்தவர்ஷினிக்கு சங்கரநாராயணன் கொடுத்த கடிதம். சட்டென நொறுங்கிப் போனேன். ‘இதை என்னிடம் எதற்குத் தரவேண்டும்.?’. ஒருவேளை அமிர்தவர்ஷினிக்கும்..

நெருஞ்சிப் பூத்திருந்த மைதானத்தில் அமர்ந்திருந்தோம். எனக்கு அமிர்தவர்ஷினியின் மீது அளவிட முடியாத கோபம் எழுந்தது. நான் அமைதியாக இருந்தேன்.

ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகு அமிர்தவர்ஷினி பேசத் துவங்கினாள்.

“ஏன்டா இப்படிப் பண்ணினான்.. பதிமூணு வயசில என்ன காதல்.. நாங்க நிறைய ஊர்ல இருந்திருக்கறோம். எனக்கு நிறைய •பிரண்ட்ஸ் இருக்கறாங்க. நா எல்லாரையும் ஒரே மாதிரிதான் பாக்கறேன்..”

“ வா.. ஹெச்.எம் கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணுவோம்..”
“வேணாம்டா.. பாவம் எக்ஸாம் டைம். அவன் லை•ப் பாதிக்கப்படும்.. இப்படியே விட்டுடலாம்..”

நான் அமைதியாக இருந்தேன்.

“வா போகலாம்..”

இருவரும் எழுந்து நடந்தோம். என் காலுக்குக் கீழே பூமி நழுவிக் கொண்டிருந்தது. ஒரு சிந்தனை வசப்பட்ட அமைதி அமிர்தவர்ஷினியின் முகத்தில் இருந்தது. எப்போதும் அலைபாய நடந்து வரும் அவள் அமைதியாக நடந்து வந்தாள். ஏதோ நினைத்துக் கொண்டவளாய்,

“நீ நல்லவன்டா” என்றாள். நான் எங்கோ தூரத்தை வெறித்தபடி நடந்தேன். அவளை நேருக்கு நேர் பார்க்கும் துணிச்சல் என்னிடம் இல்லை.

முப்புடாதி அம்மன் கோவில் வேப்ப மரத்தில் இரண்டு புறாக்கள் இருந்தன.
அவளுக்கு நெடுந்தூரம் நடக்க வேண்டும்போலிருந்திருக்க வேண்டும்.

‘பஜார் வழியா போகலாம்” என்றாள். நான் பதிலேதும் சொல்லாமல் நடந்தேன். இருவரும் சீரான இடைவெளியில் நடந்து வந்தோம். எனக்கு நட்பிற்கும் காதலுக்குமான நுட்பமான இடைவெளி புரியாமல் போயிற்று. அந்த குழப்பத்தினூடாகவே வந்து கொண்டிருந்தேன்.

நாங்கள் ஓடைப் பாலத்தை அடைந்தபோது “அம்மா” என்கிற அலறல் கேட்டது. டவுன்பஸ் ஒரு சைக்கிள்காரன் மீது ஏறி இறங்கி இருந்தது. ரத்தமும் ரணமுமாய் வீழ்ந்து கிடந்தான். சட்டென என் கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டாள் அமிர்தவர்ஷினி. கூக்குரலோடு எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

நான் சட்டென அமிர்தவர்ஷினியை இழுத்துக்கொண்டு ஒரு முட்புதரில் மறைந்து கொண்டேன். உடலெங்கும் நடுக்கத்தில் அதிர நின்றாள் அமிர்தவர்ஷினி. அவளை ஆதரவாய் என் தோளில் சாய்த்துக் கொண்டேன். தட தடவென அவள் இதயம் அதிர்வது என்னுள் பரவியது. அமிர்தவர்ஷினி என்னை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். என்னை அப்பிப் பிடித்திருந்த நிலையில் ஒரு குழந்தையாய் தெரிந்தாள்.

“போலாமா” என்றேன். இப்போது அடிபட்டவனை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். இருவரும் ஓடை வழியாக குறுக்கே நடந்தோம்.

“ஏன்டா இப்படி.?” என்றாள் வர்ஷினி.

நான் பதிலேதும் சொல்லவில்லை.

நான் வர்ஷினியின் வீடுவரை சென்றுவிட்டு வந்தேன்.

“ரொம்ப தேங்க்ஸ் அரசு” என்றாள். எனக்கு சிரிப்பு வந்தது.

“ஏன் சிரிக்கறே” என்றாள்.

“பயத்துல உன் நெஞ்சு துடிச்சது ட்ரெய்ன் ஓடற மாதிரி இருந்துது” என்றேன். அவளும் சிரித்தாள்.

வரலாறு, புவியியல் பரிட்சை முடிந்த அன்று அமிர்தவர்ஷினி ஊரைவிட்டுப் புறப்பட்டாள். எந்த வலியும் இல்லாமல் அவளுக்கு விடைதரும் பக்குவத்தை அவள் எனக்குள் ஏற்படுத்தி இருந்தாள்.

ரயிலின் சன்னல் கம்பிகளுக்கிடையே இருந்தபடி,

“உன்னை என்னால மறக்கமுடியாது அரசு” என்றாள். என் வார்த்தைகள் கண்ணீராய் கசிந்து கண்களில் திரண்டிருந்தது. அழுதுவிடக்கூடாது என்ற உறுதியோடு இருந்தேன்.

ரயில் புறப்பட்டு விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சன்னல் கம்பிகளை பிடித்தபடி நின்றிருந்தேன். அமிர்தவர்ஷினி என் கைகளின் மேல் தன் கைகளை வைத்திருந்தாள். இப்படியே இருந்தாலும் நன்றாக இருக்குமென்றும் தோன்றியது.

“நா கிளம்பட்டுமா.?”

“ஏன் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா அழுதிடுவியா.?”. நான் அமைதியாக இருந்தேன். வர்ஷினியின் அப்பாவும் அம்மாவும் லக்கேஜ்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

“அரசு..”

நான் அவளை ஏறிட்டுப் பார்த்தேன்.

“அழறதுன்னா அழுதிடு.. உன் கண்ணீரையும் என்னையும் இங்கேயே விட்டுட்டுப் போயிரு..”. நான் அழவில்லை. கண்ணீர் வழிந்தபடி இருந்தது. அமிர்தவர்ஷினி என் கண்ணீர் துடைத்தாள்.

“நீ என்னை லவ் பண்றேன்னு எனக்குத் தெரியும். வேணாம்டா..” ரொம்பத் தணிவான குரலில் அவள் இதைச் சொன்னாள். சட்டென நான் உடைந்து அழத் துவங்க, சிக்னல் விழுந்தது. நெல்லை எக்ஸ்பிரஸ் என் தேவதையை சுமந்தபடி புறப்பட்டது.

“நான் திரும்பி நடந்தேன். நானும் அவளுமாக ரயில்வே ஸ்டேஷன் வந்தோம். இப்போது நான் மட்டும் திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த ரயிலின் சப்தம் அவள் இதயத்துடிப்பாய் என்னுள் ஒலித்துக் கொண்டிருந்தது. அவள் புள்ளியாய் மறைந்தாள். ஸ்டேசன் விட்டு வெளியே வரும்போது தூறலாய் மழை பெய்யத் துவங்கியது.

“அமிர்தவர்ஷினி...”

ப்போ.. பொய் சொல்றே...

ப்போ.. பொய் சொல்றே.

தாமிரா

“என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்” என்று சொன்னதும் ராகவன்
சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பியர் தெறித்தது.

“ஒயின் ஷாப்ல உக்காந்து கடவுள உருவாக்கறானாம். லூசாடா நீ..? இருக்கற
கடவுள்களுக்குள்ள நடக்கற ஏழரையையே தீக்க முடியல. புதுசா ஒரு கடவுள
உருவாக்கப் போறாராம் இவரு. சரக்கப் போடுறா.. சரக்கப் போடு..” என்றபடி மீண்டும்
குடிக்கத் துவங்கினான்.

“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல.. அதே சமயம் நான் நாத்திகனும் இல்ல..
ஆனாலும் எனக்குள்ள இருக்கற பக்தியை செலவழிக்க ஒரு கடவுள் வேணும்..”
தீர்க்கமாக இதைச் சொன்னபடி மிச்சமிருந்த சரக்கை ஒரே மடக்காக எடுத்துக்
குடித்தேன்.

“நாட்ல எத்தனை கடவுள்.. அதில எத்தனை சப் டிவிஷன்.. வெஜிடேரியன்,
நான் வெஜிடேரியன், ஆல்கஹால், நான் ஆல்கஹால்னு..”

“எந்தக் கடவுளையும் புடிக்கல.. எனக்கு கம்•பர்டபிளா ஒரு கடவுள் வேணும்.”

“எப்படிப்பட்ட கடவுள். புரியலடா..”

“பிரண்ட்லியா இருக்கணும்”

“அப்ப என்னை கடவுளா ஏத்துக்க.. டெய்லி ரெண்டு பியர் பாட்டில் படையல்
சாத்து. அருள் பாலிக்கறேன்.” என்றபடி சைட் டிஷ்ஷிற்காக டேபிளைத் தடவினான்.
அவனுக்கு போதை ஏறி இருக்க வேண்டும். இனி இவனிடம் பேசினால் எனக்குள்
இருக்கும் கடவுளை கருக்கலைத்து விடுவான். நான் எழுந்து கொண்டேன்.

அறைக்குத் திரும்பிய போது என்னுள் கடவுளின் தேவை அதிகரித்திருந்தது.
ராகவனின் கேள்வி உள்ளே முட்டித் திரிந்தது.

“எப்படிப்பட்ட கடவுள் வேணும்..?”

அந்தக் கேள்வியில் பயணமானேன்.

“என் கடவுளின் பெயர் என்ன.? நிறம் என்ன.? அதன் சக்தி என்ன.? என்
கடவுள் ஆணா.? பெண்ணா.?” கேள்விகள் சங்கிலித் தொடராய் நீண்டது. எப்போது
தூங்கினேன் என்று தெரியவில்லை.

காலையில் டீப்பாய் மீது கடவுள் அமர்ந்து இருந்தாள். பச்சை நிறத்தில்
சல்வார் அணிந்திருந்தாள். கருப்பென்றாலும் களையான முகம். குட்டிக் குட்டிக்
கை விரல்கள். அதில் சின்னதாய் சோம்பலில் வளர்ந்த நகம். எண்ணெய் வாராத
ஒற்றைக் கூந்தல். சிரித்தால் பளீரெனத் தெரியும் பல்வரிசை. இவள் யார் என்கிற
குழப்பத்தையும் மீறி அவளை எனக்குப் பிடித்திருந்தது.

எனக்குள் ஒரு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. நான் அவளை குழப்பமாகப்
பார்த்தேன். அவள் சிரித்தபடியே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.என் கடவுள் பெண் என்று நான் தீர்மானித்திருக்கவில்லை. ஆனாலும் அவள் பெண்ணாய் வந்தது நன்றாகத்தானிருந்தது.

“முகம் கழுவிட்டு வா.. டீ சாப்பிடலாம்..” அது கடவுள் எனக்கிட்ட முதல்
கட்டளை. நான் அவசரமாக புறப்பட்டேன்.

இருவரும் சாலையில் இறங்கி நடந்தபோது, இரவு பெய்த மழையால் சாலை
ஈரமாக இருந்தது. இருவரும் அமைதியாக நடந்து கொண்டிருந்தோம். அவளிடம்
என்ன பேசுவதென்று தெரியவில்லை. என் கடவுள் எப்படி இருக்குமென நானே
தீர்மானிக்குமுன் வந்து நிற்பவளிடம் என்ன பேசுவது.

அவள் பேசினாள். “நான் வேணும்னு ஏன் நெனைச்சே..?”

“எனக்கே எனக்குன்னு ஒரு கடவுள். அது என் பிரார்த்தனைய மட்டும்தான் கேக்கணும். என் வழிபாட்டை மட்டுந்தான் ஏத்துக்கணும். பாரதி காளிய கொண்டாடுன மாதிரி, கண்ணம்மாவ கொண்டாடுன மாதிரி நா கொண்டாடணும்..”

அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான் தயக்கமாக, “இப்ப இப்படி தோணுது. கடவுள் வேணும்னு நெனச்சப்போ இதெல்லாம் யோசிக்கல..” என்றேன்.

அவள் சிரித்தாள். அதில் தெய்வீகம் இருந்தது. இருவரும் டீ சாப்பிட்டோம்.
நான் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன்.

“எனக்கொன்னு குடு” என்றாள்.

“அய்யய்யோ.. கடவுள் சிகரெட் பிடிக்கலாமா.?”

“அப்ப நீயும் பிடிக்காத” என்றபடி என் வாயிலிருந்து சிகரெட்டைப் பிடுங்கி
எடுத்துப் போட்டாள். எனக்கு அந்த இயல்பு சினேகமாய் இருந்தது. பிடித்திருந்தது.
அவள் கடவுள் என்கிற நம்பிக்கை வந்தது.

“சந்நிதி ஏதும் அவளுக்கில்லை - அவள்
சாத்திரம் பேசும் கடவுளில்லை.
ஐம்பெரும் பூதப் பெருங்கலவை - இந்த
அவனியில் அவள் போல் தெய்வமில்லை”

நான் இந்தக் கவிதையைச் சொன்னதும் அவள் “என்ன இது” எனக் கேட்டாள்.
நான் முதல்முறையாக அவள் முன் சிரித்தேன்.

சிரித்தபடியே “ கடவுள்னா ஒரு துதிப்பாடல் வேணும்ல” என்றேன்.

அவள் ஒரு முறை அந்தக் கவிதையை முணு முணுப்பாக சொல்லிப் பார்த்து
விட்டு, “எனக்குப் பிடிக்கல” என்றபடி வேகமாக நடக்கத் துவங்கினாள். கடவுளுக்கும்
எனக்கும் ஏற்பட்ட முதல் முரண் அது.

“ஏன் பிடிக்கல.?”

“உனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.. பிடிக்கலன்னா
பிடிக்கல. அவ்ளோதான்” என்றபடி போய்க் கொண்டே இருந்தாள்.

அந்தக் கோபம் எனக்குப் பிடித்திருந்தது.

அன்று மாலை வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மாலையில்
அவள் வாசல் படிக்கட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள். கன்னத்தில்
கைவைத்து உதடு சுழித்து அவள் படித்த விதம் அழகாக இருந்தது.


“இந்த போஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கறே..” என்றேன். சட்டென திரும்பி
என்னை தீர்க்கமாக பார்த்தபடி

“நான் தேவதையா.? கடவுளா.?“ என்றாள்.

அவளிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஒரு சின்ன
தடுமாற்றம் எழுந்தது. கடவுளை உருவாக்குவதில் ஏதோ தவறு நேர்ந்து தேவதையை
உருவாக்கி விட்டேனா என்ற சந்தேகம் எழுந்தது.
“என்ன முழிக்கறே.? சொல்லு.. தேவதையா.. கடவுளா.?”

“தேவதைக் கடவுள்”

“ப்போ.. பொய் சொல்றே..” என்றாள். ப்போ என கண் சிமிட்டி தலை சாய்த்து
சொன்னபோது அவள் மீது பேரன்பும், பெருங்காதலும் ஏற்பட்டது.

அந்த கணத்திலிருந்து நான் ஆண் ஆண்டாளாய் மாறி இருந்தேன். சட்டென
அனிச்சையாய் அவள் பாதம் தொட்டேன். விருக்கென காலை இழுத்துக் கொண்டாள்.

“இது எனக்குப் பிடிக்கல.. ப்ளீஸ்”

“ஏன்.? கடவுள்னா பாதம் தொட்டு கும்பிடணும்ல..?”

“இதுக்கெல்லாம் எனக்கு தகுதி இல்லன்னு தோணுது”

“இருக்கு. நீ என் கடவுள்”

அவள் மௌனமானாள். அந்த மௌனம் ஆழமானதாக இருந்தது. நீண்ட
நேரத்துக்குப் பிறகு “அந்தக் கவிதை நல்ல கவிதை.. சந்நிதி ஏதும் அவளுக்கில்லை..
அவள் சாத்தி.. திரும்பச் சொல்லேன்” என்றாள்.

நான் கவிதை சொன்னதும் அவள் என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.
கடவுளின் முதல் ஸ்பரிசம். மெல்ல தோள் சாய்த்து அரவணைத்துக் கொண்டாள்.
கடவுளின் முதல் அரவணைப்பு.

அதன்பின் கடவுளுக்கு எனக்கும் இணக்கமான சூழல் ஏற்பட்டது. நான் எங்கு
சென்றாலும் கடவுளோடுதான் சென்றேன். எதைத் துவங்கினாலும் அவள் பாதம்
தொட்டுத்தான் துவங்கினேன்.அடுத்து வந்த பெருமழைக்காலம் முழுவதும் அவளும் நானும் சேர்ந்தே இருந்தோம். அது தாய்மையும் கருணையும் பெருகிப் பெய்த காலம்.

மழை பெய்யும் போதெல்லாம் ஒரு பறவையின் சிறகுகள் அவள் விலாப்புறத்தில்
முளைக்கும். ஏகாந்தமாய் கைகளை அகல விரித்து நனைவாள். ஒவ்வொரு துளியும் அவளுக்கு ஒவ்வொரு மழை. “ ஏய் இந்த மழை நல்லா இருக்குடா.. இந்த மழை நல்லா இருக்குடா..” என துளித்துளியாய் தொட்டு நனைவாள். மழை அழகு. அவள் நனையப் பெய்கிற மழை பேரழகு. ஈரம் சொட்ட சொட்ட அவள் வந்து அமர்கையில் அவள் கூந்தலிலிருந்து மழை பொழியும். அந்த தண்ணீர்த் தருணங்கள் வார்த்தைக்குள் அடங்காதவை.

நனைந்து திரும்பும் போதெல்லாம் அவளுக்கு ஒரு கருப்புத் தேனீர் தேவைப்படும். நான் ஊற்றிக் கொடுக்க, அந்த கோப்பையை மழையில் ஏந்தி இரண்டொரு மழைத்துளிகளோடுதான் தேனீர் அருந்துவாள். ‘இதென்ன பழக்கம்’ எனக் கேட்பேன்.
“மழைத்தேனீர்டா” என்பாள்.

இந்தக் கேள்வியும் பதிலும் எங்களுக்குள் நிலையானது. மழை பற்றி ஏதாவது
சொல்லேன் என்றாள் ஒருநாள்.

அது மழையற்ற நாள். சூரியன் உச்சியில் எரிந்த நேரம்.

“இப்ப எதுக்கு மழை பற்றி சொல்லணும்” எனக் கேட்டேன்.

“சொல்..லேன்..” என்றாள். என் ராக மனுஷி.

“உலர்ந்து போய்விட்டன
முன்னர் பெய்த மழை ஈரங்களும்
நம் முத்தங்களும்..” என்றேன்.
சட்டென கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுத்தமாய் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அது அவள் எனக்களித்த முதல் முத்தம். அந்த முத்த அதிர்ச்சியில் நான் உறைந்து
போயிருந்தேன். அவளது இரண்டாம் முத்தம் உயிர் கொடுத்தது.

“இந்த ஈரம் காயறதுக்குள்ள மழை பெய்யும் பாரு” என்றாள். பெய்தது.
அது அவள் மழை. கடவுள் மழை.

கடவுளுக்கும் எனக்குமான ஸ்பரிச பந்தம் அன்றிலிருந்து துவங்கியதுதான்.
அடுத்து நான் எழுதிய கவிதை தொகுப்பு முழுக்க மழையாய் இருந்தது. அவளாய்
இருந்தாள். மழை சகி, மழை ரட்சகி, மழை ராட்சசி என்று எழுதியதில் அவளுக்கு
அநேக கோபம் எழுந்தது.

அந்த ராட்சச அன்பிற்கு கட்டுப்பட்டவனாய் நான் இருந்தேன். எனக்கான
நண்பர்கள் வட்டம், உறவுச் சங்கிலிகள் எல்லாம் அறுந்து என் உலகம் ஒற்றை
மனுஷியால் ஆனது என்றாகிவிட்டது. அவளைத் தவிர்த்து வேறு எவரிடமும் பேச
எனக்கு எதுவுமில்லாமல் இருந்தது. பெருநகர வீதிகளில் அவளோடு நடந்தால் அந்த சந்தடி சாலையில் நாங்கள் இருவரும் மட்டும் இருப்போம்.

ஒருநாள்

ராகவன் கோவிலுக்கு போகலாம் என அழைத்தான். நான் தெய்வத்தோடுதான்
இருக்கிறேன் என்றேன். அவனுக்கு அந்த பதில் புரியவில்லை. அவள் சிரித்தாள்.

“ஏன் சிரிச்சே.?” ராகவன் போனதும் கேட்டேன்.

“உன் கடவுள், உனக்குள்ள இருக்கற ரகசியம். அவன்கிட்ட தெய்வத்தோட
இருக்கறேன்னு சொன்னா உன்னை பைத்தியமா பார்ப்பான்.” என்றாள்.
அவள் பேச்சின் உண்மை என்னை மௌனமாக்கியது. பகிர்ந்துகொள்ள
இயலாத சந்தோஷங்களும், துயரங்களும் எத்தனை வலி மிக்கவை என உணர்ந்து
கொண்டேன். யாரிடமாவது கடவுள் பற்றி சொல்ல வேண்டுமென்று தோன்றியது.
நண்பர்களற்ற இன்றைய நிலையில் நான் யாரிடம் சொல்வது.

என் குழப்பத்தை அவள் ரசித்தாள். ‘நான் உனக்கு பெரிய இம்சையா
இருக்கறேன்ல’ என்றாள். இல்லையென வெளிப்படையாக மறுத்தாலும் இவளொரு
அவஸ்தை என உள்மனம் உணர்த்தியது. என்னுள் மெல்ல படர்ந்து என்னை
ஆக்ரமித்தவள் என் எழுத்துக்களையும் ஆக்ரமித்துக் கொண்டாள். அவளைத் தவிர்த்து
எழுத என்னுள் எதுவுமில்லை.என் கடவுள் என்னை முடக்கிவிட்டது என்றே
தோன்றியது. இதை அவளிடம் சொன்னபோது

“நான் போகிறேன்” என்றாள் மூர்க்கமாக.

பக்தர்களை கடவுள் நிராகரிக்கலாம். கடவுளை பக்தர்கள் நிராகரிக்க
இயலுமா.? நான் மீண்டும் அவளிடம் சரணடைந்தேன். கூப்பித் தொழுத என்
கைவிரல்களில் கூட கண்ணீர் கசிந்தது.

எதுவும் பொருட்டில்லை அவளுக்கு. எழுந்து நடந்தாள். ஒரு யாசகப் பயணமாய்
நான் அவளை பின் தொடர்ந்தேன். சாந்தமாக இருந்ததில்லை தனித்துவமிக்க எந்த
பெண் தெய்வங்களும். ரௌத்ரம் பெண் தெய்வ இயல்பு. காளிக்கு துருத்திய நாக்கு.
இசக்கிக்கு முண்டக்கண், மாரிக்கு விரிந்த தலை, சூலாயுதம். கடவுள் ஆணாக
இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

நீண்ட நடைக்குப் பின் சற்று நின்று திரும்பிப் பார்த்தவள்

“கடவுள் கடவுள்னு கொண்டாடுறியே.. எனக்கொரு பேர் வச்சியா.?” என்றாள்.
நான் μடிச்சென்று அவள் எதிரே போய் நிற்க, அருகில் இருந்த மைல்கல் மேல்
அமர்ந்தாள்.
“சரி வா.. உனக்கொரு பேரைக் கண்டுபிடிப்போம்”

“மாட்டேன் போ.. எனக்கொரு பேர் வச்சு என்னைக் கூப்பிடு வர்றேன்”
என்றாள்.

சாலையில் வாகனங்கள் இரைச்சலோடு கடந்து சென்று கொண்டிருந்தது.
வானம் கருமேகமாய் திரண்டு மழைக்கான ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தது.
மழை பெய்தால் நன்றாக இருக்குமென தோன்றியது. மழைக்கு என் கடவுள்
சாந்தமாகும்.

இவளுக்கு மழையைத்தான் படையல் சாத்த வேண்டும். மனசுக்குள் மழை
பிரார்த்தனை தொடங்கியது. நான் கண்களை மூடிக்கொள்ள அவள் பேசத்
துவங்கினாள்.

“மழை பெய்யப் போகுது. எம்மேல முதல் துளி விழறதுக்குள்ள எம்பேர்
என்னன்னு சொல்லிரணும். இல்லன்னா போயிட்டே இருப்பேன்”

“பிரைடா காலா” என்றேன்

“அய்ய..”

“காளி, மாரி, அம்மன்னு ரொட்டீனா வேணாமேன்னு பாத்தேன். பிரைடா காலா
ஒரு பெண் μவியரோட பேர் ”

உதடு பிதுக்கி பிடிக்கவில்லையென மறுத்தாள். அவள் மேல் முதல் துளி விழுந்த
கணத்தில் ‘லிவ் - உல்மன்’ என்றேன். அவள் முகம் பிரகாசமாகியது. லிவ் உல்மன்.
ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

“நல்லா இருக்குடா.. யார் இவங்க” என்றாள்.

“ஒரு பெரிய நடிகை” என்றேன்.

தலையை கம்பீரமாக சாய்த்து எழுந்து ‘நானும்தான் பெரிய நடிகை. எல்லா
•பீலிங்ஸையும் எப்படி வெளிப்படுத்தறேன்னு பாரு’. சட் சட்டென மாறிய பாவனைகள்
அழகாக இருந்தது. நான் அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்டு, “எம்மேல கோபப்படாத.. என்னை விட்டுப் போயிடாத. உன்னைப் பிரியற மனசும் தெம்பும் எனக்கு இல்ல” என்றேன். இதைச்சொல்லும் போது நான் ஒரு குழந்தையாகி இருந்தேன்.

இருவரும் நனைந்தபடியே நடந்தோம்.

“எம் பேரை ஒரு தடவை சொல்லு”

“லிவ் உல்மன்”

“நீ என்னை எப்படிக் கூப்பிடுவே.?”

“லிவ்ன்னு கூப்பிடறேன். ப்ளீஸ் ஆல்வேஸ் லிவ் வித் மி லிவ்” என்று
சொல்லவும் கலகலவென சிரித்தாள். அவள் பற்களில் மழைத்துளி பட்டுத் தெறித்தது.

அந்தக் கணத்தில் கடவுளை நான் ஒரு ரசனைமிக்க குழந்தையாகப் பார்த்தேன்.
அவள் விரல்கள் மழையில் தாளமிட்டபடி வந்தன. மழைச்சத்தத்தையும் மீறி அதிலொரு
இசை தெறித்ததாய் உணர்ந்தேன்.

நாங்கள் எங்கள் தேனீர்க் கடையைத் தாண்டி நடந்து வந்துகொண்டிருந்தோம்

“ஒரு மழைத் தேனீர் அருந்தலாமா.?” எனக் கேட்டேன். அவள் அண்ணாந்து
வாய் திறந்து மழை குடித்தபடி “மழையையே அருந்தலாம்” என்றாள். இருள் கவிந்த
சாலையில் வாகனங்கள் வெளிச்சத்தோடு கடந்து சென்றன.

“லிவ்” என்றேன். ஆன்மாவிலிருந்து முதல் முறையாக அவளுக்கு வைத்த
பெயரை உச்சரித்தேன். ஆயிரம் வார்த்தைகளின் அழுத்தம் அந்த ஒற்றை அழைப்பில்
இருந்தது.

அவள் தலைகவிழ்த்து என்னைப் பார்த்தாள். நான் அவளிடம் எதுவும் சொல்ல
இயலாத ஒரு தடுமாற்றத்தோடு நின்றேன். முகத்திலிருந்த மழை நீரை வழித்து
துடைத்தாள். பறவைகள் சிறகு உலுப்புவது போல உடலை ஒரு முறை உலுக்கிக்
கொண்டாள். அவள் துப்பட்டாவிலிருந்து தண்ணீர் தெறித்தது.

நான் அவளையே பார்த்தபடி இருந்தேன். என் அருகில் வந்து நேருக்கு நேராய்
பார்த்தபடி “வாட் மேன்” என்றாள். நான் அமைதியாக இருந்தேன்.

“இப்ப நீ எதுவும் பேசமாட்டே. எனக்குத் தெரியும்”

என் காலுக்கு கீழே மழை நீர் ஒரு சிறு μடையாக μடிக்கொண்டிருந்தது.
அவள் சொல்வது சரி. இப்போது நான் எதுவும் பேச மாட்டேன். என்னுள் வார்த்தைகள் பாறையாய் உறைந்து போயிருந்தது. எங்கள் இருவருக்குமிடையே மழை பேசிக் கொண்டிருந்தது.

நான் நிற்பதா.? நடப்பதா.? என்கிற கேள்வியோடு இருந்தேன். ஈர நடுக்கம்
என் இதயம் வரை பரவி நின்றது. துளித்துளியாய் பெய்தது துக்க மழை.

என்னை ஊடுருவிக் கடக்கும் பார்வையோடு அவள் நின்றாள். அந்த பார்வை
எனக்குள்ளிருந்த பக்தியையும், பேரன்பையும் வருடித்தான் சென்றிருக்கும்.

வலது கையை என் தோளில் வைத்தபடி பேசத்துவங்கினாள்.

“உனக்கு தேவைப்பட்டது கடவுள் இல்ல. காதல். காதல் வேற.. கடவுள் வேற.
காதல் கடவுளாக முடியாது. கடவுள் காதலியாக முடியாது. ஒரு நல்ல பெண்ணா
தேடிக்கோ” என்றபடி நடந்தாள்.

என் தேவை கடவுள்தான். நான் காதலைக் கடந்து வந்தவன் என்பதை
அவளுக்கு உணர்த்த முடியவில்லை. அல்லது அவள் உணரவில்லை. இப்போதும் என் எதிரிலேயே இருக்கிறாள். குறுக்கும் நெடுக்குமாக என்னைக் கடந்தும் செல்கிறாள். அவள் முகத்தில் பழைய ஒளி இல்லை. புன்னகை இல்லை. அவளுள் எதையோ பறி கொடுத்த துயரம் உறைந்து கிடக்கிறது. என்னை நோக்கி நகர யத்தனிக்காத வைராக்கியம் அவளுள் நிரம்பித் தளும்புகிறது. இன்னும் அவள் எனக்கு கடவுளாக இருக்கிறாள். ஆயினும், நான் கடவுளற்ற மனிதனாக இருக்கிறேன்.

புலிகளின் இரையாண்மை

காடுகளின் கம்பீரம் புலிகள்
புலிகள் காக்கப்பட வேண்டியவை..
காரணம்
புலிகள் நம் தேசிய அடையாளம்..

மானுட வேட்டை போலில்லை
புலிகளின் வேட்டை..
அது தற்காப்பிற்கானது..
வாழ்வியலுக்கானது.

வேட்டை வெறியும் ரத்த வெறியும்
இருப்பதில்லை ஒருபோதும் புலிகளுக்கு..
அச்சுறுத்தினாலன்றி தூக்காது
அது தன் நக ஆயுதங்களை..

புலிகள் மனிதநேயமிக்கவை..
மனிதர்களைக் கொல்தல்
புலிகளுக்கு நேரும் சத்தியசோதனை..
புலிகளுக்கு உண்டு இரையாண்மை..

புலிகள் அமைதி விரும்புபவை.. தனித்து இருப்பவை
தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை..
தன் எல்லை தாண்டி வராது புலிகள் எப்போதும்..
புலிகளுக்கும் உண்டு.. எல்லை தாண்டா இறையாண்மை

சிங்கமும் புலியும் ஒரு வனத்தில் வாழ்வதில்லை
சிங்கமும் புலியும் ஒரு போரில் மோதுவதில்லை
மோதினால்..
புலிதான் வெல்லுமென்கிறது வனங்களின் வரலாறு.

புலிகளிலும் உண்டு போலிகள்
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.
புலிகளின் கம்பீரமும் புலிகளின் கருணையும்
போலிகளிடம் இருப்பதில்லை.

யானைப் பிளிறல், சிங்க கர்ஜனை
போலில்லை புலிக்குரல்..
ஒற்றை உறுமல் கேட்கும் எட்டுத் திக்கும்
தடுத்துவிட முடியாது எதுவும்... புலிக்குரலை.

புலிகள் அழியும் என
யாரும் சொன்னால் நம்பாதீர்கள்.
புலிகளை அழிப்போம் என
யாரும் சொன்னால் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.