குற்றப் பெருக்கின் முத்தத் தருணங்கள்
தாமிரா
தடக் தடக்.. தடக் தடக்கென கூட்ஸ் வண்டி எங்களைக் கடந்து சென்ற போது அவள் அனிச்சையாய் என் விரல்களை பிடித்துக் கொண்டாள். புறப்பட்ட நிமிடத்திலிருந்து அமைதியாக ஒரு மௌன யாத்திரை போலத்தான் வந்தோம். அவள் கைகளைக் கோர்த்துக் கொண்டது ஆறுதலாக இருந்தது.
“அக்கா வீட்டுக்கு போறதுக்கு இப்ப என்ன அவசரம்..?” நான் இதைக் கேட்டு முடித்தபோது எதிரே வந்த ஒரு எலக்ட்ரிக் ட்ரெயின் சத்தமாக ஒரு ஹாரன் அடித்துச் சென்றது. அவள் பதிலேதும் சொல்லவில்லை. ஒருவேளை அந்த ஹாரன் சப்தம் கேட்காமல் இருந்தால் பதில் சொல்லி இருக்கக்கூடும்.இருவரும் தண்டவாளம் கடந்து பிளாட்பார்ம் சென்றடைந்தோம். ஆளரவமற்ற இடத்தில் ஒரு இடம் தேடி அமர்ந்து கொண்டாள்
“ஏதாவது சாப்பிடறியா..?”
“ம்.. கா•பி..”
நான் சுற்றிலும் பார்த்துவிட்டு தூரத்திலிருந்த கேண்டீனுக்குச் சென்றேன். நேரம் கிடைத்தால் வாய் ஓயாமல் பேசுபவர்கள் நாங்கள். ஒவ்வொரு பேச்சு வார்த்தையும் எங்கோ துவங்கி எதிலோ முடியும். இன்று வார்த்தைகளற்று இருப்பது நரகமாக இருக்கிறது.
அந்த முத்தம் தவறோ என்கிற கேள்வி என்னை உறுத்திக் கொண்டிருந்தது. கேண்டீன்காரன் என்ன வேண்டும் என்றான். ஒரு குரோம்பேட்டை என்ற என் பதில் அவனுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். “சார்.. இது கேண்டீன்.. டிக்கெட் கவுண்டர் அங்க இருக்கு..” என்றான். நான் சுதாரித்து ஒரு கா•பி என்றேன்.
கா•பி வாங்கிவிட்டு திரும்பியபோது அவள் எங்கோ வெறித்தபடி இருந்தாள்.
நான் கா•பியை அவள் கையில் கொடுத்தேன்.
கா•பியை நிதானமாக ரசித்துக் குடித்தாள். தூரத்து மரத்திலிருந்து ஒரு காகம் கரைந்தது. அவள் ஏதாவது பேசுவாள் என எதிர்பார்த்தேன். எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். எனக்கு ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போல இருந்தது. மீண்டும் அந்த கேள்வியை கேட்கலாம் போலும் இருந்தது.
“அக்கா வீட்டுக்குப் போறதுக்கு இப்ப என்ன அவசரம்.?” நான் இதைக் கேட்கவும் அவள் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு பதிலேதும் சொல்லாமல் அமைதியாக கா•பியைக் குடித்தாள்.
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை இந்தக் காப்பிக்குப் பிறகு ‘வா வீட்டுக்குப் போகாலாம்’ என அழைப்பாள் என்று தோன்றியது. அப்படிக் கூப்பிட்டால் நன்றாக இருக்குமென்றும் தோன்றியது.
அவள் இறுக்கமாக இருந்தாள். உள்ளூர அவளது பயம் தெரிந்தது. விரல்கள் மெல்லியதாக நடுங்கியது போலிருந்தது.
“டிக்கெட் எடுத்துட்டு வர்றியா.?” என்றாள். என் அருகாமை அவளை அச்சுறுத்தி இருக்க வேண்டும். என்னை விட்டு விலகி இருப்பதற்கான காரணம் தேடுகிறாள். நான் மீண்டும் எழுந்து சென்றேன். சற்று தூரம் சென்று திரும்பி அவளைப் பார்த்தேன். பதட்டமில்லாமல் நிதானமாக கா•பியைக் குடித்துக் கொண்டிருந்தாள். அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
டிக்கெட் எடுத்து திரும்பியபோது அவள் கசக்கி எறிந்த காலிக்குவளை காலில் இடறியது. ஒரு கணம் என்னையே நான் மிதித்து விட்டது போலிருந்தது.
டிக்கெட்டை அவளிடம் கொடுத்தேன்.
“ரிட்டர்ன் டிக்கெட் எதுக்கு வாங்கினே.?”
“ஒருவேளை மனசு மாறி திரும்பி வந்தேன்னா.. எதுக்கும் இருக்கட்டுமே.”
அவள் அமைதியாக டிக்கெட்டை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒரு கொய்யாப்பழ வியாபாரியும் அதன் தொடர்ச்சியாய் ஒரு புத்தக வியாபாரியும் கடந்து சென்றார்கள். அடுத்த தாம்பரம் ரயில் இன்னும் பத்து நிமிடங்களில் வந்து சேரும் என நிலைய அறிவிப்பு குரல் கேட்டது.
நான் அவள் எதிரே நின்றபடி இருந்தேன். ஒரு குண்டு பெண்மணி அவள் அருகே அமர்ந்தாள். இனி எதுவும் பேச இயலாதபடி ஒரு அசௌகர்யமான சூழ்நிலை
ஏற்பட்டது. நேரம் மௌனங்களில் கரைந்து கொண்டிருந்தது. ட்ரெயின் வந்து விட்டால் நன்றாக இருக்கும். விடைபெற்று போய் விடலாம் என்று தோன்றியது.
நான் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தேன். ஆழமாக புகையை இழுத்து வெளியே விட்டேன். ஸ்டேசனில் அதிக கூட்டம் இல்லை. எதிர் சுவரில் ஏசு அழைத்துக் கொண்டிருந்தார். அருகே குக்கர் விளம்பரம் இருந்தது.
எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. சுற்றிலும் பார்த்தபடி என் கண்ணீரை அடக்கிக் கொண்டிருந்தேன். குண்டு பெண் எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, இவளிடம் ‘உன் பேர் என்னம்மா’ எனக் கேட்டாள்.
“சரஸ்வதி”
“இது உங்க வீட்டுக்காரரா.?”
இவள் ஆமாம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் பொதுவாக தலையசைத்தாள். எனக்கு அந்த தலையசைப்பு பிடித்திருந்தது. கடந்த ஓராண்டாக எங்கள் இருவருக்கும் ஒரு இனம் புரியாத நெருக்கம் இருந்தது. எங்கள் உறவின் அடையாளத்தை நாங்கள் தேடிக்கொண்டே இருந்தோம்.
யார் இவள்? யார் இவன்? என்கிற கேள்வி இருவருக்குள்ளும் இருந்தது. இணைந்து நடக்கின்ற நதியின் கரைகளாய் எங்கள் பயணம் நீண்டது. விடை தெரியாத ஒரு புதிர் கட்டங்களில் பயணப்பட்டோம். சமயங்களில் தாயம் விழுந்து ஏணியில் ஏறினோம். சமயங்களில் விருத்தங்கள் விழுந்து தரை இறங்கினோம்.
இந்த சதுரங்க ஆட்டத்தின் முடிவு இன்றைய வைகறைப் பொழுதில்தான் தீர்மானிக்கப்பட்டது. இரவு உணவுக்குப் பின் துவங்கிய பேச்சு வார்த்தை தொடர்ந்து நீடித்தது. ஆல்பெர்க் காம்யூவின் அன்னியனில் துவங்கியது. மெல்ல மெல்ல அந்த இலக்கிய பேச்சு தனிப்பட்ட வாழ்க்கை பகிர்தலாயிற்று.
அவள் தனது பால்ய காதலைச் சொல்லத் துவங்கினாள். பாவாடை சட்டையிலிருந்து தாவணிக்கு மாறி இருந்த நாளில்தான் அவளது முதல் காதல் அரும்பியது. அதைக் முதல் காதல் என்று கூட சொல்ல இயலாது. அவளது தாவணித் திருநாளில் தினமும் ஒருவன் அவளை சைட் அடித்திருக்கிறான்.
ஒருநாள் ஒரு புளியம்பழத்தைச் சுருட்டி ஒரு காதல் கடிதத்தை அவள் முன் விசிறி எறிந்திருக்கிறான். அதில் ‘அன்பே.. நான் உன்னை விரும்புகிறேன்’ என்று இருந்திருக்கிறது.
அடுத்த இரண்டு நாட்கள் சரஸ்வதி காய்ச்சலில் படுத்துக் கொண்டாள். அதன்பின் அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குள் அச்சக் காய்ச்சல் அடித்திருக்கிறது.
“இப்ப நெனைச்சா கஷ்டமா இருக்குடா” என்றாள்
“ஏன்.?”
“அவன் பாவம்ல.. எவ்வளவு கனவுகளோட என் பின்னால சுத்தி இருப்பான். எவ்வளவு ஏமாந்து போயிருப்பான். அட்லீஸ்ட் எம்பின்னால வராத.. எனக்கு உன்னை பிடிக்கலன்னாவது சொல்லி இருக்கணும். நான் அவனை திரும்பிக்கூட பாத்ததில்லை. இப்ப ஊருக்குப் போகும்போதெல்லாம் அவனை எங்கயாவது பாத்துட மாட்டமான்னு தோணுது..”
“பாத்து..?”
“பாத்து என்ன பண்ணப் போறேன்னு தெரியல. ஆனா பாக்கணும் போல இருக்கு. ஸாரிடா.. என்னை மன்னிச்சிருடாங்கற மாதிரி ஒரு பார்வை. எனக்கு அதுபோதும்..”
இதைச் சொல்லும்போது அவள் கண்கலங்கி இருந்தாள். அந்தக் கண்ணீரில் ஒரு பாவமன்னிப்பிற்கான யாசகம் இருந்தது. நான் அவள் முன் நெற்றியைக் கலைத்தபடி.. “நீ உள்ளுக்குள்ள அவனை லவ் பண்ணி இருக்கறே.. அது உனக்கு தெரியாம இருந்திருக்கு. அதான் இத்தனை வருஷம் கழிச்சு உனக்கு அழுகை வருது” என்றேன்.
அதன்பின் அவள் பொங்கி அழுதாள். நான் அமைதியாக அவளை அழவிட்டேன். ஒரு நீண்ட அழுகை முடிந்து நிதானத்திற்கு வந்தாள். நான் தண்ணீர் எடுத்துக் கொடுக்கவும் பெரும் தாகத்தோடு பருகினாள். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பேசத்துவங்கினாள்.
“அவனை நிராகரிச்ச பிறகு என் வாழ்க்கையில காதலே இல்லாம போச்சுடா.. ஆனா இன்னும் எனக்குள்ள ஒரு காதலிக்கற மனசு இருக்கு.”
“நல்லது. லவ்ங்கறது காமன் ப்ரேஸ். ஒரு ஆணைத்தான் காதலிக்கணும்னு இல்லே.. இயற்கையை லவ் பண்ணலாம். குழந்தையை லவ் பண்ணலாம்.. இந்த சொசைட்டியை, கல்ச்சரை, எழுத்தை, ஆர்ட்டை.. எதை வேணா லவ் பண்ணலாம்” என்றேன்.
அவள் மௌனமாக இருந்தாள். தொலைக்காட்சியில் ‘ராமனின் மோகனம்’ ஓடிக்கொண்டிருந்தது. என்னிடம் இருந்த கடைசி சிகரெட்டைப் பற்ற வைத்தேன். தூக்கம் கண்களைச் சுழற்றியது.
“லவ் ஸாங் கேக்கும் போதெல்லாம் எங்கேயோ ஒரு வலி. தோத்துட்டோம்ங்கற இயலாமை. மனசு அப்படியே உருகி வழியிது. என்னால அந்த கணங்களை தாங்க முடியல. உசிரு வலிக்குதுடா..” தூரத்தை வெறித்தபடி அவள் இதைச் சொன்னபோது
அந்த வார்த்தைகளில் துயரம் நிறைந்திருந்தது.
“நான் சிகரெட் வாங்கிட்டு வரட்டுமா.?” என்றேன்
“இப்ப போகாதே ப்ளீஸ்.. தனியா இருக்க பயமா இருக்கு” என்றாள். மணி நாலரை இருக்கும். டீக்கடை திறந்திருப்பான். எனக்கு கொஞ்சம் நடந்து சென்று தூரமாக இருக்கும் டீக்கடையில் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வரலாமெனத் தோன்றியது. இவளை விட்டுவிட்டு இப்போது போக முடியாது. இந்த மௌனம் ஒரு தற்கொலை மனோ பாவத்திற்கான முகாந்திரமாக இருக்கலாம். நான் அமைதியாக இருந்தேன்.
திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவளாய் “ ஒரு கவிதை சொல்லேன்..”
என்றாள். சிகரெட் கரைந்து கையைச் சுட்டது. நான் ஆஷ்ட்ரேயில் வைத்து அழுத்தியபடி கவிதை சொல்லத் துவங்கினேன்.
“போகும் வரும் பாதைகள்..
போகச் சம்மதமெனில் போ..!
இது வழியனுப்பி
பழக்கப்பட்ட மனசு”
கவிதை சொல்லி முடித்ததும் சட்டென என் கைகளை பிடித்துக் கொண்டாள்.
“அழகான கவிதை. எப்படி கேட்டவுடனே பட்டுன்னு சொல்றே. முன்னாடியே யோசிச்சு வச்சிருப்பியோ.?” என்றாள். இல்லையென்பதாய் தலையசைத்தேன்.
“நான் ட்ரை பண்ணினாக்கூட இது மாதிரி கவிதை வருமா.?”
“வரும். நிச்சயமா வரும். காதல் கொண்ட எல்லா மனசுக்குள்ளயும் கவிதை இருக்கு. நான் எழுதறேன். நீ எழுதல. அதான் வித்தியாசம். நீயும் எழுத முயற்சி பண்ணு. உனக்கும் கவிதை வரும்..” என்றேன்.
அவள் தீவிரமாக யோசித்தாள். அவளது துயர கணங்களிலிருந்து மீண்டு விட்டாள் என்றே தோன்றியது. அவளை இன்னும் இலகுவாக்கும் முயற்சியாய் ‘நான் ஒரு வரி சொல்றேன். அதன் தொடர்ச்சியாக நீ ஒரு வரி சொல். இருவரும் சேர்ந்து கவிதை எழுதுவோம்’ என்றேன்.
உற்சாகமாகத் தலையசைத்தாள்.
நான் முதல் வரியை யோசித்துக் கொண்டிருந்த கணத்தில், “நா அடுத்த வரியைச் சரியா சொல்லிட்டா என்ன தருவே.?” எனக் கேட்டாள்.
“என்ன வேணும்னாலும் கேளு தர்றேன்” என்றபடி யோசிக்கத் துவங்கினேன்.
“பருவம் தவறிப் பெய்த மழையே..
என் தூரங்களில் பெய்யச் சொன்னால்..”
என கவிதையை பாதியில் நிறுத்தி அடுத்த வரியைச் சொல் என்றேன். ஒரு சின்ன யோசனைக்குப் பிறகு..
“என் துயரங்களில் ஏன் பெய்தாய்..” என்றாள்.
நான் அவள் கைகளை அழுத்தமாய் குலுக்கியபடி சூப்பர் என்றேன். அடுத்த வரியைச் சொல் என எனக்கு கட்டளையிட்டாள்.
“இலையுதிர் காலத்தில்
நீ வந்து சென்றதை..” என சொல்லி நிறுத்திய கணத்தில்
“எந்தப் பூப்பூத்துக் கொண்டாடுவது நான்” என்றாள். மொத்தமாய் சொல்லிப் பார்க்க அதற்குள் ஒரு அழகான கவிதை இருந்தது. இவ்வளவுதான். இப்படியே யோசித்தால் கவிதை வரும் என்றேன்.
அவள் இப்போது உற்சாகமான மனுஷியாக மாறி இருந்தாள். எனக்குள் இருந்த தூக்கமும் கலைந்து போயிருந்தது.
“என்ன வேணும் கேளு” என்றேன்.
எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவள் கை என் இதயம் நோக்கி நீண்டது. நான் இரண்டு கைகளையும் அகல விரிக்க, எனக்குள் ஒரு பறவைக்குஞ்சாய் வந்து ஒட்டிக்கொண்டாள். இருவரும் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டோம். தொலைக்காட்சி இப்போது ‘மௌனமான நேரம்.. இளமனதில் என்ன பாரம்’ பாடலை இசைத்துக் கொண்டிருந்தது.
வைகறை மெல்ல விடியலை நோக்கி நகர்ந்தது. முத்தத்தின் குற்றப்பெருக்கில் இருவரும் உறைந்துபோய் இருந்தோம். எங்கள் நேசமும், வார்த்தைகளும் பிரேதங்களாகி அறையெங்கும் இறைந்து கிடந்தது.
நான் குளித்து முடித்து புறப்பட்டபோது, அவள் “அக்கா வீட்டுக்குப் போறேன். என்னை ஸ்டேசன்ல கொண்டுபோய் விட்டுரு” என்றாள்.
தாம்பரம் ரயில் வந்து நின்றது. அவள் அமைதியாக இருந்தாள். ரயில் புறப்படுவதற்கான ஹார்ன் சவுண்ட் கேட்ட பிறகும் அமைதியாக இருந்தாள்.
ரயில்கள் தொடர்ச்சியாய் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது. நாங்கள் மௌனமாக ஸ்டேசனில் அமர்ந்து இருந்தோம்.
ஏதோ ஒன்றை சொல்லிவிடும் தவிப்பு அவளுக்குள் இருந்தது. ஏதேனும் ஒரு ரயிலில் அவள் ஏறும் முன் என்னிடம் பேசக்கூடும் அல்லது பயணத்தை ரத்து செய்துவிட்டு என்னோடு திரும்பி வரக்கூடும்.
நான் காத்திருந்தேன் அவள் மௌனம் கலையும் தருணத்திற்காக.
அடுத்த ரயில் பிளாட்•பார்மில் வந்து நின்றபோது அவள் என்னை நோக்கித் திரும்பினாள்.
“ஒரு செகண்ட் உன்னை அவனா பாத்துட்டேன். அதுதான் தப்பு.. “ என்றபடி ரயிலை நோக்கிச் சென்றாள். அவளைச் சுமந்தபடி ரயில் கூச்சலிட்டுக் கிளம்பியது.
நான் திரும்பி நடந்தேன். அவள் அந்த வார்த்தையை சொல்லி இருக்க வேண்டாம்.
No comments:
Post a Comment