முன்குறிப்பு :
தர்ஹாக்களுக்கு சென்று பாத்திஹா ஓதுவது, க·பர்ஸ்தானுக்கு பூப்போடுவது, தர்ஹா விளக்குகளுக்கு எண்ணெய் வாங்கி ஊற்றுவது இவையெல்லாம் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகாத காலம் அது. ஊர்கள்தோறும் சந்தனக்கூடுகள் எடுத்து, பக்கீர்ஷாக்கள் தப்ஸ் அடித்து, ‘தீன் தீன் முகம்மதோ தீன்’ என்றபடி கன்னத்தில் கம்பி குத்தி வித்தை காட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அஸர் தொழுகைக்குப் பிறகு யாராவது ஒருவர் பழக்குலை வைத்தோ, அச்சுவெல்லம் வைத்தோ பாத்திஹா ஓதி நேர்ச்சை விளம்பினார்கள். ஒவ்வொரு பாத்திஹாவிற்கு பின்னாலும் ஏதோ ஒரு நேர்த்திக் கடன் இருந்தது. தர்ஹா வழிபாட்டில் தீவிரமான பெண்கள் ஆத்தங்கரையம்மா பள்ளிவாசலுக்கும், பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கும் க·பர்துணி வாங்கிப் போடுவதாக வேண்டிக்கொண்டார்கள்.
வசதியான ஜமாத்களின் கந்தூரி விழா கொடியேற்றத்திற்கு பொட்டல்புதூர் யானை வந்து போனது. கொடியில் ஊற்றும் தண்ணீரில் அரைடவுசர் இஸ்லாமிய சிறுவர்கள் குளித்தார்கள்.
“லா இல்லாஹா இல்லல்லா முகம்மதுர் ரசூலுல்லா”ங்கற கலிமாவுக்கு அர்த்தம் தெரியாம இருக்கியளேளா.. வணக்கத்துக்குரியவன் அல்லா ஒருத்தன்தான். க·பர்ல போய் முட்டிட்டு குனியாதியோ, கா·பீர் குட்டிகளா.” ன்னு பெரிய அசரத் மட்டும் எப்பவும் திட்டிட்டே இருப்பாரு.
மேலப்பாளையத்தில பால்கிதாப் போட்டுப் பாத்து பெயர் ராசி சொல்றதுக்குன்னே சில ஆலிம்ஷாக்கள் இருந்தாங்க. இதெல்லாம் மார்க்க சிந்தனைக்கு புறம்பானதுன்னு ஓதிப்படிச்ச உலமாக்கள் சொன்னாலும் அதை யாரு கணக்கிடல. குறிப்பா கிடைக்கடைவூட்டு கச்சாம்மா. அவளுக்கு தினம் ஒரு நேர்த்திக்கடன் இருந்தது. நெல்மாவு ரொட்டி, அரைக்காசம் இப்படி எதையாவது ஒண்ணைச் செஞ்சு சாயங்காலம் சாயங்காலம் விளம்பிட்டு இருந்தா.
இப்படியொரு நேர்த்திக்கடன்தான் என் வாழ்க்கையில மிகப்பெரிய நெருக்கடியைக் குடுத்துச்சு. நா பொறக்கறதுக்கு முன்னாலேயே அப்படியொரு நேமிசத்தை நேந்துக்கிட்டவ எங்க அத்தம்மா. அது என்னை பாதிச்சது என்னோட பதிமூணாவது வயசுல. அப்ப நாங்க மூலக்கரைப்பட்டியில குடியிருந்தோம்.
கதவு எண் 17, மேலப்பள்ளிவாசல் தெரு,
மூலக்கரைப்பட்டி,
ஹிஜ்ரி 1901. துல்ஹஜ் மாதம்.
(கி.பி. 1980, மார்கழி)
***
அத்தம்மா கொஞ்சம் பழைய மனுஷி. அவளுக்கு எங்க அத்தா தம்புகாதர் மைதீன் மேல கொள்ளைப்பிரியம். பெரியவன் சாவுலுக்கு பொறந்ததெல்லாம் ஆம்பளப்புள்ளைய. நடுவுலவன் பீர்க்கண்ணுக்கும் ஆம்பளப்புள்ள இருக்கு. தம்புவுக்கு மட்டும் பொறந்த ரெண்டும் பொட்டையாப்போச்சேன்னு கைசேதப்பட்டு முத்துப்பேட்டையில இருக்க சேகுதாவூது ஒலியுல்லாவுக்கு நேந்துகிட்டா. “எம்புள்ள காதருக்கு ஆம்பளப்புள்ள பொறந்தா உங்க எடத்துக்கு வந்து புடிபணம் போட்டு உங்க பேரை வேக்கேம்”னுட்டு நேத்திக்கடம்.
அப்ப அத்தாவுக்கு பம்பாயில வேலை. குடும்பமே அங்கதான் தாராவியில குடியிருந்துச்சு. அத்தம்மா நேந்துகிட்ட வருசமே நான் பொறந்துட்டேன். சேக்தாவூது ஒலியுல்லா அருளாலதான் நான் பொறந்தேன்னு நம்பினா அத்தம்மா. நாப்பது கழிஞ்சு புள்ளைக்கு பேர் வைக்கலாம்னுட்டு முடிவு பண்ணினப்போ, “ஏல எத்தா தம்பு, ஒரு நேத்திகடம் இருக்கு. புள்ளைக்கு முத்துப்பேட்டை தர்ஹாவுல புடிபணம் போட்டு அவுஹ பேரை வைக்கம்னுட்டு நேந்திருக்கேன்”னா. பம்பாய்க்கும் முத்துப்பேட்டைக்கும் இருக்கற தூரம், போய் வர ஆகற செலவு எல்லாமா சேந்து பேர் வைக்கறத தள்ளிப் போட்டிருச்சு.
அத்தா கையில அப்ப துட்டு ஓட்டம் கம்மி. கமலா மில்லுல ராத்பாலி, தீன்பாலின்னு தினம் ரெண்டு ஷிப்டு வேலை செஞ்சது போக, ஒரு ஷிப்ட் வேலை தினப்படி கிடைக்கிறதே கஷ்டமாயிருச்சு. நாம பொறந்த ராசி அப்படி பொங்க வச்சுது. புள்ள வரத்துக்கு அருள் பாலிச்ச ஒலியுல்லா, புள்ள பாலுக்கு பொறுப்பேத்துக்கல..! அடுத்த அஞ்சு வருசமும் கஷ்டப்பாடுதான். இப்படியே இருந்தாக்க குடிகஞ்சிக்கு சிக்கலாப் போகுமுன்னு நெனச்சு, குடும்பத்தை ஊருக்கு அனுப்பிட்டு சவுதி அரேபியா போறதுன்னு முடிவு பண்ணினாஹ அத்தா. அந்த வருஷம் உம்மும்மா வேற பொறந்துட்டா. மூணு குமராயிப் போச்சு.. வெளிநாடு போனாத்தான் சரியா வரும்னு எல்லாரும் நம்பினாவ.
இப்படியாத்தான் மூலக்கரைப்பட்டிக்கு வந்து சேந்தோம். ஊருக்கு வந்த நாலாவது நாளு பீர்க்கண்ணு பெரியத்தா வூட்ல ஜாகீருக்கும், நாசருக்கும் சுன்னத் கல்யாணம் வச்சிருந்தாஹ.
“தம்பு.. உம்புள்ளைக்கும் சுன்னத்தை வச்சுரலாமடா”ன்னார் பெரியத்தா.
“இல்லண்ணே.. அம்மா ஒரு நேத்திகடம் வச்சிருக்கு. அத முடிச்சுட்டுதான் சுன்னத்து ‘இன்ஷா அல்லா’ இந்த சபர் போயிட்டு வந்து பண்ணனும்”
அத்தா சொன்ன அந்த ‘இன்ஷா அல்லா’ அஞ்சு தடவை தொடந்திச்சு. ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை அத்தா ஊருக்கு வரும். பள்ளிக்கூட லீவு, அத்தாவோட லீவு, கையில இருக்க பணம் இதையெல்லாம் கணக்குப் போட்டு ‘இன்ஷா அல்லா’ அடுத்த தடவை பாப்போம்ன்னு முடிவு கட்டிருவாங்க.
முறையா பேர் வைக்கலையே தவிர, பள்ளிகூடத்துல சேக்தாவூதுங்கற பேர்லதான் என்னையே சேந்திருந்தாவ. தமிழ் பண்டிட் ராமசாமி சார் பையன் நாராயணன், கருவாயன் ராமமூர்த்தி இவனுவளுக்கெல்லாம் எனக்கு பேர் வைக்கலங்கற ரகசியம் தெரியும். எப்பயாவது ஒரு சின்ன தாவா வந்தாக்கூட “போடா பேரில்லாத பயலே”ன்னு கிண்டல் பண்ணுவானுவ.
“அத்தம்மா உள்ளூர் லெப்பையக் கூப்பிட்டு எனக்கு பேர் வச்சிரு. எல்லா பயலுவளும் கேலி பண்ணுதானுவ”ன்னு அத்தம்மாகிட்ட வந்து சொல்வேன்.
“அவுலியாக்களோட கோவத்துக்கு ஆளாவக்கூடாது மக்களே. இந்த தடவை உங்கப்பன் வரட்டும். உன்னைக் கூட்டிட்டுப்போய் பேர் வைக்கச்சொல்லி கண்டிசனா சொல்லிப்புடறேன்”
“பேரும் வச்சு சுன்னத்தும் வுட்டுரணும். பள்ளிவாசல் போனா, அலியார் மச்சான் கேலி பேசுதாரு. ‘வே மாப்பிள்ள, உம்ம தொழுகை சேரும். உங்க அத்தாக்கிட்ட சொல்லி உம்ம குஞ்சானை அறுக்கச் சொல்லும்’காரு..”
“அவம் கிடக்காம் கட்டப்பய”ன்னு சொல்லி அத்தம்மா சிரிச்சா. அத்தம்ம சிரிச்சா வெத்தலை வாசனையடிக்கும். யார்கிட்டயாவது பாடுபேசினா வெத்தல தட்டிட்டேதான் பேசுவா. பேச்சும் தட்டுக்கல் சத்தமும் ஒண்ணா சேந்து வாரது அழகா இருக்கும்.
அன்னைக்கு அஸர் தொழப் போனப்போ அலியார் மச்சானைப் பாத்து “இந்த அரையாண்டு லீவுல எனக்கு சுன்னத்து கல்யாணம்”னு பெருமையாச் சொன்னேன்.
“அப்படியா மாப்ள. அறுத்து தூரப்போட்டுரக்கூடாதுவே. மச்சான் கையில குடுக்கணும். மச்சான் மோதிரமா போட்டுக்கிருவேன்”னாரு. எனக்கு வெக்கமா போச்சு.
அந்த தடவை அத்தா வாரதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னால பெரியக்கா நசீமா வயசுக்கு வந்துட்டா. அத்தா வந்ததும் வராததுமா அத்தம்மா புடிச்ச புடியா “இந்த வருசம் புள்ளைக்கு சுன்னத்து கல்யாணம் பண்ணி வச்சுப் போடணும்”ன்னா.
“கல்யாண வயசுல புள்ளய வளத்துட்டு அவனை கா·பீரா வுட்டுருக்கியே.. நல்லாவா இருக்கு.? புள்ள என்ன படிக்காம் தெரியுமா.? எட்டாங்கிளாஸ¥..” அத்தம்மா பேச்சு ரொம்பக் கோவமா இருந்திச்சு. எனக்கு ஆச்சர்யம் தாங்கல.
அத்தம்மாவுக்கு கோவம் வந்தா தொடைக்கறியை நிமிண்டிட்டேதான் பேசுவா. அதிகமா நிமிண்டினது ரெண்டாவது அக்கா மெஹரைத்தான். ஆனா அத்தாக்கிட்ட அப்படி பண்ணல. அத்தாவும் “இந்த லீவுல பண்ணிரலாம்மா”ன்னு சமாதானமா சொன்னாஹ.
அன்னா இன்னான்னு ஒரு வெள்ளிக்கிழமை கிளம்பி நாகூர் வந்து சேந்தோம். நாகூர் தர்ஹாவுல ஒரு பாத்தியா ஓதிட்டு அங்கருந்து முத்துப்பேட்டைக்கும் போகலாம்னு யோசனை. நாகூர் தர்ஹாவுல இருந்த அசரத்மாரெல்லாம் சொள்ளமாடன் கோயில் பூசாரி கணக்கா இருந்தாஹ. ஒருத்தர் மயிலுத் தோகைய வச்சு ஓதிப்பாத்திட்டிருந்தாரு. ஒருத்தர் தண்ணிய ஓதி மூஞ்சியில அடிச்சுட்டு இருந்தாரு. ரஸ்தாகோவில்ல ஒரு சாமியார் வேப்பிலை வச்சு இப்படித்தான் மந்திரிச்சுட்டு இருப்பாரு.
எனக்கென்னவோ சந்தனக்கூடு தூக்கறதும் சப்பரம் தூக்கறதும் ஒண்ணு மாதிரி தெரிஞ்சுது. அதே மாதிரி மயில் தோகையில ஓதிப்பாக்கறதும், வேப்பிலையில மந்திரிக்கறதும் கூட ஒண்ணுதான். இதை நான் அத்தாகிட்ட கேட்டேன்.
“அப்படில்லாம் பேசக்கூடாது”ன்னு ஒத்தை வார்த்தையில முடிச்சுக்கிட்டாஹ. அதுக்குமேல பேச ஏலாது. அத்தாவுக்கு கோவம் வந்தா ரப்பர் செருப்பை கழட்டி சப்பு சப்புன்னு அடிச்சுப் போடும். நா சத்தங்காட்டாம வந்தேன். ஆனா எனக்குள்ள நிறைய கேள்வி இருந்தது.
ஆத்தங்கரையம்மாளும், இசக்கியம்மாளும் ஒண்ணு. முகைதீன் ஆண்டவுஹளும் சொடலை மாடனும் ஒண்ணு. நாம சந்தனக்கூட்டுக்கு மக்காநாளு வெளக்கு ஏத்துறோம். அவுஹ கார்த்திகைக்கு தீபம் போடுதாஹ. இப்படியே யோசனை பண்ணிக்கிட்டே முத்துப் பேட்டைக்கு வந்து சேந்தோம்.
இந்தியாவுலயே நீளமான க·பர்ஸ்தான் சேகுதாவூது ஒலியுல்லா க·பர்ஸ்தான் தான்னு அங்க உள்ள அசரத்து சொன்னாரு. நாப்பது அடி நீளம். ஒருவேளை எனக்கும் அவுஹ பேர் வச்சா, நானும் அவுஹ உசரத்துக்கு வளாருவேன்னு எனக்குத் தோணுச்சு.
அத்தா என் கை நிறைய காசு கொடுத்தாஹ. கைகொள்ற அளவு காசை எடுத்து தர்ஹா வாசல்ல வச்சேன். அசரத்து ஓத ஆரம்பிச்சாரு. முணுமுணுன்னு அவரு ஓதினது ஒண்ணும் புரியல. ஓதி முடிச்சு என் காதுல மூணு தடவை சேக்தாவூது.. சேக்தாவூதுன்னு பேரைச் சொன்னாரு. அசரத்து வாயெல்லாம் ஒரே பீடி நாத்தம். எனக்கு குமட்டிட்டு வந்தது. அதையும் மீறி சிரிப்பு வந்தது. பச்சப்புள்ளைக்கு பேர் சொல்லுத மாதிரி காதுல சொல்லுதாரேன்னு நெனைச்சேன்.
அவரு என்ன பண்ணுவாரு பாவம். பதிமூணு வயசுல ஒரு பயலைக் கூட்டிட்டு வந்து இவனுக்கு பேர் வைங்கன்னு ஆரும் சொல்லி இருக்க மாட்டாஹ. எந்த வயசா இருந்தாலும் பேர் வைக்கறதுக்கு காதுல பேர் சொல்ற முறை மட்டும்தானே இருக்கு. நல்ல வேளை.. பேர் வச்சு தொட்டில்ல தூக்கிப் போடல.! இதை நெனச்சு எனக்கு இன்னும் சிரிப்பாணி அத்துக்கிட்டுப் போச்சு.
அத்தா கண்ணை உருட்டி ஒரு அதட்டுப் போட்டதும் வாயப்பொத்திக்கிட்டு சிரிப்பாணிய அடக்கிக்கிட்டேன். இப்படியா அத்தம்மா நேத்திக்கடனை முடிச்சுட்டு ஊர்வந்து சேந்தோம்.
அன்னைக்குச் சாயங்காலமே எஞ்சோக்காளி பயலுவளப் பாத்து, “எனக்கு பேர் வச்சாச்சுடே. இனிமே கேலி பண்ணாதிய”ன்னேன். மறுநா ஸ்கூலுக்குப் போனப்போ கணக்கு டீச்சர் கோமதி “என்னடே.. ரெண்டு நாளா ஸ்கூலுக்கு வரலே.?” ன்னு கேட்டாங்க.
“எனக்குப் பேர் வக்கப் போனோம் டீச்சர்.”
அப்புட்டுதான்.. நா இதைச் சொன்னதும் கிளாஸ்ல எல்லாரும் சத்தம்போட்டு சிரிச்சாங்க. சாந்தி, சீதா, ரஹ்மத் எல்லாம் டெஸ்க்ல தலையச் சாச்சி கவுந்து கிடந்து சிரிச்சாளுவ. எனக்கு வெக்கமா போச்சு. கோமதி டீச்சரும் சிரிச்சுக்கிட்டே “உக்காருடா”ன்னாங்க.
கிளாஸ் முடியற வரைக்கும் எல்லார் முகத்துலயும் ஒரு குறுஞ்சிரிப்பு இருந்துட்டே இருந்துது. எல்லாரும் என்னையவே குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தாங்க. பேரு வச்சதுக்கே இந்த பார்வை பாக்காஹளே.. இனி சுன்னத் கல்யாணம் பத்தி தெரிஞ்சா என்னத்துக்கு ஆவும்னு நெனச்சேன்.
அநேகமா ஐஸ்கூலுக்கு போனதுக்குப் பின்னால சுன்னத் விடற பய நா ஒருத்தனாத்தான் இருப்பேன். சுன்னத்து விட்டதுக்குப் பின்னால லுங்கிய தூக்கிப் பிடிச்சுட்டே நடக்கறத இவளுவ பாத்தாளுவன்னா ஆயுசுக்கும் சிரிக்க வேண்டிய சிரிப்பை மொத்தமா சிரிப்பாளுவளே..! கா·பீர் குட்டியா இருந்தாலும் பரவால்ல. பேசாம சுன்னத்தே வேணாம்னு சொல்லிப் போடணும்னு நெனச்சுட்டுதான் வீட்டுக்கு வந்தேன்.
அத்தா முத்தத்துல ஒரு மடக்குசேர் போட்டு உக்காந்து இருந்தாஹ. அத்தம்மா, அம்மா, பீர்க்கண்ணு, பெரியத்தா எல்லாரும் திண்ணையில இருந்தாஹ. ஜப்பார் அசரத்து வேற வந்திருந்தாரு. சுன்னத்து பத்தி பேசறதுக்குதான் எல்லாரும் கூடி இருக்காவன்னு எனக்குப் புரிஞ்சுபோச்சு. ஜப்பார் அசரத்து ஒரு பீடியைப் பத்த வச்சாரு. அசரத்துமார் எல்லாரும் பீடி குடிக்கறாங்க. ஒருவேளை.. பீடி குடிக்கலன்னா பள்ளிவாசல்ல அசரத்து வேலை குடுக்க மாட்டாவளோ என்னமோ..
“வே மைனர்.. உம்ம சுன்னத் பத்திதான் பேசிக்கிட்டிருக்கோம்”ன்னாரு அசரத்து.
மைனரான பின்னால என்ன சுன்னத் வேண்டியதிருக்கு.?ன்னு நெனச்சிக்கிட்டேன். ஸ்கூல் பேக்கை கதவோரமா வச்சிட்டு, அவுஹ என்ன பேசுதாஹன்னு கேக்க ஆரம்பிச்சேன்.
“எனக்கிருக்கிறது ஒரு புள்ள. அவன் சுன்னத்தை விசேசமா செய்யணும். பைத்து சொல்லி மாப்பிள்ளை அழைப்பெல்லாம் வச்சு பண்ணனும். என்ன செலவானாலும் பரவாயில்ல. ஊர் சாப்பாடு வைக்கணும்.”
அத்தா பேச்சை யாரும் மறுத்து பேசல. வெளிநாட்ல இருக்கும்போதே திட்டம் போட்டிருப்பாஹ போல. எல்லாத்தையும் கட்டு கட்டுன்னு பேசினாஹ. வந்த அன்னைக்கே ஒரு பாக்கெட் பாதாம் பருப்பை எடுத்து தனியா வச்சாஹ. சுன்னத் வுடற புள்ளைக்கு ஊட்டம் சேக்க இருக்கட்டும்னுட்டு. அத்தாகிட்ட சுன்னத்து வேணாம்னு சொன்னா ரப்பர் செருப்பு பிஞ்சு போவும்.
அன்னைக்கு ராத்திரி முச்சூடும் எனக்கு தூக்கமே வரல். அதிகாலை நேரத்துல என்னை மறந்து தூங்கயில ஒரு கெட்ட கனவு. நூறுபேரு சுத்தி நிக்க நடுவுல நா அம்மணமா கிடக்க மாதிரி கனவு. பதறி எந்திரிச்சேன். பக்கத்தில அத்தம்மா படுத்திருந்தா. ‘ஒரு நேத்திக்கடம் வச்சு எம்மானத்துக்கு வெல வச்சுட்டியே’ன்னு நெனச்சுக்கிட்டே அவளை எழுப்பினேன்.
“அத்தம்மா.. எனக்கு சுன்னத்து கல்யாணம் வேணாம்.”
“அட.. இன்னா இலைஹி.? என்ன மக்கா சொல்லுதே.? துலுக்கக்குடியில பொறந்துட்டு சுன்னத்து வேணாம்னா எப்படி.? உங்கப்பன் காதில வுழுந்தா பொலி போட்ருவாம். சத்தங்காட்டாம இரு”
அன்னைக்கு மொட்டைக்கிணத்துக்கு தண்ணி எடுக்க வந்த சம்சு மயினி, “என்னவே.. கல்யாண மாப்ள..”ன்னா. நா குடுகுடுன்னு ஓடி வந்துட்டேன். எந்தெருவில இருக்கற படிக்காத பொம்பளைங்கல்லாம் வெளியூர்ல இருக்கற புருஷன்மாருக்கு கடிதம் எழுத என்னைத்தான் கூப்பிடுவாஹ. ஒவ்வொருத்தரும் கேலி செய்வாஹளேன்னு நா வெளிய தெருவுலயே போவல.
மறுநாள் ஸ்கூல்ல இண்ட்ரவல் விட்டப்போ, ரஹமத் என்னைப் பாத்துக்கிட்டே சாந்திக்கிட்டயும் சீதாகிட்டயும் என்னமோ சொன்னா. எனக்குக் கோவமாயிருச்சு. “என்ன.. என்னைப் பத்தி என்ன சொல்ற.?”ன்னு கோவமா கேட்டேன்.
சாந்தி சிரிச்சுக்கிட்டே “கங்கராஜூலேஷன்”னா.
‘ஆஹா. ஆரம்பிச்சுட்டாளுவ. இனி அடங்கமாட்டாளுஹ’. விருவிருன்னு வீட்டுக்கு வந்தா, அத்தாவும் அம்மாவும் வெளியூர்காரவுகளை அழைக்கறதுக்காக கிளம்பிட்டு இருந்தாஹ. போறபோக்குல அத்தா என்னைய பாத்து “உள்ளூர்க்காரங்களை அழைக்கறதுக்கு பெரியத்தா போவுது. நீ அவுஹ கூடப் போய் ஊர் அழைச்சுட்டு வந்துரு”ன்னாஹ. நா மண்டைய மண்டைய ஆட்டினேன்.
பெரியத்தா கையப் புடிச்சிக்கிட்டு வூடு வூடா ஏறி எறங்கினது மானமா இருந்திச்சு. விறவுக்கடை ராவுத்தர் வீட்டுக்குப் போறப்போ, பெரியத்தா கையப்புடிச்சு “இந்த வூட்டை மட்டும் சத்தங்காட்ட வேணாம்”னேன். “ஏன்?”னு கேட்டாஹ பெரியத்தா. “அந்த வூட்டுப் புள்ளை ரஹ்மத் எங்கூட படிக்குது”ன்னு சொன்னேன்.
“அது எப்டிடே ஒரு வூட்டை மட்டும் விலக்கி வைக்கறது.?”ன்னு கேட்டுக்கிட்டே உள்ள போனாஹ. “கண்டிப்பா வந்துரணும்மா. குடும்பத்தோட வந்திரணும்மா”ன்னு அழுத்தி அழுத்தி பெரியத்தா சொல்லவும் சரின்னு தலையாட்டினாவ ரஹ்மத்.
மறுநா பள்ளிக்கூடத்துல கருவாயன் ராமமூர்த்தி, தலைக்கு நாலணான்னு துட்டு வசூல் பண்ணிட்டு இருந்தான். எல்லாருமா சேந்து எனக்கு பிரசண்டேஷன் குடுக்க முடிவு பண்ணி இருந்தானுஹ. இதில பொட்டப்புள்ளையளும் அவங்க பங்குக்கு காசை குடுத்துட்டாஹ. வேற வழியே இல்லாம எல்லாரையும் “சுன்னத் கல்யாணத்துக்கு வந்துருங்க”ன்னு சொல்ல வேண்டியதாப் போச்சு. கேர்ள்ஸ் கூட்டத்துல இருந்த கல்லத்தி செல்வி, “பாய்ஸ்.. சுன்னத் கல்யாணம்ன்னா என்ன.?”ன்னு கேட்டா. என்னன்னு சொல்றது.!
எங்க வூட்ல முத விசேஷம்கிறதால சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் முத நாளே வந்து சேந்துட்டாஹ. வீட்ல கல்யாணக்களை கட்டிருச்சு. அலியார் மச்சான் தோட்டத்திலதான் வாழை எலைக்கு சொல்லியிருந்துச்சு. எலைக்கட்டு கொண்டு வந்த காஜாப்பய ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.
அவன் சொன்ன சேதி இந்தக் கதையில எழுத முடியாத விசயம். எம்புட்டோ மானப்பட்டாச்சு. அதையும் சொல்லிருதேன்.
“மாமா, சின்ன வயசுலயே சுன்னத்து பண்ணிருதாங்களே.. அது ஏன் தெரியுமா.? விவரம் தெரியாத வயசுல பண்ணினாதான் சிக்கல் இல்லாம இருக்கும். பதிமூணு வயசுல பிறத்தியார் கைப்பட்டா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாரு. வெட்டறப்ப முன்னபின்ன ஆயிரும். அப்படி மட்டும் நடந்துச்சுன்னு வையி. அரைகுறையா வஸ்தாரு அறுத்து வுட்டுருவாரு.” உசிருக்கு உலை வைக்கற விஷயத்தை சிரிச்சுகிட்டே சொல்லிட்டுப் போயிட்டான்.
எனக்கு கிடை கொள்ளல. இஷா தொழுகைக்குப் பின்னால ராத்திரி ஒரு ஒம்போது மணி இருக்கும். சுன்னத்து விடற புகாரியப்பா வந்து சேந்தாரு. ஒரு சுருக்குப் பைய நூல்ல சுத்தி வச்சிருந்தாரு. அந்த சுருக்குப் பைக்குள்ளதான் என் எதிர்காலத்தை தீர்மானம் பண்ற ஆயுதம் இருந்தது. படுக்கப் போறதுக்கு முந்தி அவரு பையத் தொறந்து கத்தியை உரைக்கல்ல தீட்டி வச்சாரு. நா குர்பான் கிடா மாதிரி திருகதிருக முழிச்சுட்டு இருந்தேன். என் பயத்தை யார்கிட்டயும் சொல்ல முடியல.
காலைல சுப்ஷ¥ தொழுதிட்டு வந்ததும் அம்மா வெந்நீ வச்சு குளிப்பாட்டினா. தொழுகைப் பாயிலயே அல்லாட்ட துஆ கேட்டேன். அலியார் மச்சான் வூட்டு காஜா சொன்ன மாதிரி எதுவும் ஆயிரக்கூடாது.
சுன்னத்து மாப்பிள்ளைக்க உடுப்பையெல்லாம் எடுத்து மாட்டிவுட்டாஹ. மாலையும் கழுத்துமா என்னைப் பாத்ததும் அம்மா கண்ணு கலங்குனா. அத்தம்மா உச்சி மோந்தா. நா உள்ளுக்குள்ள கண்ணீர் சிந்துறது ஆருக்கும் தெரியல.
எனக்கு மூணு பிரச்சனை இருந்தது.
1. கூட படிக்கிற புள்ளைய எக்குத்தப்பா சுன்னத் விடறத பாத்துரக்கூடாது.
2. காஜா சொன்ன மாதிரி நடந்துரக்கூடாது.
3. சுன்னத் விட்டு முடிஞ்சதும் அம்மணக்குண்டியா என்னை தூக்கிட்டு உள்ளே போகக்கூடாது.
இதை நா யோசிச்சிட்டு இருக்கறப்போ விறவிக்கடைக்காரர் குடும்பம் வீட்டுக்குள்ள
வந்துது. போறபோக்குல ரஹ்மத்து, “சின்ன உடுப்பு ரொம்ப நல்லா இருக்கு”ன்னு சொன்னா.
“வேற யாரும் வரலியா.?”
“இல்ல.. கேர்ள்ஸ் யாரும் வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க..” ரஹ்மத் இதைச்
சொன்னதும் எனக்கு அப்பாடான்னு இருந்தது. ஆனா ரஹ்மத் ஒருத்தி போதும். அவ போன
பெருநாளைக்கு முருகன் தியேட்டர்ல போட்ட ‘எங்கள் தங்கம்’ படத்தைப் பாத்துட்டு அப்படியே ஒரு சீன் மாறாம கதை சொன்னவ.
“யா நபி ஸலாம் அலைக்கும்’னு அசரத்து பைத்து சொல்ல ஆரம்பிச்சாரு. அப்படியே மாப்பிள்ளை ஊர்வலம் அழைச்சுட்டுப் போனாஹ. ஒவ்வொரு வீட்டு முன்னாலயும் நிறுத்தி பால்பழம், கலர் எல்லாம் குடுத்தாஹ. கீழப் பள்ளிவாசல்கிட்ட போனதும் மாப்பிள்ளை தோழனா காஜா வந்து கைகோத்துக்கிட்டான்.
அவன் கைய கோத்து உரசி உரசி நடந்தப்போ, எனக்கு அவம் சொன்னது உண்மையாயிருமோன்னு பயம் வந்திச்சு. ஊர்வலம் முடிஞ்சு திரும்ப ஒரு மணி நேரமாயிருச்சு. அதுக்குள்ள முத்தத்துல ஜமுக்காளம் விரிச்சு செம்புப்பானைய கவுத்துப் போட்டு வச்சிருந்தாஹ.
நாலு பக்கமும் இருந்த திண்ணை உசரமான திண்ணை. ஆணும் பெண்ணுமா திண்ணைமேல கூடி நின்னாஹ. மோடி மஸ்தான் வித்தையை வேடிக்கை பாக்கற மாதிரியே நின்னாஹ. முத்தவல்லி காஜா மாமா “பொட்டப் புள்ளைங்க எல்லாம் வீட்டுக்குள்ள போங்க”ன்னாங்க. எனக்கு ஆசுவாசமா இருந்தது. எல்லாப் புள்ளயளும் உள்ள போயிருச்சு.
ஒரு துண்டைக் கட்டிவிட்டு ட்ரஸ் எல்லாத்தையும் கழட்டிட்டாங்க. நல்லவேளை.. அம்மணமா விடலன்னு நெனச்சுக்கிட்டேன். சுத்தி வேட்டியை மறைப்பா புடிச்சுக்கிட்டு என்னை செம்புபானைக்கிட்ட கொண்டு போனாங்க. “வே மாப்ள.. துண்டை அவுரும்வே”ன்னு சொல்லிட்டே அலியார் மச்சான் துண்டை அவுத்து செம்புப்பானை மேல உக்கார வச்சாரு. கசாப்புக்கடை அலியார் மாமா கையையும் காலையும் சேத்துப் புடிச்சிக்கிட்டாரு. கூட்டத்தில எல்லாரும் தீன் தீன் முகம்மதோ தீன் சொல்றதுக்கு ரெடியானாங்க. என்னால உடம்பை ஒரு பொட்டு அசைக்க முடியல. வஸ்தார் புகாரியப்பா இடுக்கியை எடுத்து அதில மாட்டினாரு.
என் தலை திரும்பி இருந்த பக்கத்தில சின்னக் கண்ணு ராவுத்தர், அசனார் ராவுத்தர், மைங்கண் அப்பா எல்லாரும் நின்னுக்கிட்டு இருந்தாங்க. நெல குத்தின பார்வையா அவுஹளையே பாத்துட்டு இருந்தேன். வஸ்தாது கத்தியை எடுக்க சத்தம் கேட்டிச்சு. “கூடி நின்னு வேடிக்கை பாக்காதிய. சட்டுப் புட்டுன்னு அறுத்துப் போடுங்க”ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன்.
சின்னக்கண்ணு ராவுத்தருக்கும் அசனார் ராவுத்தருக்கும் எடையில சரசரன்னு பூந்து பொறப்பட்டு வந்து எட்டிப் பாத்தா மம்மாத்து. அவ எட்டிப்பாக்கவும் தோல்கடை ராவுத்தர் தொடையில அடிக்கவும், வஸ்தாது அறுக்கவும் சரியா இருந்துச்சு. எறும்பு கடிச்சாப்ல ஒரு வலி. நான் கால் உதறுனதுல ரத்தம் சொட்ட வச்சிருந்த சாம்பல் தட்டு சிதறுச்சு. வஸ்தாது மருந்து வச்சு கட்டினாரு. அலியார் மச்சான் கையில இருந்த துண்டைப் பிடுங்கி இடுப்புல சுத்திக்கிட்டேன். யாரோ என்னைத் தூக்க வந்தாஹ. தள்ளிவுட்டுட்டு நானே நடந்து உள்ள போனேன்.
கண்ணு ரெண்டுலயும் மாலை மாலையா கண்ணீர் வழிஞ்சுது. எல்லாரும் வலி தாங்க முடியாம அழுறேன்னு நெனச்சாக. மம்மாத்து சனியன் எட்டிப் பாத்ததை யாரும் கவனிக்கல. அதனாலதான் நான் அழுவுறேன்னு ஆருக்கும் தெரியல.
இப்படியா நடந்து முடிஞ்சது அந்த பதிமூணு வயசு சுன்னத்து. இப்பயெல்லாம் அனக்கமில்லாம ஆஸ்பத்திரியில கொண்டுபோய் சுன்னத்து வுட்டுட்டு வந்திருதாஹ. இந்த டாக்டர்மாரு இந்த ஆபரேஷனை அப்பவே கத்து இருந்தாஹன்னா இப்படி மானப்பட்டிருக்க
வேண்டியது இல்ல.
இப்ப என்னையப் பாக்கறப்பல்லாம் மம்மாத்து “என்ன மச்சான்.. நல்லா இருக்கியளா.?”ன்னு கேக்கறா. மனசுக்குள்ள அவ எட்டிப் பாத்ததுதான் வந்து தொலையுது.
Very Nice.. I laugh too much...
ReplyDeleteநல்ல விரு விரு நடை !!!
ReplyDeleteஇந்த சிறுகதையை இங்கே இணைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html
மேலும்
http://www.tamilmanam.net
http://www.tamilish.com
போன்ற திரட்டிகளில் சேரவும் நிறைய வாசகர்களை பெறலாம்
நன்றி
அருமையான கதை. மம்மாத்து யார் என்டு சொல்லவில்லை.. தீடிரெண்டு வந்து போய்ட்டர்
ReplyDelete