Sunday, May 24, 2009

2010 யாருக்கு . ? காங்கிரஸின் புதிய வியூகம்


ஒவ்வொரு மாநில ஆட்சியையும் தங்கள் கட்டுக்குள் வைத்து குறுநில மன்னர் ஆட்சியாக நடத்துவதுதான் காங்கிரஸின் தேசிய அரசியல். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் ?” என்கிற கலைஞரின் வாக்குமூலமே அதற்கு சாட்சி.

அ.தி.மு.க, தி.மு.க தவிர்த்து ஒரு புதிய அடிமையை இந்தத் தேர்தலில் அடையாளம் கண்டிருக்கிறது காங்கிரஸ். அந்த அடிமை மரியாதைக்குரிய விஜயகாந்த். வரும் மாநில தேர்தலில் தே.மு.தி.க வோடு களமிறங்குவதற்கான ஆயத்தங்களை இப்போதே துவங்க இருக்கிறது காங்கிரஸ்.

2011 வரையில் காத்திருக்க சம்மதமில்லை காங்கிரசுக்கு. மத்திய மந்திரி சபையில் இத்தனை இருக்கைதான் என தி.மு.க விடம் கண்டிப்பு காட்டியது தேர்தலுக்கான பிள்ளையார் சுழிதான். தமிழக அரசியல்வாதிகளே வெளிச்சம் போட்டுக் காட்டாத குடும்ப அரசியலை காங்கிரஸ் வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரே குடும்பத்தில் மூவருக்கு மந்திரி பதவி தர இயலாது என மன்மோகன் சிங் சொன்னதாக ஊடகத் தகவலைப் பரப்பியது.

கடந்த ஆட்சியில் மந்திரி பதவி வகித்த டி.ஆர். பாலு, ஆ.ராசா ஆகியோருக்கு மந்திரி சபையில் திட்டவட்டமாக இடமில்லை காரணம் அவர்கள் துறையில் ஆற்றிய ‘தொண்டு’ என சொன்னதோடு புதியவர்களுக்கு அனுபவமின்மை காரணமாக கேபினட் அந்தஸ்து கொண்ட பதவி தரமுடியாது என்றது. இந்த மந்திரி சபை பேச்சு வார்த்தையில் தி.மு.க நிலைமை ஒரு ‘கைப்பிள்ளை’ நிலைக்கு ஆளானது.

ஆதரவைக் காட்டி காங்கிரஸை மிரட்டும் நிலை தி.மு.க விற்கு இல்லை. தங்கள் ஆதரவைக் காட்டி ஆட்சிக் கட்டிலை ஆட்டம் காண வைக்கும் நிலை காங்கிரஸிற்கு இருக்கிறது. இனி சத்தியமூர்த்தி பவன் அறிவாலயத்தை ஆட்டி வைக்கும். நிம்மதியாக ஆளும் நிலை இருக்காது. மக்களவை தேர்தலில் 18 இடங்களில் வென்றபோதும் இது தி.மு.க வின் மாபெரும் தோல்வி காலம்.

ஈழ விவகாரத்தில் கலைஞரின் நிலைப்பாடு, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விட்டது என்று உண்ணாவிரதத்தை முடித்த பின்னும் மக்கள் கொல்லப்பட்ட சோகம், பிரபாகரன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என உலகமே பதை பதைத்த போது இனத்திற்காக பயணப்படாத கலைஞர் மந்திரி பதவிக்காக டெல்லி பயணப்பட்டது என நடுநிலையாளர்கள் நெஞ்சில் நங்கூரம் பாய்ச்சி தி.மு.க தமிழின நம்பிக்கையை இழந்து விட்டது. இத்தனையையும் காங்கிரசுக்காக செய்த தி.மு.க , இன்று காங்கிரஸ் தலைமை ஏற்படுத்திய அவமானத்தில் குறுகி நிற்கிறது.

தி.மு.க வின் ஆதரவே காங்கிரஸிற்கு தேவைப்படாத போது வெளியிலிருந்து ஆதரவு என அறிவிக்க வேண்டிய கட்டாயம் தி.மு.க விற்கு ஏற்பட்டிருக்கிறது. இனி என்ன செய்யும் தி.மு.க செயற்குழு.?

1. காங்கிரஸ் கொடுக்கும் துறையை வாங்கிக் கொண்டு மௌனமாய் ஆட்சியில் பங்கேற்பது.


2. மந்திரி சபையில் இடம் வேண்டாம். காங்கிரஸ் ஆதரவு நிலையிலிருந்து மாறமாட்டோம் என அறிவுறுத்துவது.


3. காங்கிரசுக்கான எதிர் நிலை எடுப்பது.


4. ஈழ விவகாரத்தில் சரிந்த தி.மு.க தலைமையின் பெயரை சரிசெய்யும் வகையில் தமிழீழ ஆதரவு அல்லது ஈழத்தில் தமிழர் உரிமைக்கான சட்டத்திருத்தம் இவற்றிற்கான நேரடி யுத்தத்தை துவங்குவது. (இது காங்கிரஸ் ஆட்சியோடு நேரடியாக மோதுவதாக இருக்கும்).


5. தமிழக மந்திரி சபையில் காங்கிரசுக்கு பங்களிப்பதன் மூலம் மத்தியில் தங்கள் விரும்பும் துறையை பெற்றுக் கொள்வது.

இது எது குறித்தும் காங்கிரஸ் கவலை கொள்ளத் தயாராக இல்லை. இனி தமிழகத்தில் தி.மு.க வும் இல்லை அ.தி.மு.க வும் இல்லை. தங்கள் அடிமை தே.மு.தி.க தான் என்ற உறுதியை ‘கலைஞரின் ஆசி பெற்ற’ ப.சிதம்பரம் எடுத்திருப்பதால் தி.மு.க வுக்கு மூக்கு சொறியும் வேலையை கதர் சட்டைக்காரர்கள் செய்வார்கள். காங்கிரஸின் ஆதரவு நிலை எடுத்தால் கூட, தி.மு.க மீதான காங்கிரஸின் ஆளுமை தவிர்க்க முடியாதது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு நெஞ்சு நிமிர்த்தும் நம்பிக்கையும் தெம்பும் இப்போதுதான் காங்கிரஸிற்கு வந்திருக்கிறது. அதற்கான விளைவுகளை தி.மு.க எதிர்கொண்டே ஆக வேண்டும். தமிழகத்தின் பவர் மேக்கர்களாக உருவாக எண்ணும் தயாநிதி சகோதரர்கள் இந்த கூட்டணி பக்கம் சாயும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த கண்ணாம்பூச்சியாட்டம் தான் தமிழக அரசியல் மேடையின் அடுத்த காட்சி.

கலைஞர் என்ன செய்ய வேண்டும்.?

சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும். அதற்கு முன்னதாக தான் தமிழின தலைவர்தான் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழின மக்களுக்கு நிரூபிக்க வேண்டும்.

No comments:

Post a Comment