Sunday, April 5, 2009

ப்போ.. பொய் சொல்றே...

ப்போ.. பொய் சொல்றே.

தாமிரா

“என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்” என்று சொன்னதும் ராகவன்
சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பியர் தெறித்தது.

“ஒயின் ஷாப்ல உக்காந்து கடவுள உருவாக்கறானாம். லூசாடா நீ..? இருக்கற
கடவுள்களுக்குள்ள நடக்கற ஏழரையையே தீக்க முடியல. புதுசா ஒரு கடவுள
உருவாக்கப் போறாராம் இவரு. சரக்கப் போடுறா.. சரக்கப் போடு..” என்றபடி மீண்டும்
குடிக்கத் துவங்கினான்.

“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல.. அதே சமயம் நான் நாத்திகனும் இல்ல..
ஆனாலும் எனக்குள்ள இருக்கற பக்தியை செலவழிக்க ஒரு கடவுள் வேணும்..”
தீர்க்கமாக இதைச் சொன்னபடி மிச்சமிருந்த சரக்கை ஒரே மடக்காக எடுத்துக்
குடித்தேன்.

“நாட்ல எத்தனை கடவுள்.. அதில எத்தனை சப் டிவிஷன்.. வெஜிடேரியன்,
நான் வெஜிடேரியன், ஆல்கஹால், நான் ஆல்கஹால்னு..”

“எந்தக் கடவுளையும் புடிக்கல.. எனக்கு கம்•பர்டபிளா ஒரு கடவுள் வேணும்.”

“எப்படிப்பட்ட கடவுள். புரியலடா..”

“பிரண்ட்லியா இருக்கணும்”

“அப்ப என்னை கடவுளா ஏத்துக்க.. டெய்லி ரெண்டு பியர் பாட்டில் படையல்
சாத்து. அருள் பாலிக்கறேன்.” என்றபடி சைட் டிஷ்ஷிற்காக டேபிளைத் தடவினான்.
அவனுக்கு போதை ஏறி இருக்க வேண்டும். இனி இவனிடம் பேசினால் எனக்குள்
இருக்கும் கடவுளை கருக்கலைத்து விடுவான். நான் எழுந்து கொண்டேன்.

அறைக்குத் திரும்பிய போது என்னுள் கடவுளின் தேவை அதிகரித்திருந்தது.
ராகவனின் கேள்வி உள்ளே முட்டித் திரிந்தது.

“எப்படிப்பட்ட கடவுள் வேணும்..?”

அந்தக் கேள்வியில் பயணமானேன்.

“என் கடவுளின் பெயர் என்ன.? நிறம் என்ன.? அதன் சக்தி என்ன.? என்
கடவுள் ஆணா.? பெண்ணா.?” கேள்விகள் சங்கிலித் தொடராய் நீண்டது. எப்போது
தூங்கினேன் என்று தெரியவில்லை.

காலையில் டீப்பாய் மீது கடவுள் அமர்ந்து இருந்தாள். பச்சை நிறத்தில்
சல்வார் அணிந்திருந்தாள். கருப்பென்றாலும் களையான முகம். குட்டிக் குட்டிக்
கை விரல்கள். அதில் சின்னதாய் சோம்பலில் வளர்ந்த நகம். எண்ணெய் வாராத
ஒற்றைக் கூந்தல். சிரித்தால் பளீரெனத் தெரியும் பல்வரிசை. இவள் யார் என்கிற
குழப்பத்தையும் மீறி அவளை எனக்குப் பிடித்திருந்தது.

எனக்குள் ஒரு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. நான் அவளை குழப்பமாகப்
பார்த்தேன். அவள் சிரித்தபடியே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.என் கடவுள் பெண் என்று நான் தீர்மானித்திருக்கவில்லை. ஆனாலும் அவள் பெண்ணாய் வந்தது நன்றாகத்தானிருந்தது.

“முகம் கழுவிட்டு வா.. டீ சாப்பிடலாம்..” அது கடவுள் எனக்கிட்ட முதல்
கட்டளை. நான் அவசரமாக புறப்பட்டேன்.

இருவரும் சாலையில் இறங்கி நடந்தபோது, இரவு பெய்த மழையால் சாலை
ஈரமாக இருந்தது. இருவரும் அமைதியாக நடந்து கொண்டிருந்தோம். அவளிடம்
என்ன பேசுவதென்று தெரியவில்லை. என் கடவுள் எப்படி இருக்குமென நானே
தீர்மானிக்குமுன் வந்து நிற்பவளிடம் என்ன பேசுவது.

அவள் பேசினாள். “நான் வேணும்னு ஏன் நெனைச்சே..?”

“எனக்கே எனக்குன்னு ஒரு கடவுள். அது என் பிரார்த்தனைய மட்டும்தான் கேக்கணும். என் வழிபாட்டை மட்டுந்தான் ஏத்துக்கணும். பாரதி காளிய கொண்டாடுன மாதிரி, கண்ணம்மாவ கொண்டாடுன மாதிரி நா கொண்டாடணும்..”

அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான் தயக்கமாக, “இப்ப இப்படி தோணுது. கடவுள் வேணும்னு நெனச்சப்போ இதெல்லாம் யோசிக்கல..” என்றேன்.

அவள் சிரித்தாள். அதில் தெய்வீகம் இருந்தது. இருவரும் டீ சாப்பிட்டோம்.
நான் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன்.

“எனக்கொன்னு குடு” என்றாள்.

“அய்யய்யோ.. கடவுள் சிகரெட் பிடிக்கலாமா.?”

“அப்ப நீயும் பிடிக்காத” என்றபடி என் வாயிலிருந்து சிகரெட்டைப் பிடுங்கி
எடுத்துப் போட்டாள். எனக்கு அந்த இயல்பு சினேகமாய் இருந்தது. பிடித்திருந்தது.
அவள் கடவுள் என்கிற நம்பிக்கை வந்தது.

“சந்நிதி ஏதும் அவளுக்கில்லை - அவள்
சாத்திரம் பேசும் கடவுளில்லை.
ஐம்பெரும் பூதப் பெருங்கலவை - இந்த
அவனியில் அவள் போல் தெய்வமில்லை”

நான் இந்தக் கவிதையைச் சொன்னதும் அவள் “என்ன இது” எனக் கேட்டாள்.
நான் முதல்முறையாக அவள் முன் சிரித்தேன்.

சிரித்தபடியே “ கடவுள்னா ஒரு துதிப்பாடல் வேணும்ல” என்றேன்.

அவள் ஒரு முறை அந்தக் கவிதையை முணு முணுப்பாக சொல்லிப் பார்த்து
விட்டு, “எனக்குப் பிடிக்கல” என்றபடி வேகமாக நடக்கத் துவங்கினாள். கடவுளுக்கும்
எனக்கும் ஏற்பட்ட முதல் முரண் அது.

“ஏன் பிடிக்கல.?”

“உனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.. பிடிக்கலன்னா
பிடிக்கல. அவ்ளோதான்” என்றபடி போய்க் கொண்டே இருந்தாள்.

அந்தக் கோபம் எனக்குப் பிடித்திருந்தது.

அன்று மாலை வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மாலையில்
அவள் வாசல் படிக்கட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள். கன்னத்தில்
கைவைத்து உதடு சுழித்து அவள் படித்த விதம் அழகாக இருந்தது.


“இந்த போஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கறே..” என்றேன். சட்டென திரும்பி
என்னை தீர்க்கமாக பார்த்தபடி

“நான் தேவதையா.? கடவுளா.?“ என்றாள்.

அவளிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஒரு சின்ன
தடுமாற்றம் எழுந்தது. கடவுளை உருவாக்குவதில் ஏதோ தவறு நேர்ந்து தேவதையை
உருவாக்கி விட்டேனா என்ற சந்தேகம் எழுந்தது.
“என்ன முழிக்கறே.? சொல்லு.. தேவதையா.. கடவுளா.?”

“தேவதைக் கடவுள்”

“ப்போ.. பொய் சொல்றே..” என்றாள். ப்போ என கண் சிமிட்டி தலை சாய்த்து
சொன்னபோது அவள் மீது பேரன்பும், பெருங்காதலும் ஏற்பட்டது.

அந்த கணத்திலிருந்து நான் ஆண் ஆண்டாளாய் மாறி இருந்தேன். சட்டென
அனிச்சையாய் அவள் பாதம் தொட்டேன். விருக்கென காலை இழுத்துக் கொண்டாள்.

“இது எனக்குப் பிடிக்கல.. ப்ளீஸ்”

“ஏன்.? கடவுள்னா பாதம் தொட்டு கும்பிடணும்ல..?”

“இதுக்கெல்லாம் எனக்கு தகுதி இல்லன்னு தோணுது”

“இருக்கு. நீ என் கடவுள்”

அவள் மௌனமானாள். அந்த மௌனம் ஆழமானதாக இருந்தது. நீண்ட
நேரத்துக்குப் பிறகு “அந்தக் கவிதை நல்ல கவிதை.. சந்நிதி ஏதும் அவளுக்கில்லை..
அவள் சாத்தி.. திரும்பச் சொல்லேன்” என்றாள்.

நான் கவிதை சொன்னதும் அவள் என் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.
கடவுளின் முதல் ஸ்பரிசம். மெல்ல தோள் சாய்த்து அரவணைத்துக் கொண்டாள்.
கடவுளின் முதல் அரவணைப்பு.

அதன்பின் கடவுளுக்கு எனக்கும் இணக்கமான சூழல் ஏற்பட்டது. நான் எங்கு
சென்றாலும் கடவுளோடுதான் சென்றேன். எதைத் துவங்கினாலும் அவள் பாதம்
தொட்டுத்தான் துவங்கினேன்.அடுத்து வந்த பெருமழைக்காலம் முழுவதும் அவளும் நானும் சேர்ந்தே இருந்தோம். அது தாய்மையும் கருணையும் பெருகிப் பெய்த காலம்.

மழை பெய்யும் போதெல்லாம் ஒரு பறவையின் சிறகுகள் அவள் விலாப்புறத்தில்
முளைக்கும். ஏகாந்தமாய் கைகளை அகல விரித்து நனைவாள். ஒவ்வொரு துளியும் அவளுக்கு ஒவ்வொரு மழை. “ ஏய் இந்த மழை நல்லா இருக்குடா.. இந்த மழை நல்லா இருக்குடா..” என துளித்துளியாய் தொட்டு நனைவாள். மழை அழகு. அவள் நனையப் பெய்கிற மழை பேரழகு. ஈரம் சொட்ட சொட்ட அவள் வந்து அமர்கையில் அவள் கூந்தலிலிருந்து மழை பொழியும். அந்த தண்ணீர்த் தருணங்கள் வார்த்தைக்குள் அடங்காதவை.

நனைந்து திரும்பும் போதெல்லாம் அவளுக்கு ஒரு கருப்புத் தேனீர் தேவைப்படும். நான் ஊற்றிக் கொடுக்க, அந்த கோப்பையை மழையில் ஏந்தி இரண்டொரு மழைத்துளிகளோடுதான் தேனீர் அருந்துவாள். ‘இதென்ன பழக்கம்’ எனக் கேட்பேன்.
“மழைத்தேனீர்டா” என்பாள்.

இந்தக் கேள்வியும் பதிலும் எங்களுக்குள் நிலையானது. மழை பற்றி ஏதாவது
சொல்லேன் என்றாள் ஒருநாள்.

அது மழையற்ற நாள். சூரியன் உச்சியில் எரிந்த நேரம்.

“இப்ப எதுக்கு மழை பற்றி சொல்லணும்” எனக் கேட்டேன்.

“சொல்..லேன்..” என்றாள். என் ராக மனுஷி.

“உலர்ந்து போய்விட்டன
முன்னர் பெய்த மழை ஈரங்களும்
நம் முத்தங்களும்..” என்றேன்.
சட்டென கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுத்தமாய் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அது அவள் எனக்களித்த முதல் முத்தம். அந்த முத்த அதிர்ச்சியில் நான் உறைந்து
போயிருந்தேன். அவளது இரண்டாம் முத்தம் உயிர் கொடுத்தது.

“இந்த ஈரம் காயறதுக்குள்ள மழை பெய்யும் பாரு” என்றாள். பெய்தது.
அது அவள் மழை. கடவுள் மழை.

கடவுளுக்கும் எனக்குமான ஸ்பரிச பந்தம் அன்றிலிருந்து துவங்கியதுதான்.
அடுத்து நான் எழுதிய கவிதை தொகுப்பு முழுக்க மழையாய் இருந்தது. அவளாய்
இருந்தாள். மழை சகி, மழை ரட்சகி, மழை ராட்சசி என்று எழுதியதில் அவளுக்கு
அநேக கோபம் எழுந்தது.

அந்த ராட்சச அன்பிற்கு கட்டுப்பட்டவனாய் நான் இருந்தேன். எனக்கான
நண்பர்கள் வட்டம், உறவுச் சங்கிலிகள் எல்லாம் அறுந்து என் உலகம் ஒற்றை
மனுஷியால் ஆனது என்றாகிவிட்டது. அவளைத் தவிர்த்து வேறு எவரிடமும் பேச
எனக்கு எதுவுமில்லாமல் இருந்தது. பெருநகர வீதிகளில் அவளோடு நடந்தால் அந்த சந்தடி சாலையில் நாங்கள் இருவரும் மட்டும் இருப்போம்.

ஒருநாள்

ராகவன் கோவிலுக்கு போகலாம் என அழைத்தான். நான் தெய்வத்தோடுதான்
இருக்கிறேன் என்றேன். அவனுக்கு அந்த பதில் புரியவில்லை. அவள் சிரித்தாள்.

“ஏன் சிரிச்சே.?” ராகவன் போனதும் கேட்டேன்.

“உன் கடவுள், உனக்குள்ள இருக்கற ரகசியம். அவன்கிட்ட தெய்வத்தோட
இருக்கறேன்னு சொன்னா உன்னை பைத்தியமா பார்ப்பான்.” என்றாள்.
அவள் பேச்சின் உண்மை என்னை மௌனமாக்கியது. பகிர்ந்துகொள்ள
இயலாத சந்தோஷங்களும், துயரங்களும் எத்தனை வலி மிக்கவை என உணர்ந்து
கொண்டேன். யாரிடமாவது கடவுள் பற்றி சொல்ல வேண்டுமென்று தோன்றியது.
நண்பர்களற்ற இன்றைய நிலையில் நான் யாரிடம் சொல்வது.

என் குழப்பத்தை அவள் ரசித்தாள். ‘நான் உனக்கு பெரிய இம்சையா
இருக்கறேன்ல’ என்றாள். இல்லையென வெளிப்படையாக மறுத்தாலும் இவளொரு
அவஸ்தை என உள்மனம் உணர்த்தியது. என்னுள் மெல்ல படர்ந்து என்னை
ஆக்ரமித்தவள் என் எழுத்துக்களையும் ஆக்ரமித்துக் கொண்டாள். அவளைத் தவிர்த்து
எழுத என்னுள் எதுவுமில்லை.என் கடவுள் என்னை முடக்கிவிட்டது என்றே
தோன்றியது. இதை அவளிடம் சொன்னபோது

“நான் போகிறேன்” என்றாள் மூர்க்கமாக.

பக்தர்களை கடவுள் நிராகரிக்கலாம். கடவுளை பக்தர்கள் நிராகரிக்க
இயலுமா.? நான் மீண்டும் அவளிடம் சரணடைந்தேன். கூப்பித் தொழுத என்
கைவிரல்களில் கூட கண்ணீர் கசிந்தது.

எதுவும் பொருட்டில்லை அவளுக்கு. எழுந்து நடந்தாள். ஒரு யாசகப் பயணமாய்
நான் அவளை பின் தொடர்ந்தேன். சாந்தமாக இருந்ததில்லை தனித்துவமிக்க எந்த
பெண் தெய்வங்களும். ரௌத்ரம் பெண் தெய்வ இயல்பு. காளிக்கு துருத்திய நாக்கு.
இசக்கிக்கு முண்டக்கண், மாரிக்கு விரிந்த தலை, சூலாயுதம். கடவுள் ஆணாக
இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

நீண்ட நடைக்குப் பின் சற்று நின்று திரும்பிப் பார்த்தவள்

“கடவுள் கடவுள்னு கொண்டாடுறியே.. எனக்கொரு பேர் வச்சியா.?” என்றாள்.
நான் μடிச்சென்று அவள் எதிரே போய் நிற்க, அருகில் இருந்த மைல்கல் மேல்
அமர்ந்தாள்.
“சரி வா.. உனக்கொரு பேரைக் கண்டுபிடிப்போம்”

“மாட்டேன் போ.. எனக்கொரு பேர் வச்சு என்னைக் கூப்பிடு வர்றேன்”
என்றாள்.

சாலையில் வாகனங்கள் இரைச்சலோடு கடந்து சென்று கொண்டிருந்தது.
வானம் கருமேகமாய் திரண்டு மழைக்கான ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தது.
மழை பெய்தால் நன்றாக இருக்குமென தோன்றியது. மழைக்கு என் கடவுள்
சாந்தமாகும்.

இவளுக்கு மழையைத்தான் படையல் சாத்த வேண்டும். மனசுக்குள் மழை
பிரார்த்தனை தொடங்கியது. நான் கண்களை மூடிக்கொள்ள அவள் பேசத்
துவங்கினாள்.

“மழை பெய்யப் போகுது. எம்மேல முதல் துளி விழறதுக்குள்ள எம்பேர்
என்னன்னு சொல்லிரணும். இல்லன்னா போயிட்டே இருப்பேன்”

“பிரைடா காலா” என்றேன்

“அய்ய..”

“காளி, மாரி, அம்மன்னு ரொட்டீனா வேணாமேன்னு பாத்தேன். பிரைடா காலா
ஒரு பெண் μவியரோட பேர் ”

உதடு பிதுக்கி பிடிக்கவில்லையென மறுத்தாள். அவள் மேல் முதல் துளி விழுந்த
கணத்தில் ‘லிவ் - உல்மன்’ என்றேன். அவள் முகம் பிரகாசமாகியது. லிவ் உல்மன்.
ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

“நல்லா இருக்குடா.. யார் இவங்க” என்றாள்.

“ஒரு பெரிய நடிகை” என்றேன்.

தலையை கம்பீரமாக சாய்த்து எழுந்து ‘நானும்தான் பெரிய நடிகை. எல்லா
•பீலிங்ஸையும் எப்படி வெளிப்படுத்தறேன்னு பாரு’. சட் சட்டென மாறிய பாவனைகள்
அழகாக இருந்தது. நான் அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்டு, “எம்மேல கோபப்படாத.. என்னை விட்டுப் போயிடாத. உன்னைப் பிரியற மனசும் தெம்பும் எனக்கு இல்ல” என்றேன். இதைச்சொல்லும் போது நான் ஒரு குழந்தையாகி இருந்தேன்.

இருவரும் நனைந்தபடியே நடந்தோம்.

“எம் பேரை ஒரு தடவை சொல்லு”

“லிவ் உல்மன்”

“நீ என்னை எப்படிக் கூப்பிடுவே.?”

“லிவ்ன்னு கூப்பிடறேன். ப்ளீஸ் ஆல்வேஸ் லிவ் வித் மி லிவ்” என்று
சொல்லவும் கலகலவென சிரித்தாள். அவள் பற்களில் மழைத்துளி பட்டுத் தெறித்தது.

அந்தக் கணத்தில் கடவுளை நான் ஒரு ரசனைமிக்க குழந்தையாகப் பார்த்தேன்.
அவள் விரல்கள் மழையில் தாளமிட்டபடி வந்தன. மழைச்சத்தத்தையும் மீறி அதிலொரு
இசை தெறித்ததாய் உணர்ந்தேன்.

நாங்கள் எங்கள் தேனீர்க் கடையைத் தாண்டி நடந்து வந்துகொண்டிருந்தோம்

“ஒரு மழைத் தேனீர் அருந்தலாமா.?” எனக் கேட்டேன். அவள் அண்ணாந்து
வாய் திறந்து மழை குடித்தபடி “மழையையே அருந்தலாம்” என்றாள். இருள் கவிந்த
சாலையில் வாகனங்கள் வெளிச்சத்தோடு கடந்து சென்றன.

“லிவ்” என்றேன். ஆன்மாவிலிருந்து முதல் முறையாக அவளுக்கு வைத்த
பெயரை உச்சரித்தேன். ஆயிரம் வார்த்தைகளின் அழுத்தம் அந்த ஒற்றை அழைப்பில்
இருந்தது.

அவள் தலைகவிழ்த்து என்னைப் பார்த்தாள். நான் அவளிடம் எதுவும் சொல்ல
இயலாத ஒரு தடுமாற்றத்தோடு நின்றேன். முகத்திலிருந்த மழை நீரை வழித்து
துடைத்தாள். பறவைகள் சிறகு உலுப்புவது போல உடலை ஒரு முறை உலுக்கிக்
கொண்டாள். அவள் துப்பட்டாவிலிருந்து தண்ணீர் தெறித்தது.

நான் அவளையே பார்த்தபடி இருந்தேன். என் அருகில் வந்து நேருக்கு நேராய்
பார்த்தபடி “வாட் மேன்” என்றாள். நான் அமைதியாக இருந்தேன்.

“இப்ப நீ எதுவும் பேசமாட்டே. எனக்குத் தெரியும்”

என் காலுக்கு கீழே மழை நீர் ஒரு சிறு μடையாக μடிக்கொண்டிருந்தது.
அவள் சொல்வது சரி. இப்போது நான் எதுவும் பேச மாட்டேன். என்னுள் வார்த்தைகள் பாறையாய் உறைந்து போயிருந்தது. எங்கள் இருவருக்குமிடையே மழை பேசிக் கொண்டிருந்தது.

நான் நிற்பதா.? நடப்பதா.? என்கிற கேள்வியோடு இருந்தேன். ஈர நடுக்கம்
என் இதயம் வரை பரவி நின்றது. துளித்துளியாய் பெய்தது துக்க மழை.

என்னை ஊடுருவிக் கடக்கும் பார்வையோடு அவள் நின்றாள். அந்த பார்வை
எனக்குள்ளிருந்த பக்தியையும், பேரன்பையும் வருடித்தான் சென்றிருக்கும்.

வலது கையை என் தோளில் வைத்தபடி பேசத்துவங்கினாள்.

“உனக்கு தேவைப்பட்டது கடவுள் இல்ல. காதல். காதல் வேற.. கடவுள் வேற.
காதல் கடவுளாக முடியாது. கடவுள் காதலியாக முடியாது. ஒரு நல்ல பெண்ணா
தேடிக்கோ” என்றபடி நடந்தாள்.

என் தேவை கடவுள்தான். நான் காதலைக் கடந்து வந்தவன் என்பதை
அவளுக்கு உணர்த்த முடியவில்லை. அல்லது அவள் உணரவில்லை. இப்போதும் என் எதிரிலேயே இருக்கிறாள். குறுக்கும் நெடுக்குமாக என்னைக் கடந்தும் செல்கிறாள். அவள் முகத்தில் பழைய ஒளி இல்லை. புன்னகை இல்லை. அவளுள் எதையோ பறி கொடுத்த துயரம் உறைந்து கிடக்கிறது. என்னை நோக்கி நகர யத்தனிக்காத வைராக்கியம் அவளுள் நிரம்பித் தளும்புகிறது. இன்னும் அவள் எனக்கு கடவுளாக இருக்கிறாள். ஆயினும், நான் கடவுளற்ற மனிதனாக இருக்கிறேன்.

1 comment:

  1. எனக்கு மிகவும் பிடித்த கதையிது தாமிரா...

    ReplyDelete